ஈழத் தமிழரின் இறையாண்மையும் இலங்கை - இந்திய அரசுகளின் போரும்!

மனிதனை மனிதன் அடிமை கொள்ள முடியுமா? அதிலும் அடிமைகள் எப்படி மற்றொரு அடிமையை அடிமைப் படுத்த முடியும்? அப்படிப்பட்ட செயலுக்கு எப்படி மனித சமுதாயம் அங்கீகாரம் வழங்க முடியும்? ஈழத் தமிழினத்துக்கு இறையாண்மையும் சுயாதிக்கமும் இல்லை எனக் கூறி எமது தாயக மீட்புப் போரைப் பயங்கரவாதமாக பட்டியலிடும் செயற்பாட்டை ஈழத் தமிழினம் மிக வன்மையாக எதிர்க்க வேண்டும். எமது விடுதலை இயக்கமான தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இட்டு அதன் மூலம் தமிழ் இன ஒழிப்புப் போரை நியாயப் படுத்தும் அமெரிக்க ஐரோப்பிய மற்றும் அனைத்துலக அரசுகளை நாம் நியாயம் கேட்டு நீதி கோரவேண்டும்.

வரலாற்று ஆதாரங்களுடன் உள்ள தமிழ் மக்களின் அரசுகளையும் ஆள் புலத்தையும் கொண்டிருந்த இனமாக 1833 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலைக்கு நாம் எப்பாடு பட்டேனும் வரவேண்டும். எமது இறையாண்மையை மீட்டெடுக்கும் உரிமை எமக்கு உள்ளது என்பதை இவர்களுக்கு உணர்த்த வேண்டும். எமக்கு உரியதான இந்த உரிமையை மறுதலிக்க எம்மைப் போன்றே அடிமைகளாக இருந்த இலங்கையின் சிங்கள அரசுக்கும் இந்திய அரசுக்கும் எந்த வித உரிமையும் இல்லை என்பதை முழு உலகும் அறியச் செய்வது அவசியமாகின்றது.

உடனடியாக இந்திய இலங்கை அரசுகள் தமிழர் தாயகப் பிரதேசங்களில் போர் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை சர்வதேச அளவில் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டங்கள், கவன ஈர்ப்பு நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் எடுத்துச் சொல்வதை நாம் கட்டாயமாகப் பின்பற்றி இந்த அரசுகளைத் தலைகுனியச் செய்ய வேண்டும்.

1958 முதல் தமிழ் இனத்துக்கு ஏற்படுத்திய உயிர் உடமை அழிப்புகளுக்கு இலங்கையின் சிங்கள மேலாதிக்க அரசும் 1987 முதல் இதே குற்றங்களை இழைத்து வரும் இந்திய அரசும் பொறுப்பாளிகள் ஆக்கப் பட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நீதி கேட்கவும் ஈழத் தமிழினம் முற்பட வேண்டும்.

எமது இன்றைய அவலத்துக்கு முதன்மைப் பொறுப்பாளி பிரித்தானிய அரசு என்பதை நாம் மிக நிதானமாகவும் உறுதியாகவும் முன்வைத்து எமது விடுதலைப் போராட்டத்தை முனைப்புடன் கொண்டு செல்ல வேண்டும். இந்தக் குற்றச் சாட்டுக்கான வரலாற்று ஆதாரங்கள் நிறையவே உண்டு. அவற்றை இன்றைய பிரித்தானிய அரசுக்கு நினைவு படுத்தி எமது தேச விடுதலைப் போரை நியாயப்படுத்தும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கவும் தமிழீழ அரசை உலக அங்கீகாரத்துக்காக முன்னெடுக்கவும் வற்புறுத்த வேண்டும்.

1905 முதல் தமிழர் தரப்புத் தனியான சுதந்திரம் நோக்கிய உரிமைக் குரலை எழுப்பிய போதும் பிரித்தானிய ஆட்சியாளர்கள் மறுதலித்தும், புறக்கணித்தும் வந்தமைக்கான வரலாற்று ஆதாரங்கள் சில இங்கே தரப்படுகிறது.

இவை வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களின் இலங்கையில் தமிழர் என்ற நூலில் இருந்து பெறப்பட்ட ஆதாரபூர்வமான தரவுகளாகும்.

"The unfortunate events of 1915 have shown how little British Officials in Ceylon are in touch with the people, and how urgent is the need for safeguards against disastrous official blunders.”- Closing sentence of Para 5 of letter dated 20th June, 1917 by Ceylon Reform League to Colonial Secy. (p.493)

இதன் தமிழாக்கம்- 1915ல் இடம் பெற்ற துக்ககரமான நிகழ்வுகள் இலங்கையில் உள்ள பிரித்தானிய அதிகாரிகளின் பதவிசார் தவறுகள் அவர்கள் மக்கள் பற்றி எந்த அளவுக்குக் குறைவான தொடர்புகளைக் கொண்டுள்ளனர் என்பதைக் காட்டிவிட்டன. இது இலங்கை மறுசீரமைப்பு குழு அன்றைய பிரித்தானிய குடியேற்ற செயலாளருக்கு 1917 ஜுன் 20 ஆம் திகதி எழுதிய கடிதத்தின் 2 வது பந்தியின் இறுதி வரிகளாகும். இன்று வரை நாம் வரலாற்றைக் கவனித்தால் இதே நிலை நீடிப்பதைக் காணலாம். இத்தகைய நிலையை நீக்குவதே எமது முக்கிய செயற்பாடாக இருக்க வேண்டியது எமது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

அன்றே பிரித்தானிய அரச அதிகாரிகளின் அறியாத்தனத்தைச் சுட்டிக் காட்டும் அளவுக்கு நம் தமிழர் தமது நிலைமையை தெரிந்து வைத்துக் கொண்டுள்ளதோடு துணிச்சலும் கொண்டிருந்தனர். அது மட்டும் அல்ல கொழும்புத் தமிழ்த் தலைமை சிங்களத் தலைவர்களுடன் சேர்ந்து தமிழரின் இறையாண்மைக்கு குழிதோண்டியதை யாழ்ப்பாண வாலிபர் சங்கம் சரியாகத் தெரிந்து கொண்டு பிரித்தானிய குடியேற்ற அதிகாரிக்கு பின்வருமாறு கடிதம் அனுப்பியது.

1.That your memorialists, representing the Tamils of the Northern Province , the chief centre permanent Tamil population of this Island, passed the following resolution at a general meeting of the Jaffna Association held on 2nd January, 1918:-

“That in the opinion of this association the scheme of constitutional reform contained in the joint memorial of the Ceylon National Association and the Ceylon Reform League adopted at the conference held in Colombo on the 15th December,1917, is not acceptable to the Tamil Community , and that a memorial be forwarded to the Right Honourable the Secretary of State for the Colonies praying, among other administrative reforms, for the reform of the Executive and Legislative Councils of the island on an extended elective basis , whilst maintaining , as far as possible , the existing proportion of Sinhalese and Tamil representation in the Legislative Councils.”(p.501)


இதன்படி இத்தீவின் தழிழ் மக்களின் முதன்மை மையமான வடக்கு மாகாணத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் விண்ணப்பதாரிகள் 1918 ஜனவரி 2 ஆம் திகதி கூடிய பேரவைக் கூட்டத்தில் பின் வரும் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது:-

1. இந்தச் சங்கத்தின் அபிப்பிராயப்படி இலங்கைத் தேசிய சங்கமும் இலங்கைச் சீரமைப்புக் குழுவும் இணைந்து கொழும்பில் 15 டிசம்பர் 1917 இல் நடத்திய மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசமைப்புக்கான திருத்த திட்டம் தமிழ் சமூகத்துக்கு ஏற்புடையதாக இல்லை. மேலும் மேன்மை தங்கிய குடியேற்ற நாடுகளுக்கான அரசுச் செயலருக்கு ஒரு வணக்கத்துடன் விண்ணப்பிப்பதாவது, நிர்வாக திருத்தங்களோடு, இத்தீவில் நிர்வாக சபை சட்டசபைகளின் சீரமைப்பும் தேர்தல் அடிப்படையில் விரிவு படுத்தப்பட வேண்டும். அதே வேளையில் முடிந்த வரைக்கும் இப்போதுள்ள சிங்களவர் தமிழர் பிரதிநிதிகளின் விகிதாசாரம் சட்ட சபைகளில் பேணப் படவும் வேண்டும். (ப. 501)

எமது இறையாண்மை பற்றிக் கேவலமாக மறுதலிக்கும் இன்றைய இலங்கை - இந்திய அரசுகளுக்கும் இவர்களின் பித்தலாட்டம் நிறைந்த பிரச்சாரத்தை ஏற்று எம் இனத்தின் அழிப்புக்குத் துணை போகும் ஏனைய அரசுகளுக்கும் 1940 நவம்பரில் டெல்லியில் நடந்த தமிழர் பேராளர் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை லண்டன் டவுனிங் வீதியில் உள்ள குடியேற்ற நாடுகளுக்கான அரச செயலருக்கு யாழ்ப்பாணம் அகில இலங்கை ஆதிக்குடிகளின் (தமிழரின்) சங்கம் அனுப்பப்பட்ட தீர்மானங்களின் ஒரு பகுதி வாசகர் கவனத்துக்குத் தரப்படுகிறது:-

Tamil Delegates for the Delhi Conference of November, 1940. From the All-Ceylon Aboriginal Inhabitants’ (Tamils’) Association, Jaffna, Ceylon.

