வவுனியா அகதி முகாம் நிலை கவலை அளிக்கின்றது - ஆயர்கள் பேரவை

வவுனியாவில் உள்ள வன்னி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் கவலை அளிக்கின்றது என இலங்கை ஆயர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அண்மையில் வவுனியாவில் உள்ள முகாமகளுக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த நிலையில் இக்கருத்தை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தேசிய மட்டத்தில் தேவாலங்களுக்கு இடையில் ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றை செயல்படுத்தி அகதிகளுக்கு உதவ வேண்டும் என்னும் தி்ட்டத்தினையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள்:

சிறுவர்கள் தமது பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். நோயாளர்கள் காயமடைந்தவர்கள் உதவிகள் இன்றி அவஸ்தைப்படுகின்றார்கள். சுகாதார வசதிகள் மிகவும் மோசமாக உள்ளன.

தமது உறவினர்கள் நிலை பற்றி தெரியாது அகதிகள் தவித்து வருகின்றனர்.

அவர்களின் போசாக்கு ஆரோக்கியம் மிகவும் மோசமாக உள்ளன. இது வெகுகாலம் அதாவது பல வருடக்கணக்கில் நீடிக்கலாம்.

வவுனியா வைத்தியசாலையில் உள்ள பலரையும் பார்வையிட்டோம். அவர்களில் பலர் அவயவங்களை இழந்துள்ளனர்.

அகதிகளின் கல்வி நடவடிக்கைகள் மிகவும் மோசமாக உள்ளன. பாடசாலைகள் முகாம்கள் ஆக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் எவரும் அங்கு இல்லை.

அத்துடன் மக்களை அதிர்ச்சி, மற்றும் துன்பத்தில் இருந்து மீட்கும் பிரார்த்தனைகள் சமய நடவடிக்கைகள் அங்கு இல்லாமையால் மக்கள் ஆறுதல் அடைய வழி இல்லாமல் போயுள்ளது.

வவுனியா செல்ல ஆயர்கள் உதவி அரச அதிபர் பணிமனை ஊடாக எழுத்து மூலம் அனுமதி பெற்றிருந்த போதிலும் சிறீலங்கா அரசால் நடாத்தப்பட்ட ஒரு முகாமிற்கு மாத்திரமே செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் ஆயர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

படை அதிகாரிகளும், சிறீலங்கா அரசுக்கு நெருங்கமானவர்களுமே அங்கு செல்ல முடியும் என படையினரால் தாம் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments