ஐ.நா. வின் பாதுகாப்புச் சபையில் எடுக்கப்படும் தீர்மானமே ஒரு நாட்டின் இறைமையையும் தீர்மானிக்கும்: ச.வி.கிருபாகரன்

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் எடுக்கப்படும் தீர்மானமே ஒரு நாட்டின் இறைமையையும் தீர்மானிக்கும் என்று பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

சுவிசில் இருந்து வெளிவரும் 'நிலவரம்' வாரமிருமுறை ஏட்டுக்கு ச.வி.கிருபாகரன் வழங்கிய நேர்காணலின் போது மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஐ.நா. மனித உரிமைக் குழுவின் பத்தாவது கூட்டத் தொடரில் நீங்களும் கலந்து கொண்டுள்ளீர்கள். இதில் ஈழத் தமிழ் மக்களின் அவலம் தொடர்பாக ஏதாவது கதைக்கப்பட்டிருக்கின்றதா அது தொடர்பில் ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றீர்களா?

இந்தக் கூட்டத் தொடரில் பல சந்தர்ப்பங்களில் எமது மக்களின் அவலம் தொடர்பில் கதைக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று நாட்கள் நடைபெற்ற அமைச்சர்களுக்கான அமர்வுகளில் பிரான்ஸ், யேர்மனி, ஒல்லாந்து, சுவீடன், போன்ற நாடுகளின் அமைச்சர்கள் இது தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளார்கள். இதில் விசேடமாக பிரித்தானியப் பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் சிறிலங்கா அரசுக்குக் கோபத்தை மூட்டியிருந்தது. அவரின் பேச்சு என்னவென்றால் அப்பாவி மக்கள் பல அனர்த்தங்களுக்கு ஆளாகி இருக்கின்றார்கள். அவர்களுக்கு மருந்து, உணவு என்பவை இல்லை. எனவே இது விடயத்தில் மனித உரிமைச் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே.

இது விடயத்தில் மேற்படி குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா அரசு மறுத்தது. இதனை அடுத்து மனித உரிமை நிறுவனங்களான சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஏசியா போரம் போன்றவையும் தமது கரிசனையைப் பதிவு செய்தன.

இதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் கூட்டங்களில் ஐ.நா. வின் சித்திரவதைக்குப் பொறுப்பான பிரதிநிதி, நபர்கள் காணாமற் போவது தொடர்பான பிரிவின் தலைவர் ஆகியோர் காணாமற் போதல் மற்றும் சித்திரவதைக்கு ஆளாகுதல் போன்ற விடயங்களைக் கதைத்தனர். வழமை போல் சிறிலங்கா அரசு அவற்றையும் மறுதலித்துள்ளது.

இது தவிர, மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி நவநீதம்பிள்ளை சிறிலங்கா விவகாரத்தை கடுமையாக எடுத்து ஆராய்ந்ததுடன் தன்னுடைய பிரதிநிதி ஒருவரை நியமிப்பதற்கான அனுமதியையும் தான் பலமுறை கேட்டதாகவும் கூறினார்.

மேலும் மார்ச் 9 ஆம் திகதி நடைபெற்ற அரசு சார்பற்ற நிறுவனங்களுடனான கூட்டத்தில் தான் மகிந்த ராஜபக்சவை நியூயோர்க்கில் சந்தித்ததாகவும் அங்கு தான் பான் கி மூனுடன் இணைந்து தமது ஆட்சேபனையை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த மகிந்த இது விடயத்தில் நீங்கள் எவ்வளவு குறைவாகக் கதைக்கின்றீர்களோ அவ்வளவுக்கு நல்லது என்று கூறியதாகத் தெரிவித்தார்.

ஆகவே, இதுவரை நடந்த விடயங்களில் மனித உரிமைச்சபை சிறிலங்காவைப் பற்றி பல தடவைகளில் பிரஸ்தாபித்துள்ளது.

