கருத்துக் கணிப்புக் கோரும் தீர்மானமும் அதன் பால் எழும் 3 கேள்விகளும்

உலகப் பேரரசுகளில் முன்னணி வகிக்கும் நாடு களில் ஒன்றான அமெரிக்காவில் இப்போது ஆட்சியில் அமர்ந்திருப்பது ஜனநாயகக் கட்சி. அந்நாட்டின் ஆட்சித் தலைவனாக ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறியிருப்பவர் அங்கு வாழும் சிறுபான்மை இனத் தைச் சேர்ந்த பராக் ஒபாமா.

அமெரிக்காவின் நீண்டகால அரசியல், பொருளாதார, சர்வதேச உறவுகள் மற்றும் பல துறைகளில் ஒபாமா திருப்புமுனையான நடவடிக்கைகளை மேற்கொள் வார் என்ற எதிர்பார்ப்பு உலகளாவிய ரீதியில் நிலவுகிறது.

அமெரிக்கா ஏகாதிபத்திய நாடு. ஆகையால் ஒபாமாவும் அந்தக் குட்டையில் ஊறிய மட்டைகளில் ஒன்றே என்று எதிர்மறையாகப் பார்ப்போரும் உளர். அதுவும் தப்பென்று இல்லை.

ஒபாமாவுக்கு உள்ள பதவிசார் அனுபவம் குறை வென்பதாலும், அவர் தமது செயற்பாடுகளைத் தொடங்கி இரண்டு மாதம் கூட நிறைவு பெறவில்லை என்பதா லும் ஒபாமாவின் அரசியல் மகத்துவமும் மாண்பும் சாணக்கியமும் எத்தகையன என்பதனை இப்போது எடைபோட முடியாது.

இருப்பினும், அவர் பல பிரச்சினைகளை அல்லது விவகாரங்களை புதிய சகாப்தத்திற்கு ஏற்றால் போன்று சாதுரியமாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சார்பாகவும் கையாண்டு நீதி செய்வார் என்ற எதிர்பார்ப்பு பரந் தளவில், உலகளாவிய ரீதியில் உண்டு என்பது மறத் தற்குரியது அன்று.

அந்த வகையில், கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக, தமது அடிப்படை அரசியல் உரிமைகளுடன், தங்களுக்குள்ள பிறப்புரிமைகளை அனுபவித்து சுதந்திர மனிதர்களாக வாழ வேண்டும் என்ற இலக்கை அடைய முடியாமல் அல்லற்படும் ஈழத்தமிழர்களும் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் தமக்குச் சாதகமாக ஏதாவது நடைபெறுமா என்று எதிர்பார்ப்பது இயல்பே.

அதன் குறியீடாக, அமெரிக்காவின் சாந்தா கிளாரா மாகாணத்தின் (இணிதணtதூ) ஜனநாயகக் கட்சி மத்திய குழு நிறைவேற்றி உள்ள தீர்மானத்தை நோக்குவதில் தப்பில்லை. குறிப்பிட்ட மத்திய குழுவில் அங்கம் வகிக் கும் ஈழத்தமிழ்ப் பிரமுகர்கள் இதன் பின்னணியில் நின்று உழைத்திருப்பர் என்பதும் நிச்சயம்.

இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களில் வாழும் மக்கள் தமக்குரிய முழுமையான சுதந்திரத்தையா அல்லது சுயாட்சியையா விரும்புகிறார்கள் என்பதை அறியும் பொருட்டு தமிழ்மக்கள் வாழும் பகுதிகளில் கருத்துக் கணிப்பொன்றை ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் நடத்துமாறு கேட்டுக் கொள்கிறது அந்தத் தீர்மானம்.

ஆட்சியில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கிய கொள்கைத் திட்டமாக இலங்கை இன விவகாரத்தை கையாளும் அடிப்படையாக இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஏனைய மாகாணங் களில் உள்ள ஜனநாயகக் கட்சியின் மத்திய குழுக் களில் இந்தப் பிரேரணையை நிறைவேற்றினால், அதன் பலன் பெருகும்.

இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் அமெரிக்க அரசின் நடவடிக்கைகளை, இந்தத் தீர்மானத்தை அடிப் படையாக, ஆரம்பப் புள்ளியாக, கருவாக வைத்து முன் னெடுத்துச் செல்ல உதவும்; இலகுவாகவும் அமையும். பூரண சுதந்திரத்தையா அல்லது சுயாட்சியையா ஈழத் தமிழர்கள் அவாவி நிற்கின்றனர் என்பதனை அறிவதற் குத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில், கருத்துக் கணிப்பு நடத்தப் படவேண்டும் என்ற கருப்பொருள் வரவேற்கத்தக்கது.

ஆயினும்...

1977 ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொதுத் தேர்தலில் தமக்குத் தனியரசு வேண்டும் என்று பெரும்பான்மை வாக்குகளால் தமிழ் மக்கள் தீர்ப்பு வழங்கியிருந்தனர். தமிழ் மக்களின் அந்த ஆணையை மழுங்கடிக்க திட்டம் தீட்டி செயற்படுத்தியவர் ஜே.ஆர் ஜெய வர்த்தனா.
தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து அதனை செயலாக்கக்கூடாது என்ற பேரினவாதத்தின் சிந்தனைக் கருவே இன்றைய இன்னல்களுக்கும், இக்கட்டுகளுக்கும் அத்திபாரம். தமிழ்மக்களின் ஒப்புதல் இன்றி பங்களிப்பு இன்றி இயற்றப்பட் டதே பிரிவினைக்கு எதிரான அரசமைப்புச் சட்டம்.

அதன்பின்னர் 1983 இல் நடத்தப்பட்ட இன அழிப் போடு தமிழ்மக்களின் அரசியல் ஆணையை தூக்கி எறியும் அத்தியாயம் ஆரம்பமானது.

ஜே.ஆரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த நிறை வேற்று அதிகாரம்கொண்ட எல்லா ஜனாதிபதிகளும் அதே பாதையில் செயலாற்றி வருகிறார்கள். தமிழ்மக்களின் ஆணை மறந்து போன கதையாகியும் விட்டது!

தமிழர்களின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அவர்கள் மத்தியில் சுயேச்சையான ஐ.நாவின் சபையின் கண் காணிப்பில் கருத்துக் கணிப்பு நடத்துவது என்பதை இலங்கை ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது முதலாவது கேள்வி.

அமெரிக்க அரசு, இப்போதைய ஆளும் கட்சி, தனது தீர்மானத்தைச் செயலாக்க முன்வருமா என்பது இரண்டா வது வினா.

அமெரிக்காவில் அரசியல் கட்சி மட்டத்தில் இயற்றப் பட்ட மேற்படி தீர்மானம் நடைமுறைச் சாத்தியமாகும் வாய்ப்புண்டா? என்பது மிகப் பென்னம் பெரிய மூன்றாவது கேள்வி.

Comments