புதிய சமாதனப் புறா


செ
ன்ற வாரம் சென்னை அமெரிக்கத் துணைத் தூதரகத்திற்கு இரண்டு குழுக்கள் சென்றன. விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க. தூதுக்குழு சென்றது. இலங்கை (ஈழப்) பிரச்னையில் ஐ.நா.மன்றம் தலையிட வேண்டும் என்றும், அதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா முன் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கோரியது.

அதற்கு முன்னர் நடந்த பெரும் பேரணியில் விஜயகாந்த் தீர்க்கமான ஒரு கருத்தை முன் வைத்தார். `ஈழப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு கண்ட பின்னர்தான் `ஆயுதங்களைக் கைவிடுக' என்று விடுதலைப் புலிகளை வலியுறுத்த வேண்டும்' என்று அவர் தெரிவித்தார். அதனைத் தமிழ் உலகம் இருகரம் விரித்து வரவேற்கிறது.

இன்னொரு குழுவினர் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக அய்யா நெடுமாறன் தலைமையில் அமெரிக்கத் துணைத் தூதரகம் சென்றனர். அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், ம.தி.மு.க. தலைவர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பி.ஜே.பி.யின் பிரதிநிதி ஆகியோர் அங்கம் பெற்றிருந்தனர்.

அமெரிக்க அதிபர் ஒபாமா முன் முயற்சி எடுத்து ஈழப்போரை நிறுத்த வேண்டும். இந்தப் பிரச்னையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று அய்யா நெடுமாறன் குழுவினர் கோரிக்கை கொடுத்திருக்கிறார்கள்.

ஈழம் விரைவில் விடியல் காண வேண்டும் என்று இரண்டு குழுவினருமே ஆர்வம் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதற்கு அமெரிக்கா எப்படி உதவி செய்ய முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள்?

விடுதலைப் புலிகள் இயக்கத்தை அமெரிக்கா தடை செய்திருக்கிறது. அந்த இயக்கத்திற்கு ஆதரவாக நிதி திரட்டுகிறார்கள் என்று பல தமிழ் ஆர்வலர்கள் அங்கே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

நடுநிலை நாயகனாக நின்ற இந்தியாவை, பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்கத் தொழுவத்தில் கட்டி வைத்து விட்டார். அதன் விளைவாக, அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் ஓர் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. அந்த உடன்பாட்டின் பிரதான அம்சம் என்ன? உலகில் எங்கே தீவிரவாத இயக்கம் தோன்றினாலும் - செயல்பட்டாலும் அதனை எதிர்த்து அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து நின்று போராடும் என்பதுதான்.

விடுதலைப்புலிகள் இயக்கம் அமெரிக்காவின் பார்வையில் பயங்கரவாத இயக்கம். இந்திய அரசின் பார்வையிலும் பயங்கரவாத இயக்கம். முன்னர் அந்த இயக்கத்தை காங்கிரஸ் அரசு தடை செய்தது. அடுத்து வந்த பி.ஜே.பி. அரசும் தடை செய்தது. அந்தத் தடை இன்று வரை நீடிக்கிறது.

எனவே, இந்தியாவும் அமெரிக்காவும் ஈழமக்களின் இயக்கத்திற்கு எதிராகவே நிற்கின்றன. `வேண்டுமானால் பிரபாகரனைக் கைது செய்யுங்கள், அப்பாவி மக்களைக் கொல்லக்கூடாது' என்று கூறுவார்கள். இது கபட சந்நியாசிகளின் உபதேசம். இலங்கை அரசிற்குத் தேவையான ஆயுதங்களை அமெரிக்காவும் அளிக்கிறது. இப்போது இஸ்லாமிய உலகில் அந்த நாடு தயார் செய்யும் `தாதா' இஸ்ரேலும் அள்ளி அள்ளிக் கொடுக்கிறது. நல்ல வியாபாரம்.

ஈழப் பரப்பில் இன்றைக்கு சிங்கள ராணுவ விமானங்கள் கொத்துக் குண்டுகளை வீசுகின்றன. கொத்துக் குண்டு என்றால் என்ன? ஒரு குண்டு வெடிக்கும்... அதிலிருந்து பல குண்டுகள் சிதறும். ஒவ்வொரு குண்டும் பரவிப்படர்ந்து சென்று பெரும் பேரழிவை ஏற்படுத்தும்.

இதே கொத்துக் குண்டுகளைத்தான் இன்று வரை பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் வீசுகிறது. நேற்று லெபனானில் வீசியது. இன்றைக்கு ஈழப்பிரதேசத்தில் அதே குண்டுகளைத்தான் சிங்கள அரசு பொழிகிறது. அவை அமெரிக்க சட்டாம்பிள்ளையான இஸ்ரேலின் தயாரிப்புக்கள்.

வியட்நாமில் முன்னர் கம்பளக் குண்டுகளை வீசியது அமெரிக்கா. அதன் தொடர்ச்சியான வளர்ச்சிதான் கொத்துக் குண்டுகள்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் யுத்தம் நடத்துவதைக் கண்டித்து ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் தீர்மானம் வந்தது. தனக்குள்ள ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தத் தீர்மானத்தையே அமெரிக்கா தோற்கடித்தது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்குத் துணை நின்றது. இப்படி ஒரு முறை அல்ல, இருமுறை அல்ல, எத்தனையோ ஆண்டுகளாக இஸ்ரேலுக்கு ஆதரவாக, ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கு ஆதரவாக ஐ.நா. மன்றத்திலும் அமெரிக்கா துணை நிற்கிறது.

கியூபாவிற்கு எதிராக முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து வருகிறது. கியூபா மக்களை பட்டினி போட முயன்றது. மருந்துகள் ஏற்றுமதியைத் தடைசெய்து நோயால் மக்கள் மடியட்டும் என்றது. கியூபாவிற்கு ஆதரவாக ஐ.நா. மன்றத்தில் குரல் எழும்பிய போதெல்லாம் எழுப்பியவர்களின் குரல்வைளயை நெரித்தது.

ஆக்கிரமிப்பு யுத்தங்களின் அதிபதியே அமெரிக்காதான். அன்றைக்கு வீரம் விளையும் வியட்நாமில் பார்த்தோம். இன்றைக்கு ஈராக்கிலும், ஆப்கனிஸ்தானிலும் பார்க்கிறோம். அதற்கு என்ன காரணம் கூறுகிறது? பயங்கரவாதத்தை முறியடிக்கப் படை கொண்டு செல்கிறோம் என்று அமெரிக்கா சொல்கிறது. இன்றைக்கு ஈழத்தில் பயங்கரவாதத்தை எதிர்த்துத்தான் அந்தப் பொன்விளையும் பூமியைத் துவம்சம் செய்கிறோம் என்று சிங்கள இனவாத அரசும் வாதிடுகிறது. அமெரிக்கா யாருக்குத் துணை நிற்கும்?

உலகில் முதன்முதலாக அணுகுண்டுகளைப் பயன்படுத்தியதே அமெரிக்காதான். இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய நகரங்கள்மீது அணுகுண்டுகளை வீசியது. அப்போது அண்ணல் காந்தியடிகள் எச்சரித்தார்.

ஜப்பான் ஆயிரம் தவறுகள் செய்திருக்கலாம். ஆனால், அதனைத் தண்டிக்கும் அதிகாரம் அமெரிக்காவிற்கு இல்லை என்றார். ஆனாலும் இன்று வரை உலகின் முரட்டு தாதாவாகத்தான் அமெரிக்கா செயல்படுகிறது. காரணம், அதன் ஆயுத உற்பத்தியிலும் விற்பனையிலும்தான் அதன் உயிர்மூச்சு உலவிக் கொண்டிருக்கிறது. எனவே, உலகில் எங்காவது சிறுசிறு யுத்தங்களாவது நடந்து கொண்டிருந்தால்தான் அதற்கு ஜீவனம் நடக்கும். எனவே, ஈழத்தில் அமைதி திரும்பிட - போர் நின்றிட அந்த நாடு எப்படி உதவிக் கரம் நீட்டும்?

ஆனால், அதனை அமைதிக் காவலனாகவும் சமாதானத் தூதுவனாகவும் சித்திரிக்கின்ற முறையில் ஈழப் பிரச்னையில் தலையிடுக என