இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்திற்கும் எமக்கும் எதுவித தொடர்பும் கிடையாது: ப.சிதம்பரத்துக்கு விடுதலைப் புலிகள் பதில்

இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள்தான் ஏறி மிதித்தார்கள் என்று சிதம்பரம் சொன்னார்; நாங்கள் ஒப்பந்தத்தை ஏறி மிதிக்கவில்லை; அதற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் - ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார்.

வன்னியில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலில் ஒலிபரப்பாகிய கருத்துப்பகிர்வின் போதே யோகரத்தினம் யோகி இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்:

இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள்தான் ஏறி மித்தார்கள் என்று சிதம்பரம் (இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்) அவர்கள் சொன்னார்; நாங்கள் ஒப்பந்தத்தை ஏறி மிதிக்கவில்லை.

இந்திய - சிறிலங்கா ஒப்பந்தம் அவர்களால் (இந்தியா - சிறிலங்கா) செய்யப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தை செய்துவிட்டு இங்கே வந்த அவர்கள், நாங்கள் ஆயுதங்களை கையளித்த பின்னர், புலேந்தி அம்மான் போன்றவர்களை சிங்கள அரசு கைது செய்த போது அவர்களை காப்பாற்ற முயற்சிக்கவில்லை.

ஆனால், இந்திய அரசாங்கமானது இந்நிய - சிறிலங்கா ஒப்பந்தத்தை காப்பாற்றுகின்றோம் என கூறிக்கொண்டு எங்கள் மீது போர் தொடுத்தது.

ஆறாயிரம் மக்களை கொன்று குவித்தது என்பதனை ப.சிதம்பரம் மறந்து விட்டார்.

இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதிகாரங்களை பரவலாக்கி, வடக்கு - கிழக்கு கௌரவமாக இணைக்கப்பட்டது என்பது ராஜீவ் காந்தியால் கூறப்பட்ட ஒன்று.

அதனை உறுதியாக பேணியிருக்க வேண்டியதும் இந்திய அரசாங்கத்தின் கடப்பாடாகும்.

அதற்கும் (இந்திய - சிறிலங்கா ஒப்பந்தம்) விடுதலைப் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் கிடையாது.

இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் காலால் ஏறி மிதித்தனர் எனக் கூறுவதனை அதனை நியாயமாக கூறுவதனை பலர் அதனை ஏற்றுக்கொண்டு பேசுவதனை நாங்கள் காண்கின்றோம்.

இங்கே, நான் எதனை கூற வர விரும்புகின்றேன் எனில், இந்த போலி வார்த்தைகளில் ஏமாறாதீர்கள்; மயங்காதீர்கள். எங்களைப் பொறுத்த வரை மிகப்பெரிய அழிவுக்குள்ளும் மிகப் பெரிய பேரழிவுக்குள்ளும் நின்று போராடுகின்றோம். உறுதியாக போராடுகின்றோம்.

இந்த போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்பதனை நாம் எடுத்துக்காட்டுவோம்.

எங்கள் பின்னால் உலகத் தமிழினமே ஒன்றுபட்டு நில்லுங்கள்.

உங்கள் பின்னால் உலகத்தில் நிற்கின்ற மனச்சாட்சியுள்ள மக்களோடு பேசுங்கள்.

நிச்சயமாக எங்களுக்கான ஒரு நாட்டை நாங்கள் விரைவில் அமைப்போம் எனவும் யோகி தெரிவித்தார்.

Comments