கோப்பாய் இடம்பெயர்ந்தோர் முகாமிற்கு அருகில் அழுகுரல்கள் - மக்கள் அச்சத்தில்

சிறீலங்கா படையினரின் வல்வளைப்பினாலும், எறிகணை மற்றும் வானூர்தித் தாக்குதல் அச்சத்தினாலும் வன்னியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இவ்வாறு இடம்பெயரும்போது சிறீலங்கா படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மக்கள் சிறை வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான முகாமான கோப்பாயிலுள்ள முகாமிற்கு அண்மையாக உள்ள சில கட்டிடங்களில் இரவு நேரங்களில் அழுகுரல்கள் கேட்பதாக அப்பகுகளில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நேரங்களில் சிறீலங்கா படையினரின் உந்துருளி படைப்பிரிவினரின் நடமாட்டமும் அப்பகுதியில் உள்ளதாகவும், இதனால் தாம் வெளியில் சென்று பார்க்க அஞ்சுவதாகவும் இந்த மக்கள் கூறுகின்றனர்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த இளைஞர், மற்றும் இளம் பெண்களை வதைகளுக்கு உள்ளாக்கும்போது அவர்கள் எழுப்பும் அபய ஓலம் இதுவாக இருக்கலாம் என குறிப்பிட்ட பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, அப்பகுதியில் உள்ள அகதி முகாமிற்குள் இரவில் பிரவேசிக்கும் சிறீலங்கா படையினர் விசாரணைக்கு என தமிழ் இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் சிறுவர்களைக்கூட அழைத்துச் செல்வதாகவும், அவர்களில் சிலர் இன்னும் முகாம் திரும்பவில்லை எனவும் கூறப்படுகின்றது.

சிறீலங்கா படையினரின் பூரண மேற்பார்வையின் கீழ் இயங்கும் இவ்வாறான முகாம்களிற்குள் ஊடகவியலாளர்கள் செல்ல சிறீலங்கா படையினர் அனுமதி மறுத்து வருவதால், இவ்வாறான தகவல்கள் வெளியே கசியாது படையினரால் கச்சிதமாகத் தடுக்கப்பட்டு வருகின்றது.

இருப்பினும் குறிப்பிட்ட இந்த சம்பவங்கள் தொடர்பாக அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற படைப் புலனாய்வாளர் ஒருவர் தனது நெருங்கிய சகாவிடம் தகவல் தெரிவித்திருப்பதால், அந்த முகாமில் இளையோர் வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றமை உறுதிப்படுப்பட்டுள்ளது.

Comments