வன்னியிலுள்ள பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றுவதற்கு கடுமையான எதிர்ப்பை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு கெஸ்டலா இந்திய ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்
வன்னிப் பகுதியில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரும் சர்வதேச மனிதாபிமான சட்ட திட்டங்களுக்கு அமைவாக செயற்பட வேண்டியது இன்றியமையாததென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக் கிளைப் பொறுப்பாளர் போல் கெஸ்டலா தெரிவித்துள்ளார்.
மூன்று தசாப்தங்களாக நீடித்து வரும் உள்நாட்டு சிவில் யுத்தத்தில், தமிழ்ச் சிவிலியன்களே மிகவும் மோசமான வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்பாவித் தமிழ் சிவிலியன்கள் எதிர்நோக்கி வரும் மனிதப் பேரவலத்திற்கு மோதல்களில் ஈடுபட்டு வரும் இரண்டு தரப்பினரும் பொறுப்பு கூற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த வலயத்தில் சிக்கியுள்ள அப்பாவிச் சிவிலியன்களுக்கு தேவையான சகல விதமான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட தரப்பினரின் மிகவும் முக்கியமான பொறுப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வன்னிச் சிவிலியன்கள் மிகவும் மோசமான வகையில் சுகாதார சீர்கேடுகளுக்கு இலக்காகியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments