இரு சந்ததிகளாகப் புலம்பெயர் நாட்டில் வசித்துவரும் 14 வயது இந்தியத் தமிழ் சிறுவனின் மடல்

அன்பின் உடன்பிறப்புகளிற்கு,

இரு சந்ததிகளாகப் புலம்பெயர் நாட்டில் வசித்துவரும் இந்தியக்குடும்பத்தில் பிறந்த பதினாறு வயது நிரம்பிய இந்தியத் தமிழ் சிறுவன்நான், நானும் தமிழன் என்றமுறையில் எல்லாக் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கும் சென்று உதவிகள் செய்தேன், செய்வேன், செய்கிறேன் அது என் கடமை.

எனது எண்ணங்களை உங்களுடன் பகிர விரும்புகிறேன் அது என்னவெனில்,

1) போர் நடப்பதே அந்த சொந்த மண்ணுக்காகத் தானே. பின்னர் ஏன் மக்களை போர் இல்லாப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுமெனக் கங்கணம் கட்டுகின்றனர். புலிகளே மக்கள், மக்களே புலிகள். தமது சொந்த மண்ணைவிட்டு வெளியேற மாட்டோம் என அங்கு மக்கள் இருக்கிறார்களே ஏன்? சொந்த மண்ணை மீட்கத் தம் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடத்தயார் என்பதே உண்மை.

அதனால் உத்வேகத்துடன் போரை நிறுத்த வலியுறுத்துவோம்.

2) அங்கு அகிம்சையாகப் போராடவும் ஆயுதம் தேவைப்பட்டது என அறிந்து வேதனைப்பட்டோம். அதனால் தமிழகத்தில் தமிழ் ஈழ மக்கள் ஏன் ஆயுதம் ஏந்தினர் என்பது புரிந்துவிட்டது.

அவர்கள் மற்றையோருக்கும் புரியவைப்பர்.

3) அமரர் இராஜிவ் காந்தி அவர்களின் கொலை குறித்து இந்திய உச்சநீதிமன்றம் முடிவு தெருவிக்கும் வரை அதைப் பற்றி எவரும் பேசக்கூடாது. அது உச்ச நீதிமன்றத்தின் வேலை. ஆகவே பேசாதிருப்பது தான் யாவருக்கும் நல்லது, முறையும் கூட.

அதனால் அதை மறந்து தற்போது நடக்கவேண்டியதைப் பற்றி பேச வேண்டும்.

4) கலைஞர் தாத்தா நீங்கள் பெரியவர் வயதில், தமிழ் அறிவில். பெரியவர்கள் பெருந்தன்மையுடன் நடக்கவேண்டும். தமிழ் ஈழ வரலாற்றில் உங்கள் பெயரை எவ்வாறு, எங்கு பொறிக்க விரும்புகிறீர்கள்? பிரபாகரன் மாமா பக்கத்திலா? அல்லது எட்டப்பன் கருணா பக்கத்திலா? முடிவு உங்கள் கையில். பாருங்களேன் உங்கள் கொள்ளுப் பேரன் போன்ற நான் உங்களைக் கேள்வி கேட்க வைத்துவிட்டீர்களே! கருணா, கருணாநிதி எனப் பேரில் இருக்கும் ஒற்றுமை வரலாற்றிலும் இடம் பெறக் காரணமாகாதீர்கள். ''உடுக்கை இழந்தவன் கை போல் இடுக்கண் களைவதாம் நட்பு''

அங்கு உயிரையே இழக்கின்றவர்களுக்கு உங்கள் பங்கு என்ன?

5) இந்திய இராணுவ மருத்துவக் குழு ஏன் அங்கு போனது? அங்கு காயமடைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு வைத்தியம் செய்யவா? அங்குள்ள கனிமங்களை ஆராய்ந்து பேரம் பேசவா? அல்லது அமெரிக்காவின் தளத்தை ஆராயவா?

துப்பு எப்படி வேண்டுமானாலும் துலக்கலாம்.

6) இந்திய அன்னையர் ( ஜெயலலிதா , சோனியா ) செவி மடுக்காவிட்டாலும் உலக அன்னையர் செவி மடுப்பர்.

தாய்மை அனைவருக்கும் உண்டு.

உலகம் தமிழ் ஈழப்போராட்டத்தை அங்கீகரித்தால், இந்தியா உதவுவதை நிறுத்தினால், தானாகவே மலரும் தமிழ்ஈழம்.

ஒரு சிறிய விடயம் "அங்குள்ள மக்களால் வெறுமையாக்கப்பட்ட கிளிநொச்சி" இது புலிகளின் பலத்தைக் கதைகதையாகக் கூறும் என்பது அறிவாளர்களுக்குப் புரியும்.

தேவை ஏற்படின் இங்குள்ள தமிழர் அனைவரும் போயப் போராடத் தயார். இங்கு நாம் அடாது பனிப் பொழிவிலும் விடாது குரல் கொடுப்போம். புலம்பெயர் நாட்டிலுள்ள தமிழர் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல்கொடுக்கிறோம் தமிழீழத்தில் உள்ளோர் துயர் துடைக்கப் பாடுபடுவோம், இதுவரை இச் சிறுவனின் காகித மடலைப் பொறுமையுடன் படித்ததிற்கு நன்றி கூறி.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என உரிமையுடன் கூறி முடிக்கிறேன்

இப்படிக்கு,

மு. சு. சர்மா.

Comments