ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்தவர் வயிற்று வலியில் தற்கொலை என வழக்கு: தமிழ் உணர்வாளர்கள் மறியல்

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரி தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர் வயிற்று வலியால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதனைக் கண்டித்து கண்டித்து தமிழ் உணர்வாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் தஞ்சாவூரில் பெரும் பதற்றம் நிலவியது.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோரி அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை அடுத்த தத்தனூர் கீழவெளி சிற்றூரைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர் இராஜசேகர் (வயத 30) நேற்று முன்நாள் ஞயிற்றுக்கிழமை தீக்குளித்தார்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்பை பயனின்றி இன்று காலை இறந்தார்.
ஆனால், அவர் வயிற்றுவலி காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக உடையார்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உடையார்பாளையம் காவல்துறை ஆய்வாளர் இராமசாமி, காவல்துறை உதவி ஆய்வாளர் அன்பழகன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து எழுதப்படாத வெள்ளைத்தாளில் இராஜசேகரின் கைரேகையைப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், இராஜசேகரின் தாய் ரோகம்பாள், இராஜசேகரின் மனைவி செல்வி ஆகியோரிடமும் மிரட்டி கையெழுத்து பெற்றுள்ளனர்.

அப்போது அருகில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், காவல்துறையினரிடம், கையெழுத்து எதற்கு வாங்கியுள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு காவல்துறையினர் விடையளிக்காமல் சென்று விட்டனர்.

இது தகவலறிந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கனகராஜ், தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி மாநிலச் செயலாளர் பெ.மணியரசன், வழக்கறிஞர்கள் நல்லதுரை, கருணாநிதி, சின்னசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டப் பொருளாளர் சொக்கா.ரவி உள்ளிட்டோர் மருத்துவமனை முன்பு திரண்டனர்.

ஈழத் தமிழரைக் காக்கக் கோரி இராஜசேகர் இறந்துள்ள உண்மை நிலையை வழக்காகப் பதிவு செய்தால்தான்
அவரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்கு விடுவோம் எனக் கூறி தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்து தஞ்சை நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் இளம்பரிதி நிகழ்விடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் குற்றவியல் நடைமுறை சட்டம் 161(3) கீழ் பெற்றோர் மற்றும் உறவினரின் வாக்குமூலம்படி வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதனை ஏற்று மறியல் கைவிடப்பட்டது. இதனால் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் இராமசாமி, தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ், தஞ்சை நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் இளம்பரிதி ஆகியோர் இராஜசேகரின் மனைவி செல்வி, தாய் ரோகம்பாள் மற்றும் உறவினர்கள் ஆகியோரிடம் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் இராஜசேகர் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தார் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து நிலைமை சீரடைந்தது.

Comments