திருமலையில் கப்பம் கோரி கடத்தப்பட்ட 5 வயது சிறுமி உடலமாக மீட்பு

திருகோணமலையில் கப்பம் கோரி சிறிலங்கா படையினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவால் கடத்தப்பட்ட சிறுமி இன்று உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை பாடசாலைக்கு வெளியே 5 வயதான இந்த சிறுமி காணாமல் போய் இருந்த நிலையில் பெற்றோருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் மூலம் சிறுமியை கடத்தியிருப்பதாகவும் விடுவிக்க 10 லட்சம் ரூபா கப்பம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிறுமி உடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் இயங்கிய துணை ஆயுதக்குழு அண்மையில் ஆயுதங்கள் எல்லாவற்றினையும் சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாக அறிவித்திருந்த நிலையில் மீண்டும் கடத்தல் கப்பம் கோருதல் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக மக்கள் மத்தியில் அச்சத்தினையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

சில காலத்துக்கு முன்னர் கிழக்கில் இயங்கிய ஆயுதக் குழுக்கள் ஏட்டிக்குப் போட்டியாக பாடசலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் மற்றும் பெண்கள் என பலரையும் கடத்தி கப்பம் கோரி வந்ததும் பின்னர் விடுதலைப் புலிகள் அந்த ஆயுதக் குழுவினரின் முகாம்களை தேடி அழித்து ஒழித்த நிலையில் அது குறைவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments