ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் அனைத்து துரோகத்துக்கும் கருணாநிதி உடந்தை: வைகோ குற்றச்சாட்டு

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசாங்கத்தின் அனைத்து துரோகத்துக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி கூட்டுப்பங்காளியாக உள்ளார் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

பாளையங்கோட்டைச் சிறைச்சாலை நேர்காணலின்போது 02.03.2009 காலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ, கட்சியின் கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் சொல்லச் சொல்ல எழுதி வெளியிடப்பட்ட வைகோ அறிக்கை:

இரண்டாம் உலகப் போரின் போது, யூத இனத்தையே பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு, படுகொலைகள் நடத்தியதுபோல், இலங்கையில் சிங்கள இனவாத அரசின் கொலைகார அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, தமிழ் இனத்தையே கருவறுக்க முனைந்து, இராணுவத்தின் மூலம் தமிழர்களைக் கொன்று குவிக்கிறான். இந்த தமிழர் இன அழிப்பு இராணுவத் தாக்குதலுக்கு முழுக்க, முழுக்க ஆயுத உதவி செய்தது இந்திய அரசுதான்.

1998 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள், டெல்லியில் தான் கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில், இலங்கையில் தமிழின கொலை நடத்தும் சிங்கள அரசுக்கு இந்தியா எவ்விதமான உதவியும் செய்யாது என்றும், ஆயுதங்களை கொடுக்காது என்றும், ஆயுதங்களை சிறிலங்காவுக்கு விற்பனை செய்வதில்லை என்றும் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவை அறிவித்தார்.

2004 ஆம் ஆண்டுவரை இந்திய அரசு அதனைக் கடைப்பிடித்தது.

சோனியா காந்தியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மத்தியில் மன்மோகன் சிங் அவர்களை பிரதமராகக் கொண்டு அரசு அமைத்த பின், வாஜ்பாய் அரசு எடுத்த முடிவை காற்றில் பறக்கவிட்டு சிறிலங்கா அரசோடு, இந்திய-சிறிலங்கா கூட்டு இராணுவ ஒப்பந்தம் செய்ய முடிவு எடுத்தது.

2004 ஆம் ஆண்டு நவம்பரில் இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்த நிலையில், அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெற்றிருந்த சூழலில், பிரதமரையும், சோனியா காந்தியையும், சரத் பவார், லாலு பிரசாத் யாதவ், பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், அதன் தேசியச் செயலாளர் ராஜா அவர்களையும் மூன்று முறை சந்தித்து எடுத்துக்கொண்ட கடும் முயற்சிகளின் விளைவாக, இந்திய-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

ஆனால், ஒரு மாதம் கழித்து கொழும்பு சென்ற அன்றைய வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங் இராணுவ ஒப்பந்தம் செய்யப்படாவிடினும், ஒப்பந்தச் சரத்துகள் நிறைவேற்றப்படும் என்று 2005 ஆம் ஆண்டு ஜனவரி 9 இல் கொழும்பில் அறிவித்தார்.

நான் மறுநாள் டெல்லிக்குச் சென்று பிரதமரிடம் என் எதிர்ப்பைத் தெரிவித்தபோது, நட்வர்சிங் சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து என்று பிரதமர் கூறியது ஏமாற்று வேலை என்பதைப் பின்னர்தான் தெரிந்து கொண்டேன். தமிழர் பகுதிகளின் மீது குண்டு வீச்சு நடத்தும் வானூர்திகள் இயங்குவதற்கு, பலாலி வானூர்தி தளத்தை இந்திய அரசு பழுது பார்த்துக் கொடுக்க முதலில் உத்தேசிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் முடிவாகியிருந்ததனால், அப்படிச் செய்வது தமிழ் இனத்திற்கே செய்கின்ற துரோகம் என்று, அப்போது இராணுவ அமைச்சர் பொறுப்பில் இருந்த பிரணாப் முகர்ஜியிடமும், சோனியா காந்தியிடமும், மன்மோகன் சிங்கிடமும் விளக்கமாகச் சொல்லி, அத்திட்டத்தைக் கைவிடுமாறு வற்புறுத்தினேன்.

