இலங்கைப் போரும் இந்தியாவின் நிலைப்பாடும்

இலங்கைத் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இந்திய அரசு பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் எனும் போக்கினையே கடைப்பிடித்து வருகின்றதென்பதைக் கண்டுகொள்வதற்கு றொக்கற் விஞ்ஞானம் வேண்டியதில்லை. அன்று ஆரம்பகாலகட்டத்தில்"அன்னை' இந்திராகாந்தி மீது இலங்கை தமிழ்த் தலைமைகள் அதீத நம்பிக்கை வைத்துச் செயற்பட்டு வந்தன. அன்று இந்திராகாந்தி அரசாங்கம். இலங்கையில் ஜெயவர்த்தன அரசாங்கத்தோடு கொண்டிருந்த பகைமை காரணமாக குறிப்பாக தமிழ் இளைஞர் குழுக்களை உள்வாங்கி ஆயுதப் பயிற்சி அடங்கலாக பல்வேறு உதவிகளை வழங்கி வந்தது. அதாவது ஜெயவர்த்தன அரசாங்கத்தை மட்டந்தட்டி வைத்திருப்பதற்கு இந்திராகாந்தி கையாண்ட யுக்தியாகவே அத்தகைய செயற்பாடு அமைந்திருந்தது. எனவே, இந்திய மத்திய அரசு என்றாலும் சரி, தமிழக மாநில ஆட்சியாளர் என்றாலும் சரி அன்று முதல் இன்றுவரை இலங்கை தேசிய இனப்பிரச்சினையை தமது அரசியல் வியாபாரப் பண்டமாகவே பாவித்து வந்துள்ளன.

தமிழக முதல்வர் கருணாநிதி, தனது அரசியல் நலன் கருதி அதாவது தி.மு.க.ஆட்சியைத் தக்கவைத்து தனது வாரிசுவிடம் ஒப்படைப்பதே அவரின் குறிக்கோளாயுள்ளது. அதன் பொருட்டு இலங்கைத் தமிழர் சார்பாக சில நடவடிக்கைகள் பிரசாரரீதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் யுத்தநிறுத்தம் செய்ய வேண்டுமென மத்திய அரசு அழுத்தம் கொடுக்கவேண்டுமென்று வலியுறுத்தி மாநில சட்டசபையில் இரு தடவைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மட்டுமல்லாமல் "உண்ணாவிரதம்', "மனிதச் சங்கிலி' போன்ற போராட்டங்களும் நடத்தப்பட்டன. ஆயினும் மன்மோகன் சிங் அரசாங்கம் செவிசாய்க்க வில்லை. முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழக மாநிலக் கட்சித் தலைவர்கள் டில்லி சென்று பிரதமர் சிங்கைச் சந்தித்து யுத்தநிறுத்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாயினும் அதுவும் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. இந்தியாவின் இறைமை இந்திய எல்லைக்கு அப்பால் இல்லை என ஆளும் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே யுத்த நிறுத்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டது.

26.10.2008 ஆம் திகதி ஜனாதிபதி ராஜபக்ஷவின் சிரேஷ்ட ஆலோசகரும், சகோதரருமாகிய பசில் ராஜபக்ஷ (பா.உ.) டில்லி சென்று வெளிநாட்டமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்தபோது மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து அல்லலுறும் மக்கள் தொடர்பாக இந்திய அரசு தரப்பில் கவலை வெளிப்படுத்தியது தவிர 800 தொன் நிவாரணப் பொருட்கள் இந்திய அரசினால் வழங்கப்படும் என அறிவித்ததைத் தவிர, ஒப்பனைக்காக நிலையான அரசியல் தீர்வு காண்பதன் அவசியம் பற்றிக் கலந்துரையாடியதைத் தவிர, யுத்தநிறுத்தம் தொடர்பாக முகர்ஜி மூச்சுவிடவில்லை. அதன் பின் இந்திய பாராளுமன்றத்தில் முகர்ஜி உரையாற்றியபோது, இறைமை கொண்ட இலங்கை அரசு மீது யுத்தநிறுத்தக் கோரிக்கையைத் திணிக்க முடியாதென திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். யுத்தத்தினைக் கொண்டு நடத்துவதற்கு உறுதுணையாய் இருந்து வந்துள்ள இந்திய அரசுக்கு ராஜபக்ஷ அரசாங்கம் யுத்த நிறுத்தம் செய்யவேண்டுமென அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் நிச்சயமாக இருக்க முடியாது.

விடுதலைப் புலிகளின் யுத்தநிறுத்த கோரிக்கை நிராகரிப்பு

இன்று இலங்கை அரசபடைகள் கைப்பற்றுவதற்கு புதுக்குடியிருப்பு பிரதேசம் மட்டும் எஞ்சியிருக்கும் நிலையில் கடுமையான சண்டையும் இருதரப்பு இழப்புக்களும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் வகைதொகையின்றிக் கொல்லப்பட்டும், காயப்படுத்தப்பட்டும் வரும் நிலையில் விடுதலைப் புலிகள் சார்பில் விடுத்த யுத்தநிறுத்த கோரிக்கை எதிர்பார்க்கப்பட்டது போலவே நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்றவாரம் பிரணாப் முகர்ஜி முதலில் கொல்கத்தாவிலும், பின்னர் தூத்துக்குடியிலும் உரையாற்றிய போது விடுதலைப் புலிகள் விடுத்த யுத்தநிறுத்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவேண்டியதாகுமெனக் கூறியுள்ளார். இவ்வாறாக இந்திய அரசு யுத்தநிறுத்த வேண்டுகேள் விடுத்துள்ளதாகவும் முகர்ஜியின் வார்த்தைகள் புதிய காற்றின் நறுமணமாக வீசுகின்றதெனவும் கருணாநிதி குறிப்பிட்டிருப்பதானது கேலிக்கூத்தானதாயுள்ளது.

வன்னியில் சிக்குண்டுள்ள மக்கள் வெளியேறுவதற்கு வசதியாக விடுதலைப் புலிகள் யுத்தநிறுத்தத்தைப் பாவித்துக் கொள்வது அவசியம் என முகர்ஜி கூறியுள்ளது தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து கடுமையான விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் இந்தியா கைவைக்கக் கூடாது என விடுதலைப் புலிகள் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் "ரைம்ஸ் நௌ'(கூடிட்ஞுண் ணணிதீ) எனும் இதழுக்கு வழங்கிய மின்னஞ்சல் செவ்வியில் தெரிவித்துள்ளார். தமிழரைத் தமது தாயகத்திலிருந்து அல்லது பாரம்பரிய வதிவிடங்களிலிருந்து வெளியேற்றுவது பிரமாண்டமான தப்பு என நடேசன் சுட்டிக் காட்டியுள்ளார். உதாரணமாக பலஸ்தீனத்தில் காஸாவில் வதியும் மக்களும் இவ்வாறாக வெளியேற்றப்பட வேண்டுமென ஐ.நா.அல்லது இந்தியா அல்லது வேறு எந்தவொரு நாடாவது வேண்டிக் கொள்ளுமா? மற்றும் முட்கம்பிக் கூண்டுகளுக்குள் மக்கள் தாமாக விரும்பிச் சென்று விடுவார்களென எதிர்பார்க்கப்படுகிறதா? என்றும் நடேசன் வினா எழுப்பியுள்ளார். வன்னியிலிருந்து வந்து வவுனியா அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் நிலைகண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் தான்கூட பாதிக்கப்பட்ட மக்களோடு சுயாதீனமாகக் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு இருக்கவில்லையென சென்ற மாதம் இலங்கை விஜயம் செய்திருந்தவராகிய ஐ.நா.பிரதி செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் கவலையப்பட்டதாக அறிக்கைகள் தெரிவித்தன.

பிரச்சினைக்கு அரசியல் தீர்வு எங்கே?

பிரச்சினைக்கு அரசியல் தீர்வின் மூலமே நிலையான இறுதி முடிவு எட்டமுடியும், அதற்கு எல்லா சமூகங்களினதும் அக்கறைகளையும் அபிலாஷைகளையும் உள்வாங்கும் அணுகுமுறையே அவசியமென குறிப்பாக பிரித்தானிய அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டமைச்சர் டேவிட் மிலிபான்ட் தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்தம் + எனும் அடிப்படையில் அரசியல் தீர்வு முன்னெடுக்கப்பட வேண்டுமென இந்திய அரசு கூறிவருவது போலவே இணைத்தலைமை நாடுகள் (அமெரிக்கா, ஐரேப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே) கூறிவருகின்றன. உண்மையில் பிரச்சினை என்னவென்றால் அரசியல் தீர்வு காண்பதற்கு அரசாங்கத்திடம் அக்கறையோ, அரசியல் உறுதியோ கிடையாது என்பதாகும். இது இன்றைய அரசாங்கத்திற்கு மட்டுமல்ல கடந்த கால எல்லா அரசாங்கங்களுக்கும் பொருந்தும். மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தலைமையில் நியமித்துள்ள சர்வகட்சி பிரதிநிதிகள் குழு (அககீஇ) குறிப்பாக சர்வதேச சமூகத்தைத் திசைதிருப்புவதற்கான யுக்தியாக அல்லது கேடயமாகப் பாவித்து வருகின்றதென்பது மிகத் தெளிவு. உதாரணம் அண்மையில் அமெரிக்க செனற் சபை உபகுழுத் தலைவர் பொப் காசே தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் ஆர்வம் கொழும்பிடம் இல்லையெனக் கூறியதை எடுத்துக் காட்டலாம்.

படையணிகளில் விடுதலைப் புலிகள் சிறார்களைச் சேர்த்து வைத்திருக்கும் விடயம் தொடர்பாக ஐ.நா. சிறுவர்கள் அமைப்பான க்Nஐஇஉஊ தேவையானளவு செயற்படத் தவறிவிட்டதாக அண்மையில் ஜனாதிபதி ராஜபக்ஷ சாடியிருந்தார். சற்று பின்னர் அவர் க்Nஐஇஉஊ பங்களிப்புச் செய்துள்ளதாகப் பாராட்டியும் பேசியுள்ளார். ஜனாதிபதியின் ஆதங்கம் என்னவென்றால் விடுதலைப் புலிகள் தமது படையணிக்குத் திரட்டியுள்ளவர்களில் 60 வீதமானவர்கள் சிறார்கள் எனவும் அது இலங்கைக்கு களங்கம் விளைவித்துள்ளதெனவும் வருத்தம் தெரிவித்திருந்தார். எனவே, பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதும் சிறார்கள் பாதுகாக்கப்படுவதும் ஏககாலத்தில் முன்னெடுத்துச் செல்லப்படவேண்டிய பணியாயுள்ளதெனவும், தேசிய ரீதியில் இது நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி ராஜபக்ஷ அறைகூவல் விடுத்துள்ளார். @சிறுவரை மீட்டு வாருங்கள் (ஆணூடிணஞ் ஞச்ஞிடு tடஞு ஞிடடிடூஞீ)என்பது தான் இது தொடர்பாக அவர் வெளிப்படுத்தியுள்ள தொனிப்பொருள் ஆகும். இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள் என்ற வகையில் சிறார்களையிட்டு ஜனாதிபதி ராஜபக்ஷ காட்டும் அக்கறையானது பெரிதும் வரவேற்புக்குரியதாகும். ஆனால், அதே போல் அரசாங்கம் துடைத்தெறிய வேண்டுமெனக் கங்கணம் கட்டி நிற்கும் பயங்கரவாதத்திற்கு எது வித்திட்டதென்று ஆராயப்பட்டு அதற்கான சரியான பரிகாரம் துணிந்து தேடப்பட்டால் யுத்தம் தொடர்வதோ சிறார்கள் படையணிகளில் திரட்டப்படுவதோ தேவையற்றதாகி விடும். விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்து சரணடைய வேண்டுமென அரசாங்கம் நிபந்தனை விதித்துள்ளது. அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்தால் தானாக யுத்த நிறுத்தம் வந்து விடும் என கடந்த சில நாட்களாக வெளிநாட்டமைச்சர் போகொல்லாகம அடிக்கடி கூறி வருகின்றார்.

யுத்தம் முடிவுக்கு வருகின்றது. இன்னும் ஒரு சில தினங்களில் விடுதலைப் புலிகள் முற்றாக ஒழித்துக் கட்டப்பட்டு, விடுவார்களென அரசாங்கம் திடமாக நம்பினால் அவர்களை ஏன் சரணடையச் சொல்ல வேண்டும்? அது மோதல் பிராந்தியத்தில், புதுக்குடியிருப்பில் சிக்குண்டிருக்கும் மக்கள் மனிதாபிமான ரீதியில் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று சொல்லலாம். அங்கே 250,000 மக்கள் சிக்குண்டிருந்தனர் எனக் கூறப்பட்டது. அவர்களில் ஏறத்தாழ 35,000 பேர் வெளியேறி வவுனியாவில் 13 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால், அங்கே இன்னும் 70,000 மக்களே உள்ளனர் என அரசாங்கம் கூறுகின்றது. அதாவது, வான் வழியாக கணக்கிட்டுள்ளதன் பிரகாரம் அங்கே எஞ்சியிருப்பது 70,000 மக்கள் தான் எனக் கூறப்படுவது புரியாத புதிராயிருக்கிறது. இதனிடையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மொத்த சனத்தொகை 479,000 என சில அறிக்கைகள் அண்மையில் வெளிப்படுத்தியிருந்தன. இவற்றையெல்லாம் அரசாங்கம் இதயசுத்தியாக ஆராய வேண்டுமே ஒழிய தன்னிச்சையாகத் தரவுகளை வெளிப்படுத்துவது நிச்சயமாக தர்மமாகாது.

3 தசாப்தமாகச் சாத்வீகப் போராட்டமும், அடுத்த கால் நூற்றாண்டாக ஆயுதப் போராட்டமும் தமிழர் வேண்டி நின்ற பயனைக் கொண்டு வரவில்லை. இது விடயமாக ஏராளமான கட்டுரைகளும் கருத்துக்களும், பலரால் வெளிக்கொணரப்பட்டுள்ளன. அவற்றுள் விஷமத்தனமானவை தவிர, மேலெழுந்தவாரியாகவும் கருத்துக்கள் வெளிவந்துள்ளன. உதாரணமாக, நேற்று முன்தினம் இந்திய (சென்னை) அரசியல் ஆய்வாளர் N. சத்தியமூர்த்தி எழுதிய கட்டுரையில், ?அககீஇ?? தலைவர் திஸ்ஸ வித்தாரண தமது பணி நிறைவு பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார். ஆக, புரையோடிப் போயுள்ள இனத்துவ ( உtடணடிஞி) பிரச்சினை, யுத்தம் மற்றும் வன்முறைக்கு விரைவில் ஒரு அரசியல் தீர்வு எட்டப்படும் என்ற புதிய ஒளி தெரிகின்றது. இலங்கை அரசாங்கம் இதனை அர்த்தமுடன் முன்னெடுக்குமாயின், விடுதலைப்புலிகள் பொது மக்களை வெளியேற விட்டு, ஆயுதங்களைக் கீழே வைத்து பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பலாம் என்று கூறியுள்ளார். முதலாவதாக அககீஇ ஒரு கவசம் மட்டுமே என்பது ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. மற்றும், அக்குழுவில் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி. மற்றும் ஓரிரு கட்சிகள் பங்கு பற்றவில்லை. அடுத்தது இறுதியில் ஜனாதிபதி எதை விரும்புகின்றாரோ அதுவே அககீஇ யின் யோசனையாக அமையும். இவற்றையெல்லாம் பிரபல ஆய்வாளர்கள் மறந்து விடக் கூடாது.

இந்திய ஆளும் வர்க்கத்தினரை நம்பியது போதும்

நிற்க, தமிழ்த் தலைமைகள் இந்திய ஆளும் வர்க்கத்தினரை நம்பி ஏமாந்தது போதும். எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவி, பாரதிய ஜனதா கட்சி (ஆஒஆ) பதவிக்கு வந்தால் இலங்கை அரசாங்கத்தின் கையை முறுக்கி தமிழர் விடிவுக்கு கை கொடுக்கும் என எண்ணினால் அது மிகத் தவறு. மற்றும் வெறுமனே ஆயுதப் போராட்டம் மட்டும் விடுதலையைக் கொண்டு வராது. சிங்கள பேரினவாதத்தின் போர்வையில் ஏமாற்றப்பட்டு வரும் இலட்சக் கணக்கான ஏழை எளிய சிங்கள மக்களின் பக்கம் தமிழர் விடுதலைப் போராட்டம் பார்வையைச் செலுத்தி பொதுப் போராட்டங்களை இணைந்து நடத்தி பேரினவாதத்தைப் பின் வாங்கச் செய்வது அத்தியாவசியம் என்பதை இன்றைய கட்டத்தில் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

வ.திருநாவுக்கரசு

Comments