ஏதாவது நடைபெறுமா என்ற உங்கள் கேள்வி தான் இங்கு தற்போது கூட்டத் தொடரில் பங்கு கொண்டுள்ள அரசு சார்பற்ற நிறுவனங்கள் மத்தியில் உள்ள கேள்வியும் கூட. சர்வதேச ஜூரர்கள் சபை சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற பெரிய அமைப்புக்களின் பிரதிநிதிகளின் மனதில் உள்ள சிந்தனை என்னவெனில் யாதாகிலும் ஒரு கண்டனப் பிரேரணையோ ஏதாவது வருமா என்பதே. இது தொடர்பில் இதுவரை எந்த அறிகுறியும் இல்லை.

காரணம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளே இது விடயத்தை முன்னெடுக்கின்றன. அவர்களுக்கு மனித உரிமைச் சபையில் குறைந்தளவு ஆதரவாகவே உள்ளது. எனவே மனித உரிமைச் சபையில் கண்டனப் பிரேரணை என்கின்ற விடயம் கேள்விக் குறியாகவே உள்ளது.

நடவடிக்கை எனும் போது கண்டனப் பிரேரணை பற்றியே நீங்கள் கதைக்கின்றீர்கள். தமிழ் மக்களின் எதிர்பார்ப்போ கண்டனம் என்பதற்கு அப்பாலான காத்திரமான நடவடிக்கையாக உள்ளது. அதாவது, வழமையான வழிமுறைகளைத் தவிர்த்து வேறு வழிமுறைகளுடாக ஏதாவது நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றதா?

நான் சொல்வதை எவரும் குறையாகக் கருதக் கூடாது. எங்களுடைய ஆதங்கங்கள், எங்களுடைய உணர்ச்சிகள், எங்களுடைய எதிர்பார்ப்புக்கள் அப்படியாகத் தான் இருக்கும். ஏனெனில், நாங்கள் பாதிக்கப்பட்ட மக்கள். ஐ.நா. சபையிடம் இருந்து கண்டனங்களையும் அறிக்கைகளையும் தவிர வேறு எதையும் எதிர்ப்பார்ப்பதானால் நாம் இங்கு நேரத்தை விரயம் நேரத்தை விரயம் செய்கின்றோம் என்பதே அர்த்தம்.

ஐ.நா. சபையிடம் இருந்து இவையே கிடைக்கும். அவர்களால் ஆகக்கூடியது கண்டனமும் அறிக்கைகளும் தான். ஐ.நா. பாதுகாப்புச் சபையிடம் இருந்தே வேறு எதனையும் எதிர்பார்க்கலாம். அது இங்கு நடைபெறுவதும் இல்லை. அதற்கு நாங்கள் சமூகம் அளிப்பதும் இல்லை. அதில் அரச சார்பற்ற நிறுவனங்கள் கலந்து கொள்வதும் இல்லை. பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகளாலும் 5 நிரந்தர அங்கத்துவ நாடுகளுமே அதில் கலந்து கொள்ளும்.

தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பு தவறு என நான் கூறவரவில்லை. ஆனால், அதனை மனித உரிமைச் சபையிடம் எதிர்பார்ப்பதே தவறு. அவ்வாறு எதுவும் நடைபெறுவதானால் அது பாதுகாப்புச் சபையின் முன்னெடுப்பினாலேயே நடைபெறக் கூடும். இங்கு அது போன்ற எதுவும் நடைபெறாது என்பதை நான் தற்போதே கூறி வைக்க விரும்புகின்றேன்.

ஏனெனில், கண்டனங்களும் அறிக்கைகளும் மாத்திரம் இங்கிருந்து வருகின்றன எனத் தமிழ் மக்கள் குறை சொல்லக் கூடாது. அது குறை அல்ல. ஆனால் இங்குள்ள நடைமுறை அது தான்.

அதாவது பாதுகாப்புச் சபையில் தான் இது தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நீங்கள் கூறுகின்றீர்கள். இது ஐ.நா. சபையின் நடைமுறை தெரிந்தவர்களுக்கு சாதாரணமாகவே புரியும். இருப்பினும் ஐ.நா. செயலாளர் நாயகம், ஐ.நா. உப அமைப்புக்களின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே முடிவெடுப்பவராக இருக்கின்றார். ஏனெனில், அனைத்து அமைப்புக்களும் தமக்குக் கிடைக்கும் தரவுகளை அனுமானங்களை அவர்களுக்கு வழங்குவார்கள். இந்த அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிக்கப் போகும் அறிக்கை, யுனிசெப் போன்ற நிறுவனங்கள் வழங்கும் அறிக்கை என்பவை பாதுகாப்புச் சபையில் இந்த விவகாரத்தை எடுப்பதற்கு வழி கோலுமா? இது விடயத்தில் நாம் ஏதாவது செய்ய முடியுமா?

உண்மையைக் கூறுவதானால் பாதுகாப்புச் சபையில் கூட ஐ.நா. செயலாளர் நாயகத்தின் கருத்துக்கள் பெருமளவில் கவனத்திற் கொள்ளப்படும் வாய்ப்புக்கள் இல்லை. ஆனால், அவரை ஆலோசிப்பார்கள். அங்கு கூட நிரந்தர உறுப்பு நாடுகளான 5 நாடுகளின் கைகளிலும் தீரமானம் உள்ளது. அவர் மிகவும் காரசாரமான அறிக்கையை வழங்கினாலும் கூட அங்கே எடுபடப் போவதில்லை.

பாதுகாப்புச் சபையில் என்ன நடைபெறுகின்றது என நீங்கள் நன்கு அறிவீர்கள். சிறிலங்காவுக்கு எதிராகக் கொண்டு வரப்படுகின்ற தீர்மானங்களை ரஸ்யாவும் சீனாவும் எதிர்க்கின்றன. மெக்சிக்கோ நாட்டினால் தான் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மெக்சிகோவால் முன்னெடுக்கப்படும் எந்த விடயத்திலும் அமெரிக்காவின் பின்னணி உள்ளதென நாம் அறுதியிட்டுக் கூற முடியும். ஏனெனில், 2 நாடுகளும் நெருங்கிய தொடர்புடையவை.

அடுத்தபடியாக ஏற்கனவே நான் கூறிய நிறுவனங்களுடைய அறிக்கைகள் அவற்றைப் பொறுத்தவரை - இவ்வாறு கூறுவதால் எனக்கு எதுவித இலாபமும் இல்லை - மனித உரிமைச் சபையின் ஆணையாளர் தன்னால் முடிந்தளவு அதிகபட்சம் இதுவிடயத்தில் செயற்படுகிறார் என நினைக்கிறேன். இதனை அவரும் வெளிப்படையாகக் கூறியிருக்கின்றார். ஏனைய நிறுவனங்களும் அந்த அளவிலேயே இயங்குகின்றன என்பது என்னுடைய கருத்து.

இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள், அவர்கள் மத்தியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அமைப்புக்கள் இது விடயத்தில் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென நீங்கள் நினைக்கின்றீர்கள்?

நான் இவ்வாறு கூறுவதையிட்டு யாரும் தவறாக நினைக்கக் கூடாது. புலம்பெயர் தமிழ் மக்கள் பல விடயங்களை முன்னர் செய்திருக்கலாம் தற்போதும் செய்து கொண்டிருக்கலாம். இனியும் செய்யலாம்.

ஆனால், முதலாவது நாம் நாம் வசிக்கும் நாடுகளுடைய அரசுகளுக்குத் திருப்தியளிக்கும் வகையில் நாம் எமது கண்டனங்கள், பிரேரணைகள், ஊர்வலங்களை வைக்க வேண்டும்.

இரண்டாவது - நிச்சயமாக இரண்டல்ல முதலாவதாக - நாங்கள் நீண்ட காலமாக சர்வதேச நாடுகள், சர்வதேச நிலமைகள் எமக்கு ஆதரவாக இல்லையென்று கண்டாலும் எமது கையில் ஒரு ஆயுதம் இருந்தது. ஆயுதம் என்பதை விட எமது கையில் ஒரு பிடி இருந்தது. அதனை நாம் இதுவரை சரியாகப் பாவிக்கவில்லை. எம்மவர்களால் அதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. காரணம் நாம் இன்றும் சிறிலங்காவில் இருந்து வரும் பொருட்களைப் பாவிக்கின்றோம். சிறிலங்கா விமானத்தில் பயணம் செல்கின்றோம்.
தெரிந்தோ தெரியாமல் இன்று வன்னியில் நடைபெறும் அநர்த்தத்திற்கு மறைமுகமாக உதவி செய்து கொண்டு வருகின்றோம்.

இதில் ஒன்றைக் கூற முடியும். இங்குள்ள வர்த்தகர்கள், மக்கள் கோடீஸ்வரர்களாக வர வேண்டும் என்பது எமது விருப்பம். ஆனால், அதற்காக சிறிலங்காப் பொருட்களை
இறக்குமதி செய்து இங்கு விற்று அதை எமது மக்கள் வாங்கிப் பாவித்துக் கொண்டு ஊர்வலங்களில் கலந்து கொள்வதும் போராட்டங்களை முன்னெடுப்பதும் 'படிப்பது தேவாரம்; இடிப்பது சிவன் கோவில்' என்பதற்குச் சமனானது.

ஆகவே, புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையேல் இதில் அர்த்தமில்லை.

இறுதியாகச் சொல்வதானால் நாம் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் அங்குள்ள சட்டங்களை மதித்து எமது செய்தியை நாம் சொல்ல வேண்டும். நாம் வாழும் நாட்டில் பகைமையைச் சம்பாதித்துக் கொண்டால் நாம் எதனையும் செய்ய முடியாது போய்விடும்.

சிறிலங்கா இறக்குமதிப் பொருட்களைப் பகிஸ்கரிப்பது நடைமுறைச் சாத்தியமானது என நினைக்கின்றீர்களா?

நடைமுறைச் சாத்தியமில்லை என நீங்கள் ஏன் நினைக்கின்றீர்கள்.

இது என்னுடைய கருத்தல்ல. மக்களின் கருத்து. நாங்கள் அத்தகைய உணவு வகைகளுக்குப் பழகி விட்டோம். வாழ்க்கை முறைக்குப் பழகி விட்டோம். வர்த்தகர்கள், நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைச் செய்து வைத்திருப்பார்கள். இது தவிர இந்தப் பகிஸ்கரிப்புக் குரல் இன்று எழுந்த குரலல்ல. பல வருட காலமாக முன் வைக்கப்பட்டு நடைபெறாமல் போனதொரு விடயம். இந்த அடிப்படையில் தான் தங்கள் கருத்தை அறிய விரும்புகின்றேன்.

உண்மையிலேயே இந்தப் பகிஸ்கரிப்பு விடயத்தில் பலர் நீண்ட காலமாகச் செயற்பட்டு வருகின்றார்கள். இது சாத்தியமில்லை என ஏன் நினைக்கின்றோம் என்றால் நாங்கள் அங்கிருந்து வரும் அரிசி மாவையும், பியரையும், சாராயத்தையும் சாப்பிட்டால் தான் குடித்தால் தான் உண்டு என நினைக்கின்றோம். வேறு நாடுகளில் இருந்தும் இதே பொருட்களை நாம் பெற முடியும்.

ஆகவே, நான் கூறுவது நீங்கள் பியரையோ, சாராயத்தையோ குடிக்காதீர்கள், அரிசி மாவைச் சாப்பிடாதீர்கள் என்றல்ல. அவற்றை சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்து சாப்பிடாதீர்கள் என்றே கூறுகின்றேன். நீங்கள் கூறுவது போன்று எமது மக்கள் சோறு, கோழி, சொதி எனப் பழகி விட்டார்கள். அதனைச் செய்யுங்கள். ஆனால், சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்து சாப்பிடாதீர்கள். ஏனெனில் இது மற்ற நாடுகளிலும் உள்ளது. இது தான் என்னுடைய கருத்து.

புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் போராட்டங்கள் பரப்புரைகள் முறையாக முன்னெடுக்கப்படுவதில்லை என்றொரு கருத்தை நீங்கள் முன்னொரு தடவை வைத்திருந்தீர்கள். அந்தக் கருத்தை நீங்கள் வைத்ததன் பின்னர் நடைமுறையில் ஏதாவது மாற்றங்கள் தெரிகின்றதா?

உண்மையில் கூறப் போனால் கடந்த சில மாதங்களாக பரப்புரைகள் யாவும் பாரிய அளவில் தான் நடைபெறுகின்றது. ஆனால், நான் குறையாகக் கூறவில்லை. அவை ஒழுங்காக ஒருங்கிணைக்கப்படவில்லை என்பதை பல விழிப்புப் போராட்டங்களில், கூட்டங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் நடைபெறுகின்ற அனைத்தும் பெரிய அளவில் நடைபெறுகின்றது.

பரப்புரை என்பது வேறு கூட்டங்கள், போராட்டங்கள் நடத்துவது வேறு. பரப்புரை என்பது தாயகத்தில் படுகொலை, மனித உரிமை மீறல்கள் நடைபெறும் போது அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் தனிப்பட்டவர்களுடனும் சேர்ந்து கதைப்பது. இங்கு அரச மட்டங்களில் தான் எமது வேலைத் திட்டங்கள் அமைய வேண்டும். இதனால் நான் முன்பு சொன்ன குறை நிவிர்த்தி செய்யப் பட்டதாகக் கூறவரவில்லை. எமக்குள் இன்னமும் 'வைக்கோற் பட்டறை நாய்' போன்று வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். தாமும் செய்வதில்லை. மற்றவர்களையும் செய்ய விடுவதில்லை.

இந்தக் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய முடியாது. ஏனெனில் அங்கே மக்கள் அழிந்து கொண்டிருக்கின்றார்கள். எனவே உடனடியாக நாட்டினுடைய மந்திரிமார், அரச மட்டத்திற்கு விடயத்தை எடுத்துச் செல்ல வேண்டும்.

புலம்பெயர் சமூகத்தைப் பொறுத்தவரை மனித உரிமைகள் விவகாரத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றி வருபவர் நீங்கள். அதனால் உங்களுக்குப் பல்வேறு வகையான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. அண்மைக் காலத்தில் நீங்கள் ஆபிரிக்காவில் பணமின்றித் தவிப்பதாக போலியான மின்னஞ்சல் ஒன்று உலாவியது. தொடர்ந்து காவல்துறையினரால் தேடப்படுவதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இத்தகைய செய்திகள் வெளிவருவதன் பின்னணி என்ன?

இத்தகைய பொய்ப் பரப்புரைகள் அண்மைக்காலமாக அதிகரித்து இருப்பது யாவரும் அறிந்ததே. இதற்கு 2, 3 காரணங்கள் உள்ளன.

முதலாவதாக என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களின் நோக்கம் என்னவெனில் இவற்றை அடிப்படையாக வைத்து வெளிநாடுகளில் என்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் எனும் எதிர்பார்ப்பே. இதை சிறிலங்கா அரசும் அரசுடன் சேர்ந்தவர்களும் எதிர்ப்பார்க்கின்றார்கள். அது இதுவரை நடைபெறவில்லை.

அது நடைபெறாத காரணத்தினால் இதே குற்றச்சாட்டுக்களை இங்கே ஐ.நா. சபையிலே வைத்து என்னை சபை அமர்வுகளுக்குச் செல்லாமலும் முக்கியமான சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்ளாமலும் தடுக்க நினைத்தார்கள்.

