நாளுக்கு நாள் மக்கள் செத்துக் கொண்டிருக்கும் வன்னிப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு `மருத்துவ உதவிகள் செய்வதற்காக இந்திய ராணுவக் குழு இரண்டு விமானங்களில் செல்லப்போகிறது' என்ற இந்திய அரசின் அறிவிப்பு `இலங்கையில் நடப்பது என்ன என்பதை அறிந்து கொள்ளாமல் சர்வதேச சமூகத்தைத் தடுக்கும் முயற்சியே' எனக் குற்றம் சாட்டுகிறார் இலங்கையின் எம்.பி.யான சிவாஜிலிங்கம். திருச்சியில் நடந்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த அவரைத் தனியே சந்தித்துப் பேசினோம்.
இலங்கைத் தமிழர் பிரச்னை யில் உண்ணாவிரதம் இருந்த அ.தி.மு.க.-வின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் நிலைப்பாடு குறித்து என்ன சொல்கிறீர்கள்?
``இதுவரை போரை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தாலும், அங்கே நடக்கும் மிகப்பெரிய மனித அவலத்திற்கு எதிராக அ.தி.மு.க.வின் பங்கு இப்போதாவது இந்த வடிவத்தில் கிடைத்திருப்பது ஒரு புது திருப்புமுனையாக இருக்கும் என்று நம்புகிறோம். தமிழக மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியும் கொந்தளிப்பும் உருவாகி இருக்கிறது. மத்திய அரசின் மீதும், போதிய அக்கறை காட்டாத மாநில அரசு மீதும் மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இந்தியாவில் நடக்கப் போகும் தேர்தல் இலங்கைப் பிரச்னையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.''
ஈழத்தமிழர் பிரச்னை தீர யார் தலைமையில் பேச்சுவார்த்தை நடக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
``விடுதலைப்புலிகள்தான் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் தலைமை ஏற்க வேண்டும் என்று நான்கு கட்சிக் கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையிலேயே சொல்லியிருக்கிறோம். அந்தக் கூட்டமைப்பின் இருபத்திரண்டு எம்.பி.க்களும் `தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் புலிகள்தான்' என்ற முடிவில் இருக்கிறோம்.''
புலிகளின் தலைமையில்தான் ஈழப் பிரச்னைக்குத் தீர்வு என்று சொல்கிறீர்கள். ஆனால், ஜெயலலிதா முற்றுமுழுதாக புலிகளை எதிர்ப்பவராக இருக்கிறாரே, இந்த முரண்பாட்டை எப்படி சரி செய்யப் போகிறீர்கள்?
``செல்வி ஜெயலலிதாவின் நிலைப்பாடும் அல்லது வேறு யாருடைய நிலைப்பாடும் விடுதலைப்புலிகள்மீது புகார் சொல்வதாகத்தான் இருக்கிறது என்பதுதான் இங்கு பிரச்னை. மூன்றாம் உலக நாடுகள் தலையிட்டு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்திவிட்டு, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவதற்கு விடுதலைப் புலிகள் ஒருபோதும் தடையாக இருக்க மாட்டார்கள். அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது, விடுதலைப்புலிகள்தான் தங்கள் பிரதிநிதிகள் என்று மக்கள் தீர்மானித்தால், அதை ஜெயலலிதா உள்ளிட்ட உலக மக்கள் அனைவரும் ஏற்கத்தான் வேண்டும். அதேபோல என்ன தீர்வு என்பதனையும் மக்களே தீர்மானிக்கட்டும்; அதனை உலகம் ஏற்கட்டும்.
கிழக்கு தைமூர் போல கொசோவா போல ஒரு வாக்கெடுப்பு நடத்தி `ஒன்றாக இருக்கிறாயா? அல்லது பிரிந்து போகப் போகிறாயா?' என்று கேட்கட்டும். போரை நிறுத்துவதுதான் உடனடித் தேவை. அதற்கு எல்லா தலைவர்களும் ஆதரவு தர வேண்டும். விடுதலைப்புலிகள் அதற்குத் தடையாக இருப்பார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம்.''
ஆனால், புலிகள் போரை நிறுத்தி ஆயுதங்களை ஒப்படைத்தால்தான் பேச்சுவார்த்தை என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் சொல்கின்றனவே?
``தமிழ் மக்களுக்கு விடுதலைப் புலிகள்தான் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அதனால் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு பேச்சுவார்த்தை என்பதனை ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல; உலகத்தமிழர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒரு சமரசம் வந்தபிறகுதான் ஆயுதங்களைக் கீழே வைக்க முடியும். அதற்கு முன்னரே ஆயுதங்களைக் கீழே வைக்கச் சொல்வதை எங்களை மேலும் ஒரு அழிவுப் பாதைக்குள் தள்ளுவதாகத்தான் நாங்கள் எடுத்துக்கொள்ள முடியும்.
ஏற்கெனவே போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை எல்லாமே நடந்தபோதும் ஆயுதத்தைக் கீழே வை என்று சொல்லவில்லை. திம்பு பேச்சு-வார்த்தையில் ஐந்து போராளிக் குழுக்களுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட ஆறு அமைப்புகள் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் ஆயுதத்தைக் கீழே வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை.''
இந்திய ராணுவம் இலங்கை ராணுவத் துக்கு உதவி வருவதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. அதைப்பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?
``ராணுவத் தீர்வு இந்தப் பிரச்னைக்குத் தீர்வு இல்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் சொல்லி வந்தாலும் ஒரு ராணுவத் தீர்வுக்கான முழுமையான ஒத்துழைப்பை இலங்கைக்கு இந்தியா வழங்கி வருவதைக் கண்டு நாங்கள் அதிர்ச்சியடைகிறோம்; கவலையடைகிறோம். `மூவாயிரம் இந்திய ராணுவத்தினர் அங்கு இருக்கிறார்கள்; இந்திய ராணுவ டாங்கிகள் அங்கே போயின' போன்ற தகவல்களுக்குள் நாங்கள் போக விரும்பவில்லை. ஏனென்றால், அதைவிட மோசமான பல காரியங்களை இந்தியா செய்து வருகின்றது. சாட்டிலைட்டுகளைப் பயன்படுத்தி `இங்கே அடிக்கணும்; அங்கே அடிக்கணும்' என்று ஸ்பாட் குறித்துக் கொடுப்பதே இவர்களாகத்தான் இருக்கிறது. புலிகளின் பன்னிரண்டு ஆயுதக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதற்கு இந்திய ராணுவம் அளித்த உளவுத் தகவல்கள்தான் முக்கிய காரணம். இதையெல்லாம் செய்துவிட்டு, இந்தியா போய் அங்கே நின்று சண்டை வேறு போட வேண்டுமா?
கடந்த வருடம் மார்ச் மாதம் இலங்கையின் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா இந்தியாவுக்கு வந்து `நாங்கள் போரைத் தொடங்குகிறோம், எங்களுக்கு உதவிகள் செய்யுங்கள்' என்று கேட்டதாக நான் குற்றம் சாட்டினேன். ஒரு வருடமாகியும் அதற்கு இந்தியத் தரப்பிலிருந்து பதில் இல்லை.
உலக நாடுகள் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் எங்களின் மூதாதையர் நாடான இந்தியா அதைக் கண்டிக்கவில்லை. அதுகூட பரவாயில்லை. இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்வதை முழுமையாக நிறுத்தணும். எங்களுக்கு உதவி செய்யாட்டியும் உபத்திரவம் செய்யாமலிருந்தால் போதும். எங்கள் எதிரிகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.''
ஏன் உதவி செய்யவில்லை என்று சொல்கிறீர்கள்? இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக இரண்டு பெரிய விமானங்களில் இந்திய ராணுவ மருத்துவக் குழுக்களை இந்தியா அனுப்பப் போவதாக அறிவித்துள்ளதே?
``உலக நாடுகளின் மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை அனுப்பட்டும்; அதில் இந்திய ராணுவக் குழுவும் இருக்கட்டும். அதை விடுத்து புல்மோடையில் ஒரு தடுப்பு முகாம் அமைப்பார்களாம். அதை இலங்கை அரசு பாதுகாக்குமாம். அதில் இந்திய ராணுவம் வைத்தியம் செய்யுமாம். இதன் அர்த்தம் `தொடர்ந்து சண்டை நடக்கப் போகிறது, தொடர்ந்து குண்டு வீசப் போகிறார்கள், தொடர்ந்து காயப்படப் போகும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு வைத்தியம் செய்வோம்' என்பதுதானே?
இலங்கை அதிபர் மஹிந்தாவின் புளுகுகளை வெளியே சொல்லிவிடக்கூடிய இன்னொரு சர்வதேசம் அங்கே வந்துவிடாமல் தடுக்கும் முயற்சியே இது. அப்படி ஒரு சர்வதேச அமைப்பு அங்கே வந்து வைத்தியம் செய்யத் தொடங்கினால் போரில் பாதிக்கப்பட்ட மக்கள் இலங்கை அரசின் கொடுமைகளை வெளியே சொல்லிவிடுவார்களே... அப்போது மஹிந்தாவின் அரக்க முகம் வெளியே தெரிந்துவிடுமே... அதைத் தடுக்கத்தான் இந்தியா இந்த முயற்சியை எடுக்கிறது. இலங்கையின் ராணுவத் திட்டத்துக்கு இந்தியா உதவுவதாக நாங்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறோம். இந்த முயற்சி கூட ராணுவ டாக்டர்களையே வைத்துச் செய்வது எங்கள் குற்றச்சாட்டை வலுப்படுத்துவதாகவே உள்ளது. இதெல்லாம் எங்கள் போராட்டத்தை - அங்கே நடக்கும் மிகப்பெரிய மனித அவலத்தைத் திசை திருப்பும் முயற்சியே.''
- ஷானு
Comments