வன்னியில் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்: இன்று 124-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை; 254 பேர் காயம்

வன்னிப்பெரு நிலப்பரப்பில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 124-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 254-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் மற்றும் பொக்கணை பகுதிகளை நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் அகோர ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோர்ட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 124-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 254 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த நிலையில் கொண்டு வரப்பட்ட 254 பேரில் 45 பேர் மாத்தளன் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 15 பேர் சிறுவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களின் 26 உடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடுமையான மழை பெய்து வருவதால் எறிகணைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் உடலங்களை அப்புறப்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் காயப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுவர முடியாத நிலையும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளையில் இம்மாதம் முதலாம் நாளில் இருந்து ஏழாம் நாள் வரை காயமடைந்த நிலையில் 700 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களில் 137 பேர் சிறுவர்கள். இவர்களில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் கடந்த 10 நாட்களில் நடைபெற்ற எறிகணைத் தாக்குதல்களில் 50-க்கும் அதிகமான சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 200-க்கும் அதிகமான சிறுவர்கள் காயமடைந்துள்ளனர் என புதுமாத்தளன் மருத்துவமனை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Comments