இது தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:
இலங்கையின் உள்நாட்டு போரை எல்லோரினதும் கவனத்திற்கு முருகதாஸ் வர்ணகுலசிங்கம் (வயது 26) கொண்டு வர விரும்பியிருந்தார்.
பிரித்தானியாவில் வாழும் குடும்பத்தின் அங்கத்தவரான இந்த இளைஞர் சுவிற்சர்லாந்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்ற பேரணி ஒன்றில் தன்னைத் தானே தீமூட்டி எரித்திருந்தார்.
மேற்கு லண்டனில் உள்ள நோர்த்கோல் நகரில் இன்று சனிக்கிழமை இந்த இளைஞனின் இறுதி நிகழ்வு நடைபெறவுள்ளது.
முருகதாஸ் கணணித்துறை பட்டதாரி. பகுதி நேரமாக ஒரு பல்பொருள் அங்காடியிலும் கடமையாற்றி வந்திருந்தார்.
சிறிலங்கா அரச படையினர் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் படை நடவடிக்கைக்கு எதிரான எதிர்ப்பு பேரணியில் அவர் கலந்து கொண்டிருந்தார்.
சிறுபான்மை தமிழ் இனம் அங்கு தனிநாடு கோரி போராடி வருகின்றனர். 2005 ஆம் ஆண்டில் இருந்து அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
நான் எனது உயிரை தியாகம் செய்கின்றேன்; எனது உடலை எரிக்கும் இந்த தீ உங்களை விடுதலையின் பாதைக்கு அழைத்து செல்லும் என முருகதாஸ் தனது இறுதிக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
முருகதாஸ் மிகவும் அன்பானவர்; அவரை நாம் இழந்துள்ளோம்; அவர் இந்த தியாகத்தை தனது நாட்டுக்காக செய்துள்ளார் என முருகதாசின் உறவினர் தவரூபன் சின்னத்தம்பி (வயது 33) தெரிவித்துள்ளார்.
முருகதாஸ் மிகவும் உணர்வுள்ளவர்; பிரித்தானியாவுக்கு வருவதற்கு முன்னர் அவர் தனது சொந்த நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்ந்தவர்; அதனால் அவருக்கு அதன் வலி தெரியும். அவர், தனது உயிரை தியாகம் செய்ய விரும்பியுள்ளார் என்றே நான் எண்ணுகின்றேன்; அதனை எண்ணி நாம் பெருமை அடைகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் உலகெங்கும் இடம்பெயர்ந்து வாழ்கின்றோம்; நாம் எமது பிரச்சினைகளை உரத்துக்கூறி அனைத்துலகத்தின் உதவிகளை கடந்த 30 ஆண்டுகளாக கேட்டுள்ளோம். ஆனால், எதுவும் நடைபெறவில்லை.
எனவே, எனது உயிரை தியாகம் செய்ய முடிவெடுத்துள்ளேன்; எனது உடலை பற்றிக்கொள்ளும் இந்த தீ உங்களை விடுதலையின் பாதையில் இட்டுச்செல்லும் என முருகதாஸ் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
லண்டனில் மேலும் இருவர் தீக்குளிக்க முயற்சி எடுத்துள்ளனர். இந்தியாவிலும், உலகின் ஏனைய பாகங்களிலும் ஒரு டசினுக்கு மேற்பட்டவர்கள் தீக்குளித்துள்ளனர்.
இன்று நடைபெறும் முருகதாசின் இறுதி நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரித்தானியாவில் 2 லட்சத்து 50 ஆயிரம் தமிழ் மக்கள் வசிக்கின்றனர்; அவர்களில் பெரும்பாலானவர்கள் உள்நாட்டு போரினால் இடம்பெயர்ந்தவர்கள்.
இந்த நிகழ்வுக்கான பாதுகாப்பு ஒழுங்குகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் தமிழ் சபை தலைவர் தயா இடைக்காடார் தெரிவித்துள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments