தமிழீழம் மலர்ந்தே தீரும்; பிரபாகரனை அசைக்க முடியாது: மலேசிய எதிர்க்கட்சி தலைவர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சிறிலங்கா அரசாங்கத்தினால் அசைக்கக்கூட முடியாது என்று மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் தலைவர் கர்ப்பால் சிங் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பினாங்கு மாநிலத்தில் ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட நிதி திரட்டும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்று வரும் இனப் படுகொலையைக் கண்டிக்காத உலக நாடுகளைக் குறிப்பாக இந்தியாவை கர்ப்பால் கடுமையாக சாடினார்.

தமிழக முதல்வர் மு.கருணாநிதி எங்கே போய்விட்டார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எங்கே போய்விட்டார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் நடைபெறும் படுகொலையை தடுக்காத இந்த இருவரும் உலகத் தமிழர்களிடம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளனர். இலங்கையில் இடம்பெற்று வரும் இன வெறியாட்டத்தைக் கண்டிக்கக் கூடத் தயங்கும் இந்தியாவை நினைத்து வேதனையடைவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்ப் பிரச்சாரங்களை மக்கள் நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளை அழித்து விடலாம் என்று கனவு காணும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன். பிரபாகரனை உங்களால் அசைக்கக்கூட முடியாது. பிரபாகரன் ஓடிவிட மாட்டார். தமிழீழழ் மலரும் வரை அவர் போராடுவார். தமிழீழம் மலர்ந்தே தீரும்.

பிடல் காஸ்ட்ரோவை தீவிரவாதி என்று கூறிய அதே உலகம்தான் இன்று அவரை தேசியவாதி என்று போற்றுகிறது. பிரபாகரனையும் நாளைய சரித்திரம் போராட்டவாதி எனவும் தேசியவாதி எனவும் போற்றுமே தவிர தீவிரவாதி என்று ஒரு போதும் கூறாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நண்பர்களே, இன்று ஈழத் தமிழர் இன்னல் துடைக்க ஒன்று சேர்ந்துள்ள நாம், அள்ளி கொடுக்கா விட்டாலும் கிள்ளியாவது கொடுப்போம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments