யானையைப் பார்த்த குருடன் போலன்றி…!



சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்க்கின்றது தான் கூறுவது எல்லாம் உலகம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று. இதற்கும் அப்பால் தமது நிலைப்பாட்டிற்கு - தமது விருப்பிற்கு மாறானவை என்பதெல்லாம் உண்மைக்கு மாறானவை - பொய்யான பிரசாரங்கள் என்பது அதன் நிலைப்பாடாகும்.

இந்த வகையிலேயே வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக தாம் வெளியிடும் தகவல்களையும் உலகம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. இதற்கு மாறானவகையில் செயற்படுவோர், செயற்படும் அமைப்புக்கள், செயற்படும் நாடுகள் என்பன கடும் கண்டனத்திற் கும் விமர்சனத்திற்கும் உட்படுகின்றன.

இதேசமயம் தனது படுகொலைகள் அராஜகங்கள் என்பனவற்றிற்குப் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை போர் என அது விளக்கமளிக்க முற்படு கின்றது. இதன் அடிப்படையில் எத்தகைய அராஜகத்தைப் புரிந்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்றரீதியில் உலகம் இதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என அது எதிர்பார்க்கின்றது.

இதனை ஏற்றுக்கொள்ளாது சிறிலங்கா அரசின் நடவடிக்கைகள் குறித்து விமர்ச்சிப்பவர்கள், அமைப்புக்கள் யாவும் கண்டனத்திற்குரியவையாகும். இந்தவகையில் இறுதியான கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளவர் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களாவர்.

ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் இராணுவ நடவடிக்கையினால் கொல்லப்பட்டோர,; காயமடைந்தோர் தொடர்பாக வெளியிட்ட தகவல்கள் உண்மைக்கு மாறா னவை, உறுதிப்படுத்தப்படாதவை என முதலில் குறை கூறிய சிங்கள ஆட்சியாளர்கள் தற்பொழுது ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பயங்கரவாதத்திற்கு துணை போவதாகக் குற்றம்சாட்டும் அளவிற்கு வந்துள்ளனர்.

சிறிலங்கா ஆட்சியாளர்கள் இதுபோன்ற குற்றச் சாட்டுக்களை - அதாவது ஒருவரின் அறிக்கை தமக்குப் பாதகமாக இருக்கையில் - சுமத்துவது என்பது ஒன்றும் ஆச்சரியத்திற்குரியதல்ல. சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து கண்டனம் வெளியிட்ட சகல அதிகாரிகளும் இத்தகைய கண்டனங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இதன் உச்சமாக விடுதலைப் புலிகளின் ஊடுருவல் புலிகளின் கைக்கூலிகள் என்றுகூட பழி சுமத்தப்படுவதுகூட உண்டு.ஆனால் உலகில் இன்று சிறிலங்கா அரசாங்கம் கூறுவது ஒரு சில நாடுகளைத்தவிர - வேறு எவரும் நம்புவதற்குத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.

அதாவது சிறிலங்கா அரசாங்கம் கூறுவதை மட்டும் ஏற்றுக்கொள்ள அவை தயாராக இல்லை. இதன் வெளிப் பாடே போர் குறித்த அரசாங்கத்தின் விளக்கங்களையும் கருத்துக்களையும் மேற்குலக இராஜதந்திரிகள் ஏற்றுக்கொள்ளாமையாகும்.

அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களுக்கு பாதிப்பின்றி இராணுவம் போர்புரிந்து வருவதாக மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவின் கூற்றுக்களை அமெரிக்கா உள்ளிட்ட இராஜதந்திர மட்டத் திலான அதிகாரிகளின் நிராகரிப்பாகும்.

இந் நிராகரிப்பினால் சிறிலங்கா அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் என்று கூறிவிடமுடியாது. எனினும் சிறிலங்கா அரசாங்கத்தை உலகம் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளது என்பதை உணரமுடியும்.

இதன் வெளிப்பாடானது சிறிலங்கா அரசாங்கம் கூறுவதை யானையைப் பார்த்த குருடனைப்போல் இனி யும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றே கொள்ளத் தக்கதாகும். இது ஒடுக்கப்படும் தமிழ் மக்களுக்கு சந்தோசம், ஆறுதல் தரும் ஒன்றே.

நன்றி - ஈழநாதம்

Comments