படையினர் புதுமாத்தளன் வைத்தியசாலை, விநியோக மையங்கள் மீது எறிகணை தாக்குதல்: 31 பேர் பலி; பலர் காயம்

பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் அமைந்துள்ள புதுமாத்தளன் வைத்தியசாலை மீது சிறிலங்கா படையினர் இன்று வெள்ளிக்கிழமை மேற்கொண்ட ஆட்லறித் தாக்குதலில் ஏற்கனவே காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நான்கு பேர் திரும்பவும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.10 மணியளவில் நடாத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று சுமார் 3.00 மணியளவில் படையினரால் நடாத்தப்பட்ட ஆட்லறித் தாக்குதலின் போது சர்வதேச செஞ்சிலுவை சங்கக் கப்பலில் உணவுப் பொருட்களை இறக்கி களஞ்சியப்படுத்தும் மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டிருந்த 7 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை பாதுகாப்பு வலய பகுதிகள் மீது சிறிலங்கா படையினரால் நடாத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை மொத்தமாக 31 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த எறிகணைத் தாக்குதல்கள் வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் மற்றும் மாத்தளன் ஆகிய பகுதிகளின் மீதே நடாத்தப்பட்டுள்ளது.

இதேவேளை சிறிலங்கா வான்படையின் இரண்டு போர் விமானங்கள் நீரேரி பகுதியில் 24 குண்டுகளை வீசியுள்ளன. இதன்போது ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

Comments