அதுவும் வெற்றியளிக்கவில்லை. இதன் காரணமாக இப்போது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், அவர்கள் தனிப்பட்ட முறையில் எனக்குச் செய்யவிருக்கும் தீங்கை இலக்காகக் கொண்டது. அவர்கள் எனக்கு எத்தகைய தீங்கைச் செய்ய இருக்கிறார்கள் என்பதை நான் கூற விரும்பவில்லை. என்னைத் தாக்கிவிட்டு அதனை நியாயப்படுத்துவதற்கான ஒழுங்குகளைச் செய்து வருகின்றார்கள்.

இது பலருக்கும் தெரியும், பலரிடமும் கூறியுள்ளோம். அதற்காகத் தனிப்பட்ட பாதுகாப்புத் தேவையென நான் கூற வரவில்லை. எதுவும் எப்போதும் நடைபெறக்கூடும் என அவதானத்துடன் இருக்கின்றேன். ஆனால், இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சி எனது பணியைக் கைவிட மாட்டேன். புள்ளி விபரங்களும் உண்மைத் தரவுகளும் தரப்பட வேண்டிய அனைவருக்கும் தரப்படவே செய்யும். இத்தகைய பணியில் இது போன்ற அச்சுறுத்தல்கள் வரும் என்பதை நான் 20 வருடங்களுக்கு முன் இந்தப் பணியை ஆரம்பிக்கும் போது தெரிந்து கொண்டு தான் ஆரம்பித்தேன்.

சர்வதேச சமூகத்தைப் பொறுத்தவரை ஈழத் தமிழர்கள் விவகாரம் தொடர்பில் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்படுகின்றது. அதாவது நாங்கள் எங்கள் உரிமைக் கோரிக்கைகளை எமது அபிலாசைகளை சர்வதேச சமூகத்திடம் அழுத்தி வலியுறுத்தத் தவறி விட்டோம். பதிலாக ஆயுதப் போராட்டத்தை முன்னிலைப்படுத்தியே எமது கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். ஆகவே எமது அணுகுமுறையை மாற்றி தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான பிரச்சினை உள்ளது. அது அரசியல் ரீதியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பது போன்று தெரிகின்றது. இது தொடர்பாக என்ன கூற விரும்புகிறீர்கள்?

உண்மையைச் சொல்வதானால் எனது வேலைத் திட்டங்கள் பெரும்பாலும் ஐ.நா. சபைக்குள்ளும் அதனுடன் சம்பந்தப்பட்ட மற்றைய அமைப்புக்கள் நிறுவனங்களிடம் எமது சுயநிர்ணய உரிமை பற்றி மீண்டும் மீண்டும் சரியான முறையில் மனுக்கள் அறிக்கைகள் தரப்பட்டு வந்துள்ளன.

அதேவேளை, ஜெனீவாவில் வருடா வருடம் நடைபெறும் பேரணி தரப்படும் அறிக்கைகள் யாவும் இவற்றை வலியுறுத்துவதாகவே இருக்கின்றன. அதாவது அரசியல் வேலைத் திட்டங்கள் சரியாகவே நடைபெற்றுள்ளன.

வெளிநாட்டு அரசாங்கங்கள் நீங்கள் தொடர்ந்தும் 35 வருடகால சாத்வீகப் போராட்டங்களையே தொடர்ந்திருக்க வேண்டுமென மறைமுகமாக கூறுகின்றன. ஆயுதப் போராட்டம் எதனால் ஆரம்பமானது என எமக்கு நன்கு தெரியும். 35 வருட கால சாத்வீகப் போராட்டத்தின் போது நடைபெற்ற அனர்த்தங்களும் தெரியும். இந்த அடிப்படையில் நாம் எமது 35 வருடகால அனுபவத்தை சரியாக எடுத்துச் சொல்லும் போது அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

எனவே எமது மக்கள் மனந்தளராது தமது பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

ஐ.நா.வின் செயற்பாடுகள் தாமதமாகவே இருந்தாலும் இறுதியில் பலனைத் தரும். இதனையே என்னால் கூற முடியும் என்றார் அவர்.

Comments