குழந்தைகள் சிறுவர்கள் கற்பிணிப் பெண்கள் நோயாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.
கற்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மாருக்கும் தேவையான போசாக்கு உணவுகள் மற்றும் நோயாளர்கள் குழந்தைகளுக்கான போசாக்கு உணவுகள் எதுவும் இல்லா நிலையில் பொது அமைப்புக்களினால் வழங்கப்படுகின்ற கஞ்சியை மட்டும் குடித்து உயிர் வாழும் நிலை காணப்படுகின்றது.
தினமும் மூன்று வேளையும் கஞ்சியைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நிற்கும் மக்களை இலக்குவைத்து ஸ்ரீலங்கா படைகள் தாக்குதல்களை நடாத்தி படுகொலை செய்யும் நிகழ்வுகளும் இடம் பெறுகின்றது. அவ்வாறு இறப்பவர்களையும் தாண்டிச் சென்று கஞ்சியை வாங்கினால் தான் உயிர் வாழ முடியும் என்ற நிலைதான் அங்கு காணப்படுகின்றது.
அவ்வாறு பல துன்பங்களை தாண்டிப் பெற்றுக் கொண்ட கஞ்சியை பசிக்கு உடனடியா வயிறார குடிக்கவும் முடிவதில்லை மாறாக அக்கஞ்சியை நீண்ட நேரம் வைத்திருந்து பசியினால் உடல் நடுக்கம் அடையும் பொழுதே அக்கஞ்சியை குடிக்கின்றனர். சிறுவர்களும் இவ்வாறுதான் செய்கின்றனர். ஏனெனில் அப்படியென்றால் தான் நீண்ட நாட்களுக்கு கஞ்சியை குடித்தாயினும் உயிர் வாழ முடியும் என்ற எதிர்பார்ப்பினாலும் அவ்வாறு இறப்பதற்கு முன்னர் புலம் பெயர்ந்த மக்களின் முயற்சியினால் தமக்கு தேவையான உணவுகள் போதுமானளவு வந்து சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கையினாலுமேயாகும்.
சிறுவர்கள் இயக்கத்தில் இணைக்கப்படுவது தொடர்பாக நீலிக் கண்ணீர் வடிக்கும் அமைப்புக்கள் வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள 60000 திற்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் பல்லாயிரக் கணக்கான சிறுவர்களினதும் போசாக்குணவு பற்றி எவ்வித அக்கறையும் இன்றி இருப்பது மிகவும் கவலையளிக்கின்றது.
சுத்தமான நீர் என்பது மிகப் பெரும் பிரச்சினையாகவே உள்ளது. குடிப்பது முதல் சமையல் உட்பட எந்தத் தேவைக்கும் தண்ணீரைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. தரப்பாள் கொட்டகைகளுக்குள் வாழும் மக்கள் வெப்பம் காரணமாக அதிக தாகம் ஏற்பட்டாலும் போதியளவு தண்ணீர் அருந்த முடிவதில்லை. இதனால் சிறுநீரகத்துடன் தொடர்புடய நோய்த் தொற்றுக்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது.
பாதுகாப்பான கழிப்பறைகள் இன்மையாலும் கழிவுகள் அகற்றும் பொறிமுறைகள் இன்மையாலும் அதிகளவு மக்கள் தினமும் இறந்து கொண்டிருப்பதனாலும் பெரும் ஆபத்தான தொற்று நோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்து வருகின்றது.
இந் நிலையில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கான சமைத்த உணவுகளை பங்கிட்டு வழங்குவது, பொது மக்களுக்கு தேவையான குடிநீரை தூர இடங்களில் இருந்து கொண்டு வந்து வழங்குதல், மக்கள் மத்தியில் தொற்று நோய்கள் ஏற்படாதவாறு அவர்களது முகாம்களில் சுகாதார நிலைமைகளை ஓரளவுக்கேனும சிறப்பாகப் பேணுதல், தினமும் படையினரின் தாக்குதலில் காயமடையும் பொது மக்களை தற்காலிக வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லுதல் மற்றும் நாளாந்தம் கொல்லப்படும் பொது மக்களது உடல்களை எடுத்து அடக்கம் செய்வது வரை தபுக பணியாளர்கள் மிகப் பெரும் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடுமையான எறிகணைத் தாக்குதல்கள் மத்தியில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஏனைய சில உள்ளுர் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனது. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் தபுக பணியாளர்கள் தமது உயிரையும் துச்சமாக மதித்து செயற்பட்டும் வரும் நிலையில் அவர்கள் சந்தித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பாக இதுவரை எந்த ஒரு சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களோ அல்லது ஐநா அமைப்புக்களோ கரிசனை கொள்ளவில்லை என்பது மிகவும் வேதனையாக உள்ளது.
329000 திற்கும் அதிகமான மக்கள் அகதி முகாம்களில் தங்கியுள்ள போதிலும் கூட அந்த மக்களின் சுகாதாரம் உட்பட எந்த ஒரு நலன்களையும் கவனிப்பதற்கு ஸ்ரீலங்கா அரசு உரிய ஏற்பாடுகள் எதனையும் செய்யவில்லை என்பதுடன் ஐநா அமைப்புக்கள் கூட இன்று வரை அங்கு செல்லவில்லை. ஐநா சபையும் ஏனைய மனித உரிமை அமைப்புக்ளும் வெறும் ஆலோசளையும், வேண்டுதல்களையும், கவலைகளையும் உள்ளடக்கிய அறிக்கைகளை மட்டும் வெளியிட்ட வண்ணம் உள்ளன. நடை முறையில் ஸ்ரீலங்கா படையினரால் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பது மட்டுமல்ல மனித அவலங்களும்; அதிகரித்தபடியே உள்ளது.
கடந்த இரண்டரை மாதங்களில் ஸ்ரீலங்கா அரசாங்கம் தான் அறிவித்த மக்கள் பாதுகாப்பு பிரதேசங்களை இலக்குவைத்து அதன் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் மட்டும் 3200ற்கும் அதிகமான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 7450 ற்கும் அதிகமான தமிழ் மக்கள் படுகாயமடைந்தும் உள்ளனர். பொது மக்களை இலக்கு வைத்து ஸ்ரீலங்காப் படையினர் மேற்கொண்டுவரும் தாக்குதல்களுகளின் போது சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட எரிகுண்டுகளும் பொஸ்பரஸ் குண்டுகள் மற்றும் கொத்துக் குண்டுகளும் பல நூறு கிலொ எடையுள்ள குண்டுகளும் பயன்படுத்தப்படுகின்றது.
இந்லையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே தமது படையினர் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசு பொய் கூறி சர்வதேச சமூகத்தினை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. வன்னியிலுள்ள ஒரே ஒரு தற்காலிக வைத்தியசாலையின் களஞ்சியப் பகுதிகளை இலக்குவைத்து தாக்குதல் நடாத்திவரும் ஸ்ரீலங்கா படைகள் வைத்தியர்களையும் படுகொலை செய்வதற்கு முயற்சிக்கின்றது. அந்த வைத்தியசாலைக்கு தேவையான மருந்துப் பொருட்களை அனுப்பாத காரணத்தினால் அதுவும் மூடப்பட்டுள்ளது.
இந் நிலை நீடிக்குமாக இருந்தால் ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். இது விடயத்தில் தொடர்ந்தும் அறிக்கைகளோடு மட்டும் தங்கியிருக்காது சர்வதேச சமூகம் உரிய அழுத்தங்களைப் பிரயோகித்து
உடனடிப் போர் நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கும்
மருந்துப் பொருட்கள் அனுப்பப்படுவதற்கும் வைத்தியசாலை மீண்டும் திறக்கப்படுவதற்கும்
இடம் பெயர்ந்து வாழும் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படவும்.
உணவு மற்றும் உணவு, உடை உட்பட அத்தியாவசிய பொருட்களை உடனடியாக தேவையான அளவில் அனுப்பி வைப்பதற்கும்
இடம் பெயர்ந்த மக்களுக்கான தற்காலிக குடில்களை அமைப்பதற்குத் தேவையான கிடுகுகள் மற்றும் மரங்கள்; மற்றும் தேவையான தற்காலிக கழிப்பறைகள் என்பவற்றை அனுப்பி வைப்பதற்கும், சமையல் பாத்திரங்களை அனுப்பி வைப்பதற்கும்
சர்வதேச தொண்டு நிறுவனங்களையும் ஊடகவியலாளர்களையும் உடனடியாக அனுப்பி வைப்பதற்கும்
நடவடிக்கை எடுக்கும்படி அவசரமாக வேண்டுகின்றோம்.
செல்வராசா கஜேந்திரன்
பாராளுமன்ற உறுப்பினர்
யாழ் தேர்தல் மாவட்டம
Comments