ஈழத் தமிழர்களுக்கான மருத்துவ உதவியை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்புங்கள் - நெடுமாறன்

சிங்கள ராணுவத்தின் பாதுகாப்புடன் இயங்கும் இந்திய மருத்துவமனைக்கு தமிழர்கள் யாரும் வரமாட்டார்கள். உண்மையில் ஈழத் தமிழர்களுக்கு மருத்துவ உதவி செய்ய இந்தியா விரும்பினால் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்புவது சிறந்தென இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகள் பெறவே இலங்கைக்கு இந்திய மருத்துவக் குழுவினை மத்திய அரசு அனுப்பியுள்ளது என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் முள்ளியவளை, வள்ளிப்புனம், விசுவமடு, உடையார்கட்டு, மல்லாவி, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் இருந்த மருத்துவமனைகளை இலங்கை ராணுவம் அழித்துள்ளது.

மிகளவிலான நோயாளிகளும், மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இருந்த மருத்துவமனைகளை அழித்த நிலையில் சிங்கள ராணுவத்தின் பாதுகாப்புடன் இயங்கும் இந்திய மருத்துவமனைக்கு தமிழர்கள் யாரும் வரமாட்டார்கள். அவ்வாறு வருவது அவர்களின் உயிருக்கு அபாயத்தை விளைவிக்கும்.

செஞ்சிலுவை சங்கம் வெளியேற்றப்பட்டதையோ, மருத்துவமனைகள் அழிக்கப்பட்டதையோ இதுவரை கண்டிக்காத இந்திய அரசு இப்போது மருத்துவ உதவி செய்யப்போவதாக நாடகமாடுவதை மக்கள் ஒருபோதும் நம்ம மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலையின் காரணமாக தமிழக மக்களை ஏமாற்றுவதற்கு இத்தகைய அறிவிப்புகள் இந்திய அரசு வெளியிடுவதை நான் வன்மையாக கண்டிப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக இந்தியாவிலிருந்து 52 பேர்களைக் கொண்ட இந்திய இராணுவ மருத்துவக் குழு செல்ல இருக்கிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வடக்கு மாநிலத்தில் உள்ள கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் புல்மோட்டை என்ற இடத்தில் மருத்துவமனை அமைத்து அங்கிருந்து மருத்துவ உதவி செய்யப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனைக்கு இலங்கை ராணுவம் பாதுகாப்பு வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments