முல்லைத்தீவில் கடந்த 72 மணித்தியாலங்களுக்குள் 208 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

முல்லைத்தீவில் கடந்த 72 மணித்தியாலங்களுக்குள் 208 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு வலயப்பகுதியின் மீது இலங்கைப்படையினர் மேற்கொண்ட எறிகனைத்தாக்குதலிலேயே இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

இன்று சனிக்கிழமையன்று பிற்பகல் 3 மணிவரையான காலப்பகுதியில் 53 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 112 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமையன்று 86 பொதுமக்கள் பலியானதுடன் 100 பேர் காயமடைந்தனர். பாதுகாப்பு வலயத்தின் மீது தொடர்ந்தும் எறிகனை வீச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் வைத்தியசாலைக்கு எடுத்துவரப்படவில்லை என வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வியாழக்கிழமையன்று 69 பொதுமக்கள் பதுங்குக்குழிகளுக்குள்ளேயே கொல்லப்பட்டனர். அம்பலவன்பொக்கனை மாத்தளன் போன்ற பகுதிகளில் இன்று சனிக்கிழமையன்று வீழ்ந்து வெடித்த எறிகனைகள் காரணமாக பலர் பதுங்குக்குழிகளிலேயே கொல்லப்பட்டனர்.

முள்ளிவாய்க்கால்இரட்டை வாய்க்கால் மற்றும் இரணைப்பாலை ஆகிய இடங்களிலும் எறிகனைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

இன்று மாத்தனுக்கும் அம்பலவன்பொக்கனைக்கும் இடையிலான வைத்தியசாலைக்கு 500 மீற்றர் தூரத்தில் மனிதாபிமான நிவாரணங்களுக்காக கிராமசேகரிடம் நின்றிருந்த இருவர் எறிகனை தாக்குதலால் கொல்லப்பட்டனர்.

கடந்த வியாழக்கிழமையன்று ஆனந்தபுரம் பகுதியில் இலங்கை விமானப்படையின் தாக்குதலில் 31 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.இதன்போது இரண்டு விமானங்கள் சுமார் 8 தடவைகளாக குண்டு வீச்சுகளை நடத்தியுள்ளன. இங்கு கொல்லப்பட்டவர்களில் ஈழநாதம் பத்திரிகையின் விநியோக முகாமையாளரான சசி மாதனும் அடங்குகிறார்.

அத்துடன் பொக்கனையில் கடந்த வியாழக்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட எறிகுண்டு தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர்.

முள்ளியவலையில் 30 பேர் கடந்த வியாழக்கிழமையன்று கொல்லப்பட்டனர். இதேவேளை சாலை கடற்ப்பகுதியில் படையினரின் தூர இலக்கு இயந்திர துப்பாக்கியின் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு துப்பாக்கி சன்னமாவது ஐ சி ஆர் சி கப்பல் மீது தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments