யதார்த்தத்தினை உணர மறுக்கும் சிங்களதேசம்

யுத்தபூமியாக பரிணமித்து நிற்கும் இலங்கையின் இன்றைய மோசமான நிலைமை அதன் அனைத்துத் துறைகளிலும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. இதன் பாதிப்புக்களை நேரடியாக அனுபவிக்கப் போகின்றவர்கள் அந்நாட்டின் சிங்கள மக்களேயன்றி அதனைத் தோற்றுவித்த அரசியல்வாதிகளோ, பேரினவாதிகளோ அல்ல. தற்போதைய மகிந்த அரசின் இனவாத போர்வெறிப் பிரச்சாரத்துக்குள் அப்படியே அமிழ்ந்து போயிருக்கிறது சிங்களதேசம்.

அதன் மாயைக்குள் இருந்து விடுபடுவதற்கு அதற்கு வழிதெரியவில்லை. சிங்கள மக்களும் சரி அதன் ஊடகங்களும் சரி தொடர்ந்தும் அதற்கு உடந்தையாகவே இருந்து வருகின்றனர். அந்தளவிற்கு இனவாதவெறி சிங்கள மக்கள் மத்தியில் திட்டமிட்டு விதைக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டமிட்ட செயல் இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டதல்ல. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே சிங்கள அதிகார வர்க்கத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடிது.

அதன் பின்னணியில், பூர்வீகக் குடிகளான தமிழ்மக்களை ஓரங்கட்டி இலங்கையை ஒரு தனிச் சிங்கள நாடாக மாற்றும் சதித்திட்டமே பிரதானமாய் இருந்தது. அதன் வெளிப்பாடாக தனிச் சிங்கள மொழிச் சட்டம், கல்வியில் தரப்படுத்தல் முறைமை, தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றம் என சிங்கள பேரினவாதத்தின் தமிழ்மக்கள் மீதான அடக்குமுறை ஆரம்பமாகியது. இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற பொய்க்கருத்து வரலாற்றுப் பாடப் புத்தகங்களிலிருந்தே புகட்டப்பட்டது.

இவ்வாறு அடிப்படையிலிருந்தே சிங்கள மக்களிற்கு திட்டமிட்டு ஊட்டப்பட்ட இனவாதம், பல கட்டங்களில் தமிழர்களுக்கு எதிரான இனவன்முறைகளை கொடுமையான முறையில் அரங்கேற்றியிருந்தது.1958,1977 மற்றும் 1983 களில் நடந்தேறிய இனக்கலவரங்கள் இதற்கு நல்லுதாரணங்கள். இவ்வாறான சிங்கள அடக்குமுறைகளுக்கெதிராக அஹிம்சை வழியில் தமிழர்கள் விடுத்த சமவுரிமைக் கோரிக்கைகளையும் சிங்களம் தட்டிக்கழித்து தமிழர்களை மேலும் ஓரங்கட்டி அடக்கத் தொடங்கியது. பொறுமையிழந்த தமிழரின் உரிமைப்போராட்டம், இனிமேலும் ஏமாறமுடியாது என்ற நிலையில், 1975 களின் பின் ஆயுதப்போராட்டமாக பரிணமித்தது.

இதன்பின்பு சிங்களத்தின் கொடூரங்கள் தமிழ்மக்கள் மீது பகிரங்கமாகவே கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழர்களின் நீதியான உரிமைப் போராட்டத்தினை சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டம் என்ற மாயத் தோற்றப்பாட்டினை உருவாக்கிய சிங்கள அதிகார மட்டம் சிங்கள மக்களை தமிழ் மக்களுக்கெதிராக திசைதிருப்பிவிட்டது. அன்றிலிருந்து இன்றுவரைக்கும் சிங்களதேசம் தமிழர்களுக்கெதிரான இனவாதக் கொள்கையிலிருந்து விடுபடவில்லை. தமிழர் போராட்டத்தின் நியாயப்பாட்டினையும் யதார்த்தமான உண்மைகளையும் புரிந்துகொள்ள எத்தனிக்கவும் இல்லை.