பலாலி வானூர்தி தளத்தில் இருந்து ஏவப்பட்ட வான் குண்டு வீச்சில்தான் 1995 ஆம் ஆண்டில் ஏராளமான தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்படுவதையும், குறிப்பாக, நவாலி புனித பீற்றர் தேவாலயத்தில் இருந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 168 பேர் இக்குண்டு வீச்சால் படுகொலை செய்யப்பட்டதையும் எடுத்துச் சொன்னேன்.

ஆனால், அதைச் செய்யப் போவதில்லை என்று பிரணாப் முகர்ஜி உறுதி அளித்து ஏமாற்றிவிட்டு, இந்திய வான்படை நிபுணர்களை அனுப்பி வைத்து, இந்திய அரசின் செலவிலேயே பலாலி வானூர்தி தளத்தை பழுது பார்த்துக் கொடுத்தனர் என்ற உண்மையை சிறிலங்காவின் வான்படை துணைத் தளபதி டொமினிக் பெரேரா, 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள், பகிரங்கமாக அறிவித்தார்.

2005 ஆம் ஆண்டு தொடக்கத்தில், சிறிலங்கா வான் படைக்கு இந்திய அரசு கதுவீகளை கொடுக்கப் போகிறது என்ற செய்தியை அறிந்து, டெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்து, கதுவீகளை கொடுக்காதீர்கள் என்று மன்றாடினேன்.

முதல் தடவை நான் சந்தித்தபோது, கொடுக்க மாட்டேன் என்று பிரதமர் சொன்னார். ஆனால், கதுவீகளை கொடுத்து விட்டார்கள் என்று அறிவித்தவுடன் இரண்டாவது தடவை நான் சந்தித்தபோது, இந்திய அரசு கொடுக்காவிட்டால் பாகிஸ்தான், சீனா கொடுக்கும் என்பதால் நாங்கள் கொடுத்தோம் என்றார். அந்தச் சொத்தை வாதத்தை எதிர்த்து நான் வாதாடினேன். அங்கே பாகிஸ்தான், சீனா வம்சாவழியினரோ அவர்களின் தொப்புள் கொடி உறவுகளோ இல்லை என்பதையும் இந்தியா தந்த கதுவீகளின் உதவியால் சிங்கள வான்படை நடத்தும் குண்டுவீச்சால் தமிழ் மக்கள் கொல்லப்படுவார்கள் என்று வாதிட்டேன். அதற்கு பிரதமர் அப்படி போர் மூளும் பட்சத்தில் இந்தியா கொடுத்த கதுவீகளை திரும்பப் பெற்றுக்கொள்வோம் என்று என்னிடம் கூறியதை, அப்போதே ஏடுகளில் செய்தியாக வெளியிட்டேன்.

இந்திய கதுவீகளின் உதவியோடுதான், சிங்கள வான்படை, தமிழர் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. அப்படிப்பட்ட குண்டு வீச்சில் தான், செஞ்சோலையில் 61 தமிழ்ச் சிறுமிகள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டனர்.

இந்திய அரசு இதற்கு எந்தக் கண்டனமும் தெரிவிக்கவில்லை.

கடந்த 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 8 ஆம் நாள் இரவு, விடுதலைப் புலிகளின் வான்படை வான் தாக்குதல் சிங்கள இராணுவ முகாம்மீது நடத்தப்பட்டபோது, இந்திய கதுவீகளை இயக்கிய இந்தியர்களான ஏ.கே.தாகூர், சிந்தாமணி ரமட் எனும் இரண்டுபேர் படுகாயமுற்ற செய்தி வந்தவுடன், இந்தியப் பிரதமருக்கு இந்தியாவின் துரோகத்தைக் கண்டித்து, மறுநாள் செப்ரெம்பர் மாதம் 9 ஆம் நாள் கடிதம் எழுதினேன்.

அதற்கு 2008 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 2 ஆம் நாள் பிரதமர் மன்மோகன் சிங் எனக்கு எழுதிய பதில் கடிதத்தில், இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க இந்தியா இராணுவ உதவி செய்துள்ளது என்று ஒப்புக்கொண்டு, கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கிடையில் இந்திய - சிறிலங்கா கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் 2007 ஆம் ஆண்டிலேயே செய்யப்பட்டது. இந்திய கடற்படை இலங்கையில் நடைபெறும் போரில் விடுதலைப் புலிகளின் படகுகளையும் கப்பல்களையும் மூழ்கடிப்பதில் நேரடியாகவே ஈடுபட்டது.

இந்திய வான்படை நிபுணர்கள், சக்தி வாய்ந்த செய்மதி படப்பிடிப்பு கருவிகள் மூலம், புலிகளின் நடமாட்டத்தை சிங்கள வான்படைக்கு தெரிவித்ததன் விளைவாகவே புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார்.

2004 ஆம் ஆண்டில் இருந்து இந்திய அரசு சிறிலங்காவுக்கு ஆயுதங்கள் கொடுத்தும், வட்டியில்லாக் கடனாக 1,000 கோடி ரூபாய் கொடுத்தும் உதவியதன் மூலம் பாகிஸ்தான், சீனாவில் இருந்து ஏராளமான ஆயுதங்களை சிங்கள அரசு வாங்குவதற்கு வழிவகுத்துக் கொடுத்து, தமிழர்களுக்கு செய்த துரோகம் அனைத்தையும் நன்றாக அறிந்திருந்த கலைஞர் கருணாநிதி, இதற்கு எந்தக் கட்டத்திலும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆட்சேபணை சொல்லவில்லை.

இந்திய - சிங்கள அரசுகளின் கூட்டுச் சதிக்கு கலைஞர் கருணாநிதியும் ஒரு பொறுப்பாளி ஆவார்.

பின்னாளில் தன் மேல் வரும் பழியில் இருந்து தப்பிப்பதற்காக தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் கவிதை எழுதினார். கடந்த சில மாதங்களாக சிங்கள அரசு - இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், இஸ்ரேல், ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து வாங்கிக்குவித்துள்ள சக்தி வாய்ந்த நவீன ஆயுதங்களைக் கொண்டு விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிடத் திட்டமிட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தானாக முறித்தது; இராணுவத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.

இதில், தமிழ்மக்கள் லட்சக்கணக்கில் சொல்லப்படுவதைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் தமிழ் இனத்தையே அங்கே கருவறுத்துவிட்டு, மிஞ்சுகிற தமிழர்களை நிரந்தரமாக அடிமை இருளில் தள்ளத் திட்டமிட்டவாறு புலிகளை முற்றிலும் அழிக்க வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் திட்டமும் ஆகும்.

அதனால்தான் தமிழ்நாடு சட்டமன்றம் போர் நிறுத்தம் வேண்டும் என ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தைக் காலில் போட்டு மிதித்துவிட்டு இன்று கலைஞர் கருணாநிதியால் தூயவர் என்று புகழப்படும் பிரணாப் முகர்ஜி, சென்னையில் முதலமைச்சரின் வீட்டு வாசலில் நின்று, போர் நிறுத்தம் கேட்பது எங்கள் வேலை அல்ல என்று திமிராகச் சொன்னார்.

கொழும்புக்குச் சென்ற பிரணாப் முகர்ஜி, போர் நிறுத்தம் கேட்கவேயில்லை என்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பட்டவர்த்தனமாகச் சொல்லிவிட்டான். 48 மணி நேரம் நாங்கள் தமிழர்கள் முல்லைத்தீவில் இருந்து வெளியேறக் கெடு விதித்தோமே தவிர, அது போர் நிறுத்தமல்ல என்றும், இந்திய அரசு சொன்னது உண்மை அல்ல என்றும், தமது அமைச்சர் மகிந்த சமரசிங்க மூலம் உலகத்துக்கு அறிவித்தார்.

