சிறுமி மீது பலாத்காரம் : வெல்லாவெளியில் அச்சநிலை

மட்டக்களப்பு வெல்லாவெளி கிராமத்தில் 14 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை அதனைத் தொடர்ந்து இடம் பெற்ற பெண்களுக்கு எதிரான இரு வன்முறைச் சம்பவங்களையடுத்து அக்கிராம மக்களிடையே ஒருவித அச்ச நிலை தோன்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை வீட்டில் தாயாருடன் இருந்த வேளை 14 வயது சிறுமியொருவர்(பருவமடைந்து 25 நாட்களே ஆன) சீருடையினரால் பகல் நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு கணவருடன் வீட்டிலிருந்த வேளை, இனம் தெரியாத நபர்களினால் கடத்தப்பட்ட சமூக சேவகி சிவகுமார் மகாதேவி (வயது 33) தலையில் வெட்டியும் ,கழுத்து நெரித்தும் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டார். இவ்விரு சம்பவங்களையடுத்தே இந்த அச்ச நிலை தோன்றியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

பாலியல் வல்லுறவுக்குள்ளான சிறுமி தாயாருடன் இருந்த வேளை அங்கு வந்த சீருடை அணிந்த நபரொருவர் தாயாரை வெளியேற்றிவிட்டுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற பின்பு தற்போது சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அறிவுறுத்தலின் பேரில் பாதுகாப்பான இடமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார் .

இது குறித்து வெல்லாவெளி பொலிஸாரின் கவனத்திற்குத் தாம் கொண்டு வந்தபோது, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைதாகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவது பற்றித் தமக்கு தெரிவிக்கப்பட்டதாகப் பிரதேச சபைத் தலைவர் கே.மகேந்திரன் தெரிவிக்கின்றார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று 2ஆம் நாள் திங்கட்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்ட சிவகுமார் மகாதேவியின் வீட்டுக்குச் சென்ற 3 நபர்கள் அவரது கணவரைக் கட்டிப் போட்டு விட்டு, நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்த பின்னரே இக் கொலையைச் செய்துள்ளனர்.

இப்பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, கழுத்து நெரிக்கப்பட்டே இவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தப்பட்ட தடயங்கள் ஏதும் இல்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. மரண விசாரணை நடத்திய மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதவான் இம்மரணம் கொலை எனத் தீர்ப்பளித்துள்ளார்.

Comments