To- The Right Honourable, The Secretary of States for the Colonies, Downing Street, London, England. Subject: Tamil Delegates to the Forth-Coming Delhi Conference, of November 1940.

2. The Original Inhabitants of Ceylon and the original Kings who ruled over Ceylon were all Tamils (Dravidians).

3. The Sinhalese people came later to Ceylon from foreign and distant countries (Persia etc.) by way of Bengal and are foreigners to Ceylon. The Sinhalese who are foreigners to Ceylon have no right whatever to prevent the Indians from coming to Ceylon. If they think that the Indians injure their interests in Ceylon, they (Sinhalese) should return to the country whence they came to Ceylon.

These are just a couple of the 19 resolutions including several sub paras substantiating the main resolutions. (pp.535 to 544)


இதன் தமிழாக்கம் -

தமிழர் பேராளரின் டெல்லி மாநாடு - நவம்பர் 1940.

அனுப்புபவர்- அகில இலங்கை ஆதிக்குடிகளின் (தமிழர்களின்) சங்கம், யாழ்ப்பாணம், இலங்கை.

பெறுநர்- அதிமேன்மை தங்கிய குடியேற்ற நாடுகளின் அரச செயலர்,
டவுனிங் வீதி, இலண்டன், இங்கிலாந்து.

2. இலங்கையின் ஆதிக் குடிமக்களும் அதனை ஆட்சி செய்து வந்த உண்மையான அரசர்களும் எல்லாருமே தமிழர்களே (திராவிடர்கள்).

3. சிங்களவர்கள் துரதேசங்களில் (பாரசீகம் போன்று) இருந்து பின்னால் இலங்கைக்கு வங்காளம் ஊடாக வந்தவர்கள், இலங்கையின் அந்நியர்கள். இலங்கையில் அந்நியரான சிங்களவர்கள் இலங்கைக்கு வரும் இந்தியர்களைத் தடுக்கும் உரிமை எதுவும் கொண்டிருக்கவில்லை. அப்படி அவர்கள் இந்தியர்கள் வருவதால் இலங்கையில் தமக்கு தீங்கு விளைகிறது என நினைப்பார்கள் எனில் அவர்கள் (சிங்களவர்கள்) எங்கிருந்து இலங்கைக்கு வந்தார்களோ அந்த நாட்டுக்கே திரும்பிவிட வேண்டும்.

இவை போன்றதும் பல உப கோரிக்கள் உடன் கூடியவையமான 19 கோரிக்கைகளைத் தீர்மானமாக அன்றைய யாழ்ப்;பாணத் தமிழர் சங்கத்தின் தலைமையிலான தமிழரின் அரசியல் செயற்பாடுகள் இருந்துள்ளன. இன்று எம் இனத்துக்கு ஏற்பட்டுள்ள இழி நிலைக்குக் காரணமாக அமைந்தது தமிழரின் அரசியல் தலைமை கொழும்பைத் தளமாக மாற்றிவிட்டமையே என்பது தெளிவாகிறது.

மகிந்தவும் பிரணாப் முகர்ஜியும் சோனியாவும் பிறக்கும் முன்னரே தமிழரின் இறையாண்மை பிரத்தானிய குடியேற்ற நாடுகளின் அரச செயலர் வரை பல முறை தமிழர் தரப்பால் பதிவு செய்யப்பட்ட வரலாறுகள் பல உண்டு. எவர் மறுத்தாலும் எமது உரிமைகளைப் பிரித்தானிய அரசை ஏற்கச் செய்து இழந்து போன எமது தாயகத்தையும் இறையாண்மையையும் மீட்பதே ஈழத் தமிழினத்தின், சிறப்பாக பிரித்தானியா வாழ் தமிழரின் செயற்பாடாக அமைதல் வேண்டும்.

- வன்னித்தம்பி தங்கரத்தினம் -

நன்றி: நிலவரம்

Comments