அவுஸ்திரேலியாவில் ‘உரிமைக்குரல்’ பேரணி – 4,000இற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

அவுஸ்திரேலியாவின் விக்டோறியா மாநிலத்திலுள்ள மெல்பேர்ண் நகரில் சுதந்திர தமிழீழத்துக்கான 'உரிமைக்குரல்' பேரணி இன்று (சனிக்கிழமை) மிகவும் எழுச்சிபூர்வமாக நடைபெற்றது.

4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இன்றைய நிகழ்வு மெல்பேர்ண் நகரில் இற்றைவரை நடைபெற்ற அனைத்து தமிழ் நிகழ்வுகளுக்கும் மகுடம் சூட்டியது போன்று காணப்பட்டது.

இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் முகங்களே தெரியாத அளவுக்கு பார்த்த இடம் எங்கும் தமிழீழத் தேசியக் கொடிகளும், தமிழீழத் தேசியத் தலைவரின் உருவப்படங்களும் ஆயிரக்கணக்கில் மக்களின் கைகளில் மிதந்து கொண்டிருந்தன.


தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மெல்பேர்ண் கிளையுடன் இணைந்து மெல்பேர்ணை தளமாக கொண்டியங்கும் பல்வேறு தமிழ் அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 10:00 மணியளவில் மெல்பேர்ண் நகரின் மத்தியில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் அகவணக்கத்துடன் தொடங்கியது.


"எங்கள் நிலமே எமக்கு வேண்டும்"
"எங்கள் தலைவன் பிரபாகரன்"
"எங்களுக்கு வேண்டியது தமிழீழம்"
"முல்லைத்தீவில் ஆமியா தலைவனுக்கே சவாலா"
"காந்தி தேசம் சொல்லுது; புத்த தேசம் கொல்லுது"
"சூரியப்புதல்வன் பிரபாகரன்"
"அவுஸ்திரேலியா தமிழரை காப்பாற்று"
"சிறீலங்காவே தமிழினப்படுகொலையை நிறுத்து"
போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


அவுஸ்திரேலிய சோசலிச கட்சியினர், சிறிலங்காவில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்று பேரணியில் கலந்துகொண்டவர்களின் கையெழுத்துக்களை பெற்றுக்கொண்டனர்.


தாயகத்தில் தமிழ் உறவுகள் முகம் கொடுத்து வரும் மனிதப்பேரவல காட்சிகள் அடங்கிய இறுவட்டுகளும் தாயக நிலவரம் தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் பேரணியை பார்வையிட்டுச் சென்ற பல்லின மக்களுக்கும் வழங்கப்பட்டன.

முற்பகல் 11:30 நிமிடமளவில் சுதந்திர சதுக்கத்தில் இருந்து புறப்பட்ட பேரணி சுவான்ஸ்டன் வீதி மற்றும் பேர்க் வீதி வழியாக சென்று வி்க்டோறிய மாநில நாடாளுமன்ற கட்டட முன்றலை சென்றடைந்தது.

வீதி ஓரமாக சென்றுகொண்டிருந்த பேரணிக்கு காவல்துறையினர் முழு பாதுகாப்பும் வீதி ஒழுங்குகளையும் மேற்கொண்டு வந்தனர். காவல்துறையினருடன் இணைந்து தமிழ்த்தொண்டர்களும் வீதிஒழுங்கமைப்பில் பணியாற்றினர்.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் அனைவரது கைகளிலும் தேசியக்கொடியும் தேசியத் தலைவரின் படமும் காணப்பட்டமை எழுச்சிபூர்வமாகவும் கண்கொள்ளா காட்சியாகவும் காணப்பட்டது.

பேரணியில் மக்கள் போட்ட முழக்கங்கள் வானை கிழித்தது. அனைத்து இன மக்களையும் ஒரு கணம் நின்று பார்க்க வைத்தது.

பேரணி நாடாளுமன்ற கட்டட முன்றலை அடைந்ததும் அங்கும் மக்கள் முழக்கமிட்டனர். அதனைத் தொடர்ந்து, எழுச்சி உரைகள் இடம்பெற்றன.

தமிழின உணர்வாளர் ஈஸ்வரன் கணபதிப்பிள்ளை, மூத்த குடிமக்கள் சார்பில் குணரட்ணம் ஆகியோர் உரையாற்றினர்.


இதனை அடுத்து, விக்டோறிய மாநில முதல்வருக்கான மனுவை ஈழத்தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சிவகுமார் படித்தார். பின்னர் அந்த மனு விக்டோறிய மாநில முதல்வரை சேர்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது.

- உடனடி போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்
- வன்னி வாழ் உறவுகளின் உடனடித் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகள் சென்றடைய வழிவகை செய்யப்பட வேண்டும்
- தமிழர்கள் தாம் நிம்மதியாக வாழும் பூர்வீக நிலங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற அனுமதிக்கக்கூடாது
- ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்
- தமிழர்களின் பாதுகாப்பு கவசங்கள் களையப்படக்கூடாது.
ஆகிய விடயங்களை சிறிலங்காவில் உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி இந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்பின்னர், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சபேசன் உரையாற்றினார். நிகழ்வு பிற்பகல் 1:45 நிமிடமளவில் நிறைவுபெற்றது.

இன்றைய நிகழ்வுக்கு சிட்னியில் இருந்தும் இளையோர் வந்து பேரணிக்கு மிகவும் ஒத்துழைப்பு நல்கியமை குறிப்பிடத்தக்கது.

Comments