இப்பொழுதும் அவ்வாறே மகிந்த அரசின் போர் வெற்றிப் பிரச்சாரங்களில் மயங்கிப்போய், தமிழர்களை வெற்றி கொண்டு விடலாம் என்ற கனவில் சஞ்சரிக்கிறது சிங்களதேசம். யுத்தத்தினால் கொன்று குவிக்கப்படும் தமிழ்மக்கள் குறித்து சிறிதேனும் இரக்கங்காட்டாத மனிதாபிமானமற்ற விதமாக இவ்வெற்றிக் களிப்பில் திளைத்திருக்கும் சிங்களம் தான் மீளமுடியாத அதலபாதாளத்துக்குள் போய்க்கொண்டிருப்பதை உணரவில்லை. போரை தமிழ்மக்கள் மட்டும்தான் எதிர்கொள்கிறார்கள். அதனால் தங்களுக்கு பாதகம் ஒன்றும் இல்லை என நினைக்கிறார்கள். அவர்களின் நினைப்பு எந்தளவுக்கு தவறானது என வெகுவிரைவில் உணர்ந்துகொள்வர்.

ஏனெனில், சிறிலங்காவின் சீரழிந்து போயுள்ள பொருளாதாரம் மேலும் மிக மோசமான நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. பொருளாதாரம் சீர்குலையும்போது அதில் பாதிக்கப்படப்போவது சாதாரண மக்கள்தானேயொழிய, ஊழல் பணத்தில் உல்லாசத்தை அனுபவிக்கும் அரசியல்வாதிகளல்ல.
இலங்கையில் நீதி, நிர்வாகம், பொருளதாரம்,தொழிற்துறை என அனைத்துத் துறைகளுமே சீர்குலைந்து போயுள்ளது. இதன் பாதிப்புக்களை சிங்கள மக்கள் உணரத் தொடங்கும்போது அவர்களுக்கும் யுத்தத்தின் கோரத்தன்மை புரியும்.

ஆனால், அவர்கள் இதனைப் புரிந்துகொள்ளும் வரை அரசின் பிடிவாதமான யுத்தத்திற்கு ஆதரவளித்துக்கொண்டுதான் இருப்பார்கள். தங்களது நாடும் தாங்களும் சீரழிந்து போவதற்கு தங்களை அறியாமல் தாங்களே துணைபோவதை புரிந்துகொள்ள முடியாத பரிதாபநிலையிலேயே சிங்கள மக்கள் இன்று இருக்கிறார்கள்.அரசின் வெற்றிப்பரப்புரைகளும் பக்கச்சார்பான ஊடகச் செய்திகளும் மக்களின் கண்களை மறைக்கின்றன.யுத்தமென்னும் மீளமுடியாத ஒருவழிப்பாதையில் செல்லும் சிங்களதேசம் தன் அழிவுக்கான பாதையிலேயே செல்கின்றது என்பதை எதிர்காலம் நிரூபிக்கும்.

தமிழர்களின் உரிமைகளையும் அவர்களின் போராட்டத்திற்கான நியாயமான கோரிக்கைகளையும் மதித்து தீர்வொன்று தரக்கூடியதாக சிங்களதேசம் ஒருபோதும் மாறாது. மாற்றங்கள் என்பது மக்களின் மனங்களில் இருந்து வரவேண்டும். அதற்கான அறிகுறிகள் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. உண்மைக்கும் நீதிக்கும் புறம்பான அரசும், யதார்த்தங்களை உணர முற்படாத மக்களும் உள்ள சிங்கள தேசத்திடமிருந்து நன்மாற்றங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது. யதார்த்தங்களை உணர மறுக்கும் சிங்களதேசத்திடமிருந்து அவற்றை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

எனவே எங்கள் உரிமைகளை நாங்களே வென்றெடுக்க வேண்டும்.அதற்கான தருணம் மிக அண்மித்து வந்துள்ள நிலையில், எங்களது விடுதலைப் போராட்டத்தை மிகவும் உத்வேகத்துடன் முன்னெடுக்க வேண்டும். நமது போராட்டத்தின் மூலம் ஈட்டப்படும் வெற்றியானது சிங்கள தேசத்தின் வெற்றி மமதையை அடக்கி அவர்கள் உணர மறுக்கும் யதார்த்தத்தையும் நன்கே புரியவைக்கும். நமது தேசத்தின் விடிவுக்கும் வழிவகுக்கும்.

"கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளைக்கு?" என்ற கதையாய், உண்மைகள் வெளியாகி காலங்கடந்து யதார்த்தத்தினை உணரும்போது, அவர்களைச் சுற்றி தோல்வியையும் சீரழிவையும் தவிர வேறெதுவும் மிஞ்சியிருக்காது என்பதுவே நிதர்சனம்.

எம் தேசத்தின் கொடி பறக்கும் - அந்நாள்
எதிரியின் நெஞ்சில் இடி பிறக்கும் !!!

-பருத்தியன்-

Comments