பெப்ரவரி மாதம் 18 ஆம் நாள் அன்று இந்திய நாடாளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி கொடுத்த அறிக்கை பாம்பின் விசத்தை விட நச்சுத்தன்மை நிறைந்ததாகும். அதில் போரில் சிங்கள இராணுவம் வெற்றிமேல் வெற்றி பெறுவதாகவும் கிளிநொச்சி வீழ்ந்தது என்றும், ஆனையிறவு வீழ்ந்தது என்றும், முல்லைத்தீவு கைப்பற்றப்படும் என்றும், போரின் இறுதிக்கட்டம் விரைவில் நிறைவேறிவிடும் என்றும் அறிவித்தார்.

இதற்கு சில நாட்களுக்கு முன்பு, ராஜபக்ச, விடுதலைப் புலிகளின் கடைசி மூச்சு அணையப் போகிறது என்று சொன்னதையே பிரணாப் முகர்ஜியும், இங்கே கூறினார்.

முல்லைத்தீவில் வெளியேறிச் செல்லும் தமிழர்களை விடுதலைப் புலிகள் படுகொலை செய்வதாக ராஜபக்ச சொன்னதையே, பிரணாப் முகர்ஜியும் தன்னுடைய குற்றச்சாட்டாக அந்த அறிக்கையில் சொன்னார்.

எல்லாவற்றையும் விடக் கொடுமை என்னவென்றால் முல்லைத்தீவில் 70 ஆயிரம் பேர் இருப்பதாகச் சொன்னதுதான். மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை நெருப்பு மண்டலக் குண்டு வீச்சில் கொன்றுவிட்டு கொல்லப்பட்டவர்கள் எல்லோரும் விடுதலைப் புலிகள் தான் என்று சிங்கள அரசு அறிவிக்கத் திட்டமிட்டு உள்ளது. அதனால்தான் 35 ஆயிரம் தமிழர்கள் வெளியேறிவிட்டார்கள் என்று ராஜபக்சவும், பிரணாப் முகர்ஜியும் சொன்னார்கள். அதனையே கலைஞர் கருணாநிதியும் அவர்களின் ஊதுகுழலாக மாறி 35 ஆயிரம் தமிழர்கள் வெளியேறி வந்ததாகவும் அவர்களில் காயம்பட்டவர்களுக்கு மருந்துகளும், மருத்துவர்களும் அனுப்பத் தயார் என்று அறிவித்தார்.

கழுத்தை அறுத்துவிட்டு கை காயத்துக்கு முதல் உதவி செய்யும் அயோக்கியத்தனம் தான் இந்த அறிவிப்பு ஆகும்.

மத்திய அரசு துரோகத்தின் உச்சகட்டமாக பெப்ரவரி மாதம் 28 ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி ஒரு ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யைச் சொன்னார். அதில் தமிழ் மக்களை முல்லைத்தீவில் இருந்து வெளியேற்றுவதற்கு விடுதலைப் புலிகள் முன்வந்திருப்பதாகவும், சிங்கள அரசு தமிழர்களைப் பாதுகாப்பாக அனுப்ப வேண்டும் என்றும் கூறினார். இது பச்சைப் பொய்யாகும்.

விடுதலைப் புலிகள், ஐக்கிய நாடுகள் மன்றத்துக்கும், இணைத் தலைமை நாடுகளுக்கும் அனுப்பிய அறிக்கையில், சிங்கள அரசு தமிழ் மக்களைக் கொன்று குவிக்கிறது என்றும், அந்த அரசின் அறிவிப்பை நம்பி, பாதுகாப்பு வலயத்துக்குள் சிக்கி, 2,000 தமிழர்கள் கொல்லப்பட்டதையும், 3,000 பேர் காயம் அடைந்ததையும் சுட்டிக் காட்டியதோடு, உணவும், மருந்தும் இன்றி லட்சக்கணக்கான தமிழ் மக்கள் மரணத்தின் பிடியில் தவிப்பதாகவும், தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் விடியலுக்கு அனைத்துலக நாடுகளின் துணையோடு கூடிய உத்தரவாதம் கிடைக்கும் வரை தங்களின் ஆயுதப் போராட்டம் நிற்காது என்றும், உண்மை நிலையைக் கண்டறிய அனைத்துலக ஊடகவியலாளர்களும், மனித உரிமைக் காவலர்களும் தங்கு தடையின்றி முல்லைத்தீவில் நேரில் உண்மையைக் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளனர்.

2001 ஆம் ஆண்டு இறுதியில் போர் நிறுத்தம் செய்தது விடுதலைப் புலிகள்தான். அதன் பின்னர்தான் சிங்கள அரசு போர் நிறுத்தம் அறிவித்தது. அதனை முறித்ததும் சிங்கள அரசுதான்.

கடந்த நான்கு மாதத்துக்கு முன்பே விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்குத் தாங்கள் தயார் என்று அறிவித்ததை சிங்கள அரசு ஏற்கவே இல்லை. உண்மை இவ்வாறு இருக்க, பிரணாப் முகர்ஜி தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக, தூத்துக்குடி வந்து போர் நிறுத்தம் பற்றி மோசடியான வார்த்தைகளை உதிர்த்துவிட்டுப் போனார். கலைஞர் கருணாநிதி அதற்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்துவிட்டு, என் மீது வேறு எவரும் சொல்லத் துணியாத களங்கத்தைச் சுமத்த முற்பட்டு, புலிகள் பிரச்சினையை மாசாக்கி, மண்ணாக்கி, காசாக்கிவிட்டேன் என்றும், அரசியல் நாணயத்தை நாசப்படுத்தி விட்டேன் என்றும் புழுதிவாரித் தூற்றியுள்ளார்.

நான் கைது செய்யப்பட்ட மறுநாள் மார்ச் மாதம் 1 ஆம் நாள் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலாளர் பலித கோகன்ன, போர் நிறுத்தம் செய்யுமாறு எங்களை இந்த நிமிடம் வரை இந்திய அரசு கேட்கவில்லை என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டான்.

பிரணாப் முகர்ஜியின் பொய்யும், பித்தலாட்டமும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. பிரணாப் முகர்ஜிக்கு பல்லாண்டு பாடி வரவேற்கும் முதல் மந்திரி இந்திய அரசின் அனைத்துத் துரோகத்துக்கும் கூட்டுப் பங்காளி என்பதால், தமிழக மக்களை ஏமாற்றுவதற்காகத்தான் நயவஞ்சகமான அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளார்.

துரோகி கருணாவும், கொலைகாரன் சரத் பொன்சேகாவும், புலிகளிடம் நானும், அண்ணன் நெடுமாறனும் பணம் பெறுகிறோம் என்று வீசிய கொடும்பழியைத்தான் கலைஞர் கருணாநிதியும் கூறுகிறார். அதனால்தான் அண்ணன் நெடுமாறன் குறித்து புலிகளிடம் பணம் பறிக்கும் இனத் துரோகி என்று மூன்று மாதங்களுக்கு முன்பு எழுதினார். இப்போது என்மீது களங்கச் சேற்றை வீசுகிறார். கலைஞர் கருணாநிதியின் முகத்திரையை வீரத்தியாகி முத்துக்குமார் கிழித்து எறிந்த பின்பு என்னை முதலமைச்சர் பழித்ததன் மூலம் தன்னுடைய சுயரூபத்தைக் காட்டிவிட்டார்.

சில நாட்களுக்கு முன்பு தமிழக அமைச்சர் ஒருவரின் பெயரால் என்னைக் கீழ்த்தரமாக வசைபாடி அறிக்கை தந்ததை அப்போதே கழகக் கண்மணிகள் உணர்ந்துவிட்டனர். பாதுகாப்பு என்றும் சட்டம் என்றும் முதலமைச்சர் காட்டும் பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்சுகிறவன் அல்ல இந்த வைகோ என்றார் அவர்.


Comments