13 சதுர கி.மீ. பரப்பளவில் 150,000 மக்கள்; வாராந்தம் 300 பேர் படுகொலை: 'த ரைம்ஸ்' நாளிதழ்

வன்னி நிலப்பரப்பில் 13 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் 150,000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர்; வாராந்தம் 300 பேர் படுகொலை செய்யப்படுகின்றனர்; மருந்து, உணவு, குடிநீர் இல்லாமல் மக்கள் உயிரிழக்கின்றனர் என்று லண்டனில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' இதழுக்காக எழுதிய கட்டுரையில் ஊடகவியலாளர் மாரீ கொல்வின் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அவையவங்களை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்த மக்களுடன் இலங்கையின் வடக்கு - கிழக்கு கடற்கரையில் காத்திருக்கின்றனர் என தொண்டர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில் காத்திருக்கும் மக்கள் எறிகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றனர். அவர்கள் பதுங்குகுழிகளில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர். 26 வருடப் போரில் தற்போது அதிக பாதிப்புக்களை சந்தித்து வரும் மக்கள் இவர்கள்.

கடந்த வாரம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் காயமடைந்த 460 மக்களை மருத்துவமனைகளுக்கு எடுத்துச் சென்றிருந்தது. உள்ளூர் மீனவர்களின் துணையுடன் மரத்திலான டிங்கி படகுகளில் கொண்டு செல்லப்பட்ட இந்த மக்கள் 'கிறீன் ஓசின்' கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அதிகளவான மக்கள் காயமடைகின்ற போதும் எடுத்துச் செல்லப்படும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கைகள் மிகவும் குறைவானது எனவே நாம் படுகாயமடைந்தவர்களையே அகற்றி வருகின்றோம்.

ஏனைய காயமடைந்த மக்களை அங்கேயே விட்டுள்ளோம். இது வேதனையானது என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதி சோபி றோமனின்ஸ் தெரிவித்துள்ளார்.

படை நடவடிக்கை காரணமாக 13 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுள்ள பகுதிகளில் 150,000 மக்கள் தங்கியுள்ளனர். அங்கு நடைபெறும் வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களினால் ஒவ்வொரு வாரமும் 300 பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். அங்குள்ள மக்கள் மருந்து, உணவு, குடிநீர் பற்றாக்குறை காரணமாகவும் இறப்புக்களை சந்தித்து வருகின்றனர்.

வன்னியில் இயங்கிவந்த கடைசி மருத்துவமனையும் சிறிலங்கா இராணுவத்தின் குண்டு வீச்சுக்களுக்கு இருமுறை உட்பட்டதனால் மூடப்பட்டுள்ளது.

புதுமாத்தளனில் உள்ள சிறிய மருத்துவமனையே தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அங்கு நோயாளர்கள் நிலத்தில் நீர் உட்புகாத துணிகளில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். மருந்து பொருட்களிளின் பாவனைக்கு மரத்தின் கிளைகளே பயன்படுத்தப்படுகின்றன. இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து 2,800 மக்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

வன்னியில் உடனடியான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் எமக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்துடன் நிபந்தனையற்ற பேச்சுக்களுக்கு தயார் எனவும் சிறிலங்கா அரசாங்கத்தினால் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் குண்டு வீச்சுக்கள் ஒரு இன அழிப்பு நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக தடுத்து வருவதுடன் தொடர்ச்சியாக வான்குண்டு மற்றும் பீரங்கித் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றது.

இது வன்னியில் பெரும் மனித அவலங்களை ஏற்படுத்தியுள்ளது. அனைத்துலக கண்காணிப்பாளர்கள் வன்னிக்கு வந்து நிலமைகளை கண்காணிக்க வேண்டும் என நடேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் 24 மணி நேரத்தில் பதில் கூறாது விட்டால் சிறிலங்காவை பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து பிரித்தானியாவின் பிரதமர் கோர்டன் பிறவுன் நீக்க வேண்டும் என பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் றயன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா தொடர்பான விவாதம் நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments