தமிழகத் தலைவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்


தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து தொடர்ந்து பல இயக்கங்கள் நடத்தி வரும், பா.ம.க., ம.தி.மு.க., வி.சி.க. அமைப்புகளின் மரியாதைக்குரிய தலைவர்கள் திருவாளர்கள் ச. இராமதாசு, வை.கோ., திருமாவளவன் மற்றும் அண்மையில் இப்போராட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டுள்ள இ.க.க. தலைவர் தா. பாண்டியன் ஆகியோர்க்கு, உங்கள் அனைவருக்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மனித நேய, மனித உரிமைக் கண்கொண்டு நோக்கும் ஒரு சாதாரண தமிழனின் பணிவான வேண்டுகோள்.

நீங்கள் அனைவருமே தமிழீழ விடுதலைப் போரை ஆதரிப்பவர்கள் என்பதும், அம்மக்கள் பால் பரிவும், நேசமும் கொண்டவர்கள் என்பதும் எப்பாடுபட்டேனும் அம்மக்கள் துயர் துடைக்க நம்மாலானதைச் செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை யுடையவர்கள் என்பதும் எவரும் மறுக்க முடியாத ஓர் உண்மை. இச்சிக்கலின் தீர்வுக்காக அன்றாடம் நீங்கள் விடுக்கும் அறிக்கைகள், மேற்கொள்ளும் நடவடிக்கைகள், நடத்தும் போராட்டங்களே, இதை உணர்த்தும்.

ஆனால், இவ்வளவு முயற்சிகளும், இச்சிக்கலின் தீர்வுக்கு குறிப்பிட்ட எந்த விளைவையும் உருவாக்காமல் எந்த முன்னேற்றத்தையும் எட்டாமல், தில்லி அரசும் கிஞ்சித்தும் மசியாமல் போராட்டங்கள் பாட்டுக்கு இது ஒருபுறம் நடக்க, தில்லி அரசின் நடவடிக்கைகள் பாட்டுக்கு அது எப்போதும் போல் தொடர, இன்னமும் போர் நிறுத்தம் ஏற்படாமல் அன்றாடம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள் என்பதையும் தாங்கள் நன்கு அறிவீர்கள்.

இந்த நிலைமைக்குக் காரணம், தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவில் உங்களுக்குள் ஒருமித்த கருத்து இருந்தாலும், அது ஒருமித்து வலுவாக ஒலிக்க முடியாமல், கூட்டணி அரசியல் சார்ந்து தனித்தனியாக ஒலிப்பதுதான் என்பதே தமிழக மக்களுடைய தாழ்மையான கருத்து. தமிழக ஆட்சி பீடத்தில் மாறி மாறி அமரும் வாய்ப்புள்ள கட்சிகள் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும். இதில் ஈழப் போராளிகள் என்றாலே எட்டிக் காயாய் கசப்பை உமிழ்பவர் அ.தி.மு.க. தலைவர் செல்வி செய லலிதா. ஈழம் மலர்ந்தால் மகிழ்வேன், ஆனால் அதற் காக துரும்பையும் அசைக்க மாட்டேன் ஏனென்றால் இதில் தில்லி அரசின் நிலைபாடுதான் என் நிலைபாடு எனக் கூறி, ஒருபுறம் தமிழீழ உணர்வாளர் களை சாந்தப் படுத்தும் வகையிலும், மறுபுறம் தில்லி சேவகத்திலும் அது மனம் கோணாத வகையிலும் இரட்டை வேடம் போட்டு தன் குடும்ப நலன் காக்க தமிழக மக்களை ஏமாற்றி, வஞ்சித்து தமிழக மக்க ளுக்குத் துரோகம் இழைத்து வருபவர் தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி.

இப்படிப்பட்ட இரு கட்சி களோடு, நீங்கள் கூட்டு சேர்ந்து இருப் பதே, ஈழச் சிக்கல் சார்ந்து, தமிழக மக்களின் குரல் ஒருமித்து ஒலிப்பதற்குத் தடையாக இருக்கிறது என்பதே தமிழக மக்களுடைய மதிப்பீடு. இன்றுள்ள அரசியல் சூழலில் அவரவரும் தங்கள் கட்சியைக் காத்துக் கொள்ளவும், கட்சியில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற வும் ஆட்சியில் பங்கு கொள்ளவும், இந்தக் கூட்டணி சாகச மெல்லாம் தேவைப் படுகிறது என்பதும், எல் லோரும் இப்படிப்பட்ட அரசியலில் இருக்க ஒருவர் மட்டும் புனிதவானாக ஒன்றும் செய்து விட முடியாது என்ப தாலேயே இப்படி நீங்கள் எல்லாப் பிரச்சினைகளிலுமே நெளிவு சுளிவாக நடந்து கொள்கிறீர்கள் என்பதும் தமிழக மக்களுக்குப் புரியாததல்ல.

என்றாலும் நிலமை இப்படியே நீடித்தால், தமிழீழச் சிக்கலின் தீர்வுக்கு மட்டுமல்ல, தமிழகச் சிக்கல்களின் தீர்வுக்கும் காட்டாக, காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, கச்சத்தீவு கண்ணகி கோட்டம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல் களின் தீர்வுக்கும் என்னதான் வழி என்பதுதான் தமிழக மக்களின் மிகப் பெரும் கேள்வியாக கவலையாக இருக்கிறது. நீங்கள் சற்று யோசித்துப் பாருங்கள். இந்தியப் பிரதமர் நினைத்தால் ஈழப் போரை நிறுத்தக் கோரி ஒரு நாளில் அறி விக்க முடியாதா. தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைத் தால் இந்திய அரசுக்கு அப்படி ஒரு நிர்ப்பந்தத்தைத் தர முடியாதா.

காவிரிப் பிரச்சினைக்காக கர்நாடகத்தின் வற்புறுத்தலை ஏற்று தன் அமெரிக்க பய ணத்தைத் தள்ளி வைத்து இரண்டே நாளில் பேச்சு வார்த் தைக்கு ஏற்பாடு செய்கிறார் அன்றைய வாஜ்பேய். ஆனால் இன்று தமிழன் பிரச்சினைக்கு அப்படி ஒரு வலியுறத்தல் இல்லை. இன்றைய பிரதமர் எதற்கும் செவி சாய்ப்பதுமில்லை. தமிழக மக்கள், தமிழக அரசியல் கட்சித் தலை வர்களின் கோரிக்கைகளின்பால் இப்படிப்பட்ட அலட்சியம், கோரிக் கைகளை உதா சீனம் செய்கிற ஆணவம் தில்லி ஆட்சியாளர்களுக்கு எங்கிருந்து வரும்?

தமிழக அரசியல் கட்சிகள் எந்த நாளிலும் தங்களுக்கு எதிராகத் திரும் பாது, அக்கட்சிகளுக்குள் ஆயிரம் கருத்து முரண்பாடு இருந்தாலும், அவை தங்களுக்குள் என்னதான் மோதிக் கொண்டாலும், அக்கட்சிகள் ஏதாவதொரு வகையில் மாற்றி மாற்றி தங்களுக்கு சேவை செய்து கொண் டிருக்கும் என்கிற நம்பிக்கையில்தானே அவர்கள் அப்படி நடந்து கொள்கிறார்கள். கடந்த கால நடைமுறையும் அதுதானே. இதுதானே ஈழச் சிக்கலின் தீர்வுக்கான முன்னேற்றத் துக்கும் தடையாக இருக்கிறது. எனவே இந்த நிலையில் தமிழக மக்கள் உங்களிடம் எதிர்பார்ப்ப தெல்லாம் இதுதான்.

முதலாவதாக, தமிழீழ விடு தலைப் போராட்டத்தை ஆதரிக்கும் நீங்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஒன்று பட்டு ஒரு கூட்ட மைப்பை அல்லது பேரமைப்பை உருவாக்க வேண்டும். அது “ஈழ மக்கள் பாதுகாப்புக் கூட் டமைப்பு” அல்லது “ஈழ மக்கள் பாதுகாப்புப் பேரமைப்பு” என்கிற அல்லது இது போன்ற ஏதாவ தொரு பெயரில் இயங்க வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எந்தச் சூழ்நிலையிலும் ஆத ரித்து வருவதுடன், இந்த நோக்கத் திற்காக எந்த அமைப்பு குரல் கொடுத் தாலும் அத்துடன் தன்னையும் இணைத்துக் கொண்டு நேரில் சென்று ஆதரவு அளித்து வருகிற, 1990இல் தொடங்கி கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக “தமிழீழ விடுதலை ஆதர வாளர் ஒருங்கிணைப்புக் குழு” என்கிற அமைப்பை இந்த நோக்கில் செயல் படுத்தி வருகிற திரு. பழ. நெடுமாறன் அவர்கள் எப்போதும் உங்களுடன் இருப்பார்.

இப்படி நீங்கள் ஐவரும் ஒன்று பட்டு ஒரணியில் நின்றால் ஈழச் சிக்கலுக்கு மட்டுமல்ல, தமிழகச் சிக்கல்களுக்கும் பல தீர்வுகள் கிட்டும். ஆனால் இப்படி நீங்கள் ஒன்றுபடத் தடையாயிருப்பது எது என்பதுதான் தமிழக மக்களின் கேள்வி. ஈழ விடுதலையை ஆதரிப்பது தமிழக மக்களின் விருப்பத்துக்கு எதிராகப் போய்விடுமோ என்று நீங்கள் அஞ்சத் தேவையில்லை. ஊடகங்களின் சமீப கால கருத்துக் கணிப்பெல்லாம் மக்கள் இதற்கு ஆதரவாகவே உள்ளனர் என்பதைத் தான் மெய்ப்பிக்கின்றன. ஆகவே இது உங்களுக்குப் பிரச்சினை யாக இருக்க முடியாது.

அடுத்தது கூட்டணி : கூட்டணி என்பது இரண்டு வகையில் அமையும். ஒன்று அவரவர் தங்கள் கொள்கை கோட்பாடுகளைக் கைவிடாமல், தொகுதிப் பங்கீடுகளுக்காக மட்டுமே கூட்டு சேர்வது, இன்னொன்று தொகுதி பேரம் சுமுகமாய் அமைய வேண்டுமே என்பதற்காகவே கொள்கை கோட்பாடு களை கைவிடுவது அல்லது பின்னுக்குத் தள்ளுவது. இதில் இரண்டாவது வகை நிலைப்பாட்டிற்கு, நீங்கள் யாரும் உங்களை உட்படுத்திக் கொள்ள மாட்டீர்கள், முதல் வகைக் கூட்டணி யின் அடிப்படைக் கொள்கை வழியில் உறுதியாக நிற்பீர்கள் என்றே தமிழக மக்கள் திடமான நம்புகிறார்கள்.

ஆகவே, நீங்கள் எந்தக் கூட்டணி யில் இருந்தாலும் நாங்கள் ஈழ விடு தலைப் போரில் உறுதியாக நிற்போம், எந்தக் கூட்டணி உறவுக்காகவும் நாங்கள் எங்கள் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம், சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என உறுதியாக நிற்பீர்கள் என்பதிலும் எந்தத் தடையும் இல்லை. ஆக, மக்கள் ஆதரவும் பிரச்சினை யில்லை. கூட்டணி உறவும் பிரச்சினை யில்லை என்றால் அப்புறம் வேறு என்னதான் பிரச்சினை. உங்களை ஒன்று படுத்துவது யார், உங்களுக்குள் உறவுப் பாலமாக இருப்பது யார் என்பது ஒரு கேள்வியாக எழலாம். இதற்கு யாருமே தேவையில்லை. உங்கள் அனைவரையும் ஒன்று படக் கோருவது ஈழச் சிக்கல், தமிழகச் சிக்கல், தமிழக மக்கள். ஆகவே தமிழகத் தலைவர்களாக உள்ள நீங்கள், தமிழக மக்கள் கோரிக்கையை ஏற்று ஒன்றுபட வேண்டும் என்பதே தமிழக மக்களின் வேண்டுகோள். அப்படி உறவுப்பாலமாக ஒருவர் வேண்டுமென்றால் எல்லாரிலும் மூத்த நீண்ட காலமாக ஈழ விடுதலை ஆதரவு நோக்கில் செயல்பட்டு வருகிற திரு. பழ நெடுமாறன் அவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்.

சரி, அப்படி ஒரு கூட்டமைப்பு உருவானால், அதற்கு யார் தலைமை ஏற்பது, யார் வழி நடத்துவது என்று சிலர் கேட்கலாம். இந்தக் கூட்ட மைப்பைப் பொறுத்தவரை, இதைத் தனித்த கட்சி அமைப்பு போல் நோக்க வேண்டியதில்லை. இதில் எல்லோருமே தலைவர்கள் தான். எல்லோருமே வழி நடத்துபவர்கள்தாம். அந்த வகையில் இந்த அமைப்புக்கு ஒரு தலைமைக் குழுவை கூட்டுத் தலைமையை உருவாக்கி எந்தப் பிரச்சினையிலும் கூடிக் கலந்து விவாதித்து கூட்டு முடிவெடுத்து, அதை நிறை வேற்றலாம். ஒருங்கிணைப்பது என்று கூட யாரும் வேண்டியதில்லை. இந்த தலைமைக் குழுவில் எவர் விரும்பி னாலும் மற்றவர்களைத் தொடர்பு கொண்டு கூட்டத்தைக் கூட்டவும், முடிவுகள் எடுக்கவும் வாய்ப்புள்ள வகையில் ஏற்பாடு செய்யலாம்.

இப்படி சமத்துவ அடிப்படை யிலும், சனநாயக அடிப்படையிலும் ஒன்று பட்டு நீங்கள் அனைவரும் ஒரு நிலைத்த கூட்டமைப்பை உருவாக்கி னால்தான், ஈழச் சிக்கலுக்கு ஒரு தீர்வு கிட்டும். அதோடு மட்டுமல்ல, தமிழகம் எதிர் கொள்ளும் சிக்கல் களுக்கும் இதுவே தீர்வாக அமையும் என தமிழக மக்கள் நம்புகிறார்கள். ஆகவே நீங்கள் அனைவரும் அன்பு கூர்ந்து உங்கள் மனச் சாட்சியைத் தொட்டு ஒரு நொடி சிந்தித்துப் பாருங்கள். நாம் தமிழ்நாட்டில் இருக் கிறோம். தமிழர் நலனில் அக்கறை யுள்ள ஒரு கட்சியாக இருக்கிறோம். இருந்தும் தமிழக மக்களின் உரிமை களை, தமிழீழ மக்களின் உரிமைகளை மீட்க முடியாமல் இருக்கிறோமே, இந்தத் துயர நிலையை எவ்வாறு மாற்று வது என்பது குறித்து, நம் வாழ்நாளில் நாம் எதையும் செய்யாது இருக்கி றோமே இது நியாயமா என்று யோசித்துப் பாருங்கள். இப்படி இருந்தால் வரலாறு ஒரு போதும் நம்மை மன்னிக்காது என்பதை இந்த நெருக்கடியான தருணத்தில் நாம் வாழ்ந்ததற்கான, கட்சி நடத்தியதற்கான அர்த்தமும் இருக்காது என்பதை அன்பு கூர்ந்து நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்.

ஒரு கருத்தை நாம் தொடாந்து வலியுறுத்தி வருகிறோம்.ஒரு அரசியல் தலைவர் தன் வாழ் நாளில் தன் கட்சிக் காரர்களுக்கு எத்தனை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பபெற்றறுத் தந்தார். எத்தனை பேரை அமைச்சர்களாக்கினார் என்பது பற்றி யெல்லாம் வரலாறு கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை. அதைப் பொருட் படுத்திக் கொள்வதுமில்லை. மாறாக அவர் தன் வாழ்நாளில் தான் பிறந்த மண்ணுக்கு தான் பேசும் மொழிக்கு தான் வாழும் சமூகத்திற்கு என்ன செய்தார் என்பதை வைத்தே மதிப் பிடுகிறது என்பது தாங்கள் அறியா ததல்ல. ஆகவே, காலத்திற்குக் காலம் தோன்றி மறையும் சாதாரண சராசரித் தலைவர்களில் ஒருவராய் அல்லாமல் வரலாற்றில் போற்றப்படும் வல்லமை மிக்கத் தலைவர்களாய் நீங்கள் விளங்க வேண்டும். காலத்தின் கட்டளையை ஏற்று தமிழீழ தமிழக நிலைமைகளை உணர்ந்து இதன் விடியலுக்காக நீங்கள் வரலாறு படைக்க வேண்டும் என்பதே தமிழக மக்களாகிய எங்களின் அன்பு வேண்டுகோள்.

எங்கள் வேண்டுகோளில் ஏதும் பிழையிருந்தால் குறையிருந்தால் தமிழீழ விடியலுக்காகவும், தமிழக நலனுக்காகவும் அன்பு கூர்ந்து அவற்றைப் பொருத்தருளுமாறு மெத்தப் பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.
இராசோ

Comments