வன்னிப் பிரதேசத்தில் யுத்தம் காரணமாக இது வரை 5,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 15,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனரெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் நாடாளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
பிரபல சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
வன்னியில் தற்போது இடம்பெற்றுவரும் யுத்தம் காரணமாக அப்பாவித் தமிழ் மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் யுத்தத்தில் சிக்கிக் காயமடைந்தவர்களில்
500க்கும் மேற்பட்டோர் உரிய மருத்துவ வசதிகள் இன்றி உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான உயிரிழப்புகளுக்கு எறிகணை மற்றும் குண்டுத் தாக்குதல்களே காரணமாகின்றன எனவும், வன்னிப்பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் எறிகணை வீச்சுக்களையும் குண்டுத் தாக்குதலைகளையும் உடன் நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரும் மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 13 இடைத்தங்கல் முகாம்களில் பல்வேறு அசௌகரியங்கள் நிலவுவதாகவும், அகதிகள்
சிறைக் கைதிகள் போன்று அங்கு அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாவற்றுக்கும் முதலாவதாக யுத்தம் நிறுத்தப்பட்டால், இலங்கையின் அடிப்படை பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு கண்டு, அதன் பின்னர் ஐக்கிய இலங்கையை ஒன்றிணைந்து கட்டியெழுப்பலாம்" என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தடன் தமிழ், முஸ்லிம் சிங்கள பேதமின்றி வாழ்வதையே நாங்களும் விரும்புகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டதாகவும், உண்மை நிலைகளை அறிவதற்கு ஊடகவியலாளர்கள் அனைத்து பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தித்தாள் தெரிவிக்கின்றது.
Comments