1. ஈழச் சிக்கலுக்காக தமிழக இளைஞர்கள் தொடர்ந்து தீக்குளிப்பில் ஈடுபட்டு வருகிறார்களே, இது சரியா...?
- து. கேசவன், அருப்புக்கோட்டை
சரியில்லைதான். என்றாலும் அவர்கள் ஏன் இந்த முடிவுக்கு வருகிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டும். இவர்கள் எவரும் ஏனோதானோ என்று உணர்ச்சிவயப்பட்டு திடுமென தீக்குளிக்கவில்லை. தமிழினம் தமிழீழத்தில் நாள்தோறும் கொன்று குவிக்கப்பட்டு வருவதை கண்டு மனம் பொறுக்க மாட்டாமல், தில்லி, தமிழக ஆட்சியாளர்கள் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் கண்டும் காணாது இருப்பதை வைத்து, நமது அரசியல்வாதிகளும் எதையும் பொருட்படுத்திக் கொள்ளாமல் இருப்பதை வைத்து, மனம் குமுறிக் குமுறித்தான் வேறு வழி எதுவும் தோணாமல் நம் உயிரை ஈந்தேனும், நம் உடலை தீக்கிரையாக்கி, கரிக் கட்டையாய் ஆக்கியேனும் சமூகத்தில் ஓர் எழுச்சியை ஏற்படுத்த முடியாதா என்கிற நோக்கிலேயே இவர்கள் தீக்குளித்து வருகிறார்கள்.
இப்படி தீக்குளித்து இறந்தவர்களின் பட்டியலைப் பாருங்கள். கட்சி சாரா உணர்வாளர்கள் ஒருபுறம் என்றால், கட்சி சார்ந்து, தன் கட்சி ஈழச் சிக்கலுக்காக எதுவும் செய்ய வில்லையே என்கிற குற்ற உணர்வில் மனப் பொருமலில் தீக்குளித்தவர்களும், அதாவது தி.மு.க., காங்கிரஸ் காரர்களும் இதில் அடக்கம். இப்படி இருக்க இதை நாம் எப்படி குறை சொல்ல முடியும். இந்த தமிழின ஈகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவதை தவிர வேறு வழி தெரிய வில்லையே.
முத்துக்குமாரின் இறுதிக் கடிதத்தில் உள்ள வீர வரிகளைப் பாருங்கள். சிந்தித்து, சிந்தித்து செதுக்கப் பட்டவை. ஒரு வரி கூட தூக்கி எரிய முடியாதவை. “தன் உடலை வைத்துப் போராடுங்கள். அதை உயிராயுதம் ஏந்துங்கள்” என்றார் அவர். இந்த இனம் வரலாற்று ஆவணமாக நெஞ்சில் நிறுத்த வேண்டிய வரிகள் அவை. 1965 இல் மொழிக்காக தீக்கிரையானார்கள் தமிழ் இளைஞர்கள். இன்று இனத்துக்காகத் தீக்கிரையாகிறார்கள். என்னவென்பது. நெஞ்சு பதறுது. ஆனால் இந்த ஈகிகளை ஆளும் வர்க்கமும், அதிகார வர்க்கமும் வறுமையில் தீ வைத்துக் கொண்டவர்கள் என்றும், கடன் சுமையால் கொள்ளி வைத்துக் கொண்டவர்கள் என்று மனம் பேதலித்தவர்கள் என்றும் இழிவு படுத்துவதை சகிக்க முடியுமா?
“சாகச் செய்வானைச் சாகச் செய்யாமல் சாகின்றாயடா தமிழா” என்ற வரிகளே நெஞ்சில் ஈட்டியாய் பாய்கிறது. தமிழர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்காவிட்டால் அதனாலேயே ஒரு இனம் அழிந்தது என்கிற வரலாற்றுக் களங்கம் தமிழர்கள் வாழ்வில் என்றென்றும் மாறாத கறையாகி விடும்.
2. விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தைச் சேர்ந்த சைமன் ஆப்கானில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டாரே, அவரைக் காப்பாற்றி இருக்க முடியாதா?
- கி. விசுவநாதன், திருக்கோயிலூர்
முடியும். தில்லி, தமிழக அரசின் செயலற்ற தன்மையால் ஒரு தமிழனின் உயிர் அநியாயமாய் கொல்லப்பட்டுள்ளது. இதுதான் தமிழனின் உயிருக்கு இன்றுள்ள மதிப்பு. சைமனை நாங்கள் மீட்டு விடுவோம், நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் நல்ல சேதி வரும் என்று தில்லி அரசின் அமைச்சர் வயலார் ரவி வாய் கிழியப் பேசினார். என்ன ஆயிற்று.... உயிர் போனதுதான் மிச்சம். உயிரைப் பறிகொடுத்த உறவினர்கள் உடலையாவது பெற்றுத் தாருங்கள் என்று வேண்டினார்கள். அதையும் கொண்டு வரமுடியாமல், அந்த நாட்டிலிருந்து வெறும் மண்ணைத்தான் கொண்டு வந்தார்கள்.
காஷ்மீரத்தை சேர்ந்த மய்ய அமைச்சர் முக்தி முகமது சையதுவின் மகளை தீவிரவாதிகள் கடத்தினார்கள். தில்லி அரசு படபடத்தது. பேச்சு வார்த்தை நடத்தியது. முடிவில் சிறையில் இருந்த மிக முக்கிய தீவிரவாதிகளை விடுவித்தது. சையது மகளை மீட்டு வந்தார்கள். அதேபோல் தாலிபான்களின் கோரிக்கையை ஏதாவது ஏற்று சைமனை விடுவிக்கச் செய்திருக்கலாமில்லையா, தில்லிக்காரர்களுக்கு ஒரு நீதி, தமிழனுக்கு ஒரு நீதியா?
ஏன், அண்மையில் சோமாலியா கடற் கொள்ளை யர்களால் கப்பலில் பணி செய்த பலர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டார்கள். பேச்சுவார்த்தை நடந்தது. கேட்ட தொகையைக் கணிசமாக கொடுத்து அனைவரையும் மீட்டுத் தந்திருக்கிறார்கள் தனியார் நிறுவனத்தினர். பணியாளர்களும் மகிழ்ச்சியோடு ஊர் திரும்பி உற்றார் உறவினர்களோடு சங்கமித்து மகிழ்ந்தார்கள். தனியார் நிறுவனங்களுக்குத் தன் பணியாளர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று இருக்கிற அக்கறைகூட ஆட்சியாளர்களுக்குத் தங்கள் குடிமக்களைக் காக்க வேண்டும் என்பதில் இல்லையே.. தில்லி ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு செய்து வரும் துரோகத்தை பட்டியல் போட்டால் பக்கம் போதாது. 400-க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங் கையின் பாசிச அரசால், குண்டடிப் பட்டு செத்தார்களே, தில்லி, தமிழக அரசுகள் அதை தட்டிக் கேட்டதா? செத்தது தமிழன் என்பதால்தானே இளப்பம்.
ஆனால் பம்பாயில் குண்டு சத்தம் கேட்டதும் பாகிஸ்தானோடு போருக்கு தயாராகிறேன் என்கிறது இந்தியா. மராத்தியருக்கு ஒரு நீதி. தமிழனுக்கு ஒரு நீதியா. என்னே கொடுமை? தமிழர்கள் தில்லி அரசின் இந்த வஞ்சகப் போக்கைப் புரிந்து கொள்ளவேண்டும். இந்த அநீதிக்கெதிராக கிளர்ந்தெழ வேண்டும். *
மண்மொழி
Comments