மூன்று நாள் மோதலில் புதுக்குடியிருப்பில் 610 படையினர் பலி; 700 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் மோதல்களில் சிறிலங்கா படையினர் தரப்பில் 610 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 700 பேர் வரையானோர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளை மைய வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் தெரிவித்ததாவது:

புதுக்குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதியில் பல முனைகளில் முன்நகர்வுகளை மேற்கொண்ட சிறிலங்கா படையினரை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா படையினரின் நகர்வுகளுக்கு எதிராக நேற்று திங்கட்கிழமையும் நேற்று முன்நாளும் விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் சிறிலங்கா படையினர் தரப்பில் 402 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதியில் இன்றும் உக்கிர மோதல் நடைபெற்றது.

இதில் சிறிலங்கா படையினர் தரப்பில் 208 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 700 பேர் வரையிலானோர் காயமடைந்துள்ளனர்.

மோதல்களின் போது சிறிலங்கா படையினர் அதிகளவிலான வெடிபொருட்களை பயன்படுத்தி வருகின்றனர் என சமர்-கட்டளை மைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது இவ்வாறிருக்க, புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப் புலிகள் கரும்புலித் தாக்குதல் நடத்தியுள்ளனர் என சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

படையினருக்கு ஏற்பட்ட இழப்பு விபரம் எதனையும் சிறிலங்கா படைத்தரப்பு வெளியிடவில்லை.

Comments