ஆடுகளை எதிர்பார்த்து ஓநாய்கள் காத்திருக்கின்றன

பாரிய மனிதப் பேரவலத்தை வன்னி மக்கள் எதிர்கொள்வதாக, அவசரச் செய்தியன்றினை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ளது.பன்னாட்டு அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் மற்றும் ஐ.நா சபையின் உலக உணவுத்திட்ட அமைப்பின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, இன்னமும் சிறியளவில் தனது செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்கும் ஒரே சர்வதேச அமைப்பு இந்த செஞ்சிலுவைச் சங்கமாகும்.

அடம்பன் கொடியை உண்டு நோயாளியாகிப் போன மக்களும், பட்டினிச்சாவை அரவணைத்துக்கொள்ளும் சிறார்களும், வன்னி அவலத்தின் உச்ச நிலையை உலகிற்கு உணர்த்திய வண்ணமுள்ளனர்.

தீவிரவாதிகளின் தாக்குதலிற்குள்ளான, சிறீலங்கா துடுப்பாட்ட அணியினருக்கு ஆதரவாகக் கண்டனக்குரல் எழுப்பும் இந்தியாவும், மேற்குலகும், சிங்களத்தின் கொடூர இன அழிப்பிற்குத் தினமும் பலியாகும் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் குறித்து பேச மறுக்கின்றன. இவர்களின் வாயைத் திறக்க, புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் நடாத்தும் தொடர் போராட்டங்களும், நீர்மேல் எழுதிய எழுத்துப் போலாகின்றன.

சிறீலங்கா துடுப்பாட்ட அணிமீது, பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடாத்திய தாக்குதலுடன் விடுதலைப் புலிகளை எப்பாடுபட்டாவது இணைத்துக்கொள்ள, பி.இராமன் போன்ற முன்னாள் இந்திய உயர்நிலை அதிகாரிகள் படும்பாடு மிகக் கேவலமாக இருக்கிறது.

தமிழ்மக்கள் அழிந்தாலும், விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலை நிறுத்தக் கூடாதென்கிற இந்திய மத்திய கொள்கை வகுப்புக் குசும்பர்களின் போக்கில், துளியளவு மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதையே இராமனின் கூற்று புலப்படுத்துகிறது.

கருணா - பிள்ளையான் தலைமை ஏற்றிருக்கும் கிழக்கின் விடியலில், அதிரடிப்படையினர் மேற்கொண்ட குரூரமான பாலியல் வல்லுறவில் சிதைந்து போன, 14 வயது சிறுமியின் நிலைகுறித்து இந்த இராமன் போன்ற ஆதிக்க உணர்வுமிக்க அறிவாளிகள் பேச முன்வரமாட்டார்கள்.

இக்கொடுஞ்செயல்பற்றிய ஆதாரங்களைத் திரட்டிய, பக்கத்துவீட்டுப் பெண்மணியும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அரசபடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிழக்கிலும் குடாநாட்டிலும் உள்ள தமிழ் மக்கள் அனைவரையும், பயங்கரவாத தடுப்பு சந்தேக நபர்கள் போன்றே மகிந்த அரசு கருதுகிறது.யாழ். மனித உரிமை ஒன்றியத்தினூடாக சிறைச்சாலைகளில் தஞ்சம் புகும் தமிழ் மக்களின் கையறு நிலையும் அரசின் பேரினவாத ஜனநாயகத்தை அம்பலமாக்குகிறது.

இத்தகைய ஜனநாயக கேலிக்கூத்துக்களுக்கு உடுக்கடிக்கும் ஜோன், ஹோம்ஸ் போன்ற மனித உரிமைச் சங்க மேதாவிகள், வவுனியாவரை சென்று, மந்திரி பிரதானிகள் புடைசூழ மக்களைச் சந்தித்து, முழுமையான அறிக்கைவேறு சமர்ப்பிக்கின்றார்கள். இந்தவருட இறுதிக்குள், இடம்பெயரும் மக்களை, மறுபடியும் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுவோமென பேரினவாதச் சிங்களம் கூறுவதை, ஜோன் ஹோம்ஸ் நம்புகிறாரா அல்லது நம்புவதுபோல் நடிக்கிறாராவென்று புரியவில்லை.

2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த சமாதான ஒப்பந்தத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலயங்களை ஓரிரு மாதங்களிற்குள் அகற்ற வேண்டுமென்கிற சரத்து ஒன்றும் உள்ளடக்கப்பட்டிருந்தது.மக்களின் அடிப்படையான நிலம் குறித்த வாழ்வாதாரப் பிரச்சனையை தீர்ப்பதற்கு, மேற்குலகின் ஆசி நிறைந்த நோர்வே அனுசரணையாளர்களாலும் இயலவில்லை. அதேவேளை போர்நிறுத்த ஒப்பந்தம், சிங்களத்தால் ஒருதலைப்பட்சமாக கிழித்தெறியப்படாத காலத்தில்தான், பூர்வீக தமிழ்குடி மக்களை சிங்களம் விரட்டியடித்து, அதி உயர் பாதுகாப்பு வலயத்தை சம்பூரில் நிறுவியது.

ஆகவே சொந்த நிலங்களில் வாழும் உரிமை மறுக்கப்பட்டு, சிங்களத்தின் எறிகணை வீச்சுக்களால் கொல்லப்பட்டும் மக்களை, இடம்பெயர்ந்து வவுனியாவிற்கு வருமாறு அழைப்பதற்கு, ஐ.நா. சபைக்கு தார்மீக உரிமை இருப்பதாகத் தெரியவில்லை. சூடானிலுள்ள டாபூரில் குவிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒருவித நியாயத்தையும், வன்னித் தமிழ் மக்களுக்கு இன்னொருவிதமான நியாயத்தையும் பிரயோகிக்க முயல்கிறாரா ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான உதவிப் பொதுச் செயலாளர் திரு. ஜோன் ஹோம்ஸ் அவர்கள்.

அண்மையில் ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட்ட சிறீலங்கா விவகாரம் குறித்து இவர் முன்வைத்த கருத்துக்கள்யாவும், முரண்பாட்டுக் குவியலின் மொத்த உருவமாகத் தென்பட்டது.

அதாவது வெளியேற முயலும் மக்களை, விடுதலைப் புலிகள் தடுப்பதாகவும், தம்மிடம் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுகின்றார். அதேவேளை அங்கு ஏராளமான மக்கள் தினமும் கொல்லப்படுவதாகவும், அதனை உறுதி செய்யக்கூடிய சுயாதீன தகவல்களை பெற முடியாமல் இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

மனிதாபிமானத் தொண்டு நிறுவனங்களிற்கும், சுயாதீனமாகச் செயற்படும் ஊடகவியலாளர்களுக்கும் அங்கு செல்ல அரசால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக் காட்டும் திரு. ஜோன் ஹோம்ஸ் அவர்கள், வன்னி மக்களை விடுதலைப்புலிகள் மனிதக் கேடயமாகத் தடுத்து வைத்துள்ளார்கள் என்கிற விவகாரத்தை எந்த ஆதாரங்களின் அடிப்படையில் பெற்றுக்கொண்டார் என்பதே எம்முன் எழுந்துள்ள பலத்த சந்தேகமாகும்.

அண்மையில் சிங்களத்தின் பாதுகாப்பு அமைச்சின் ஊடகத்துறை புனைந்த தற்கொலைத்தாக்குதல், துப்பாக்கிச் சூட்டுக் கதைகளின் அடிப்படையிலேயே ஹோம்சின் ஆதாரங்களிற்கான தரவுகள் இருப்பதை புரிந்து கொள்ளலாம்.

இவர் உரையின் இறுதியில் அரசியலும் பேசப்பட்டுள்ளது. அரசிற்குக் கிடைத்திருக்கும் சரித்திரபூர்வமான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, யுத்தம் முடிவடைந்ததும், அரசியல் தீர்வொன்றினை முன்வைக்குமாறும் அவர் கூறியுள்ளார்.

பன்னாட்டு உயர் சபையின் மனிதாபிமானக் காவலரும், புலி அழிவை விரும்புகிறார் போல் தெரிகியது.

விடுதலைப்புலிகள் மீதான இறுதி முற்றுகை யுத்தத்தை ஆரம்பிக்க முன்பாக, அங்குள்ள மக்கள் வெளியேறும் வகையில், மனிதாபிமான போர் நிறுத்த கால அவகாசமொன்று வழங்கப்படவேண்டுமென சிங்களத்தை வலியுறுத்தும் ஜோன் ஹோம்ஸ், இணைத்தலைமை நாடுகளின் வேண்டுகோளை எதிரொலிப்பது போலிருக்கிறது.

னப்படுகொலை வடிவத்தை தொட்டுள்ள உள்நாட்டு யுத்தம், நாடளாவிய ரீதியில் விரிந்து செல்லக்கூடிய வாய்ப்பினை எட்டியுள்ளதாக, பல மேற்குலக அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கிறார்கள்.

சிங்களத்தின், 61 ஆண்டுகால இன அழிப்பின் வடிவங்கள், இன்று உச்சநிலை அடைந்திருக்கிறது. அதற்குத் தூபமிடும் இந்தியாவும், அனுசரணை வழங்கும் வல்லரசுகளும் ஐ.நா மனிதாபிமான சங்கங்கள் ஊடாக தமது பிராந்திய நலன்களை உறுதிப்படுத்த முனைகின்றன.சுனாமி காலத்தில், கிண்ணியாவரை சென்ற கோபி அனான், வன்னிக்குச் செல்லவில்லை. வவுனியா வரை சென்ற ஜோன் ஹோம்ஸ் முல்லைத்தீவிற்கு செல்லவில்லை. ஆகவே ஒரு விடயம் மட்டும் தெளிவாகப் புரிகிறது.

விடுதலைப்புலிகளை இன்னொரு ஹமாஸ் போன்று அணுக, இவர்கள் முயற்சிக்கிறார்கள். சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளைத் தனிமைப்படுத்தவும், சிங்களத்தின் புலி அழிப்பிற்கு ஆதரவு வழங்கவும், இச்சக்திகள், தமது காய்களை நகர்த்துகின்றன. இச் சதியினை முறியடிக்க வேண்டிய பாரிய பொறுப்பு, தற்போது தமிழக, புலம்பெயர் தமிழ்மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

ஆடுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஓநாய்களை விரட்ட, புலிகளின் வரவே சரியாக அமையும்.சகலவழிகளிலும், தமது தேசியத் தலைமையை பலமுறச்செய்வதே, தமிழ்மக்களிற்கான ஒற்றைத் தெரிவாக இருக்கிறது.சர்வதேசம் எமக்கு வழங்கும் கனதியான, இறுதியான செய்தியும் அதுதான்.

Comments