சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் தாயையும் 2 மாத குழந்தையையும் காணவில்லை

வன்னியில் சிறிலங்கா படையினரின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியான மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் தாயும் அவரது இரண்டு மாதக் குழந்தையும் நேற்று முன்நாள் தொடக்கம் காணாமல் போய் உள்ளனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னரும் இந்த மருத்துவமனையில் இருந்து இளம் தாயும் இரு பிள்ளைகளும் காணாமல் போன நிலையில், இது போன்றதொரு சம்பவம் மீண்டும் இடம்பெற்றிருக்கின்றது.

ஏழாம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த நகுலேஸ்வரன் கிசாந்தினி (வயது 23), அவரது இரண்டு மாத ஆண்குழந்தையான ந.சஞ்சீவன் ஆகிய இருவருமே நேற்று முன்நாள் புதன்கிழமை இரவு தொடக்கம் காணாமல் போய் உள்ளனர்.

மன்னார் மருத்துவமனையில் வன்னியில் சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் படுகாயமடைந்த நிலையில் 400-க்கும் அதிகமானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளியார் எவரும் இவர்களைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படாததுடன் மருத்துவமனையைச் சுற்றி 24 மணிநேரமும் சிறிலங்கா படையினரும் காவல்துறையினரும் காவல் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த இருவரும் காணாமல் போனது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று காலை மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

இந்த இருவரும் கடந்த 16 ஆம் நாள் முல்லைத்தீவில் இருந்து கப்பல் மூலம் திருகோணமலை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து மன்னார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

ஏற்கனவே, கிளிநொச்சியில் இருந்து காயமடைந்த நிலையில் கொண்டு வரப்பட்டு மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் தாயும் அவரது இரு சிறு பிள்ளைகளும் கடந்த 27 ஆம் நாள் தொடக்கம் மருத்துவமனையில் இருந்து காணாமல் போய் உள்ளதும் தெரிந்ததே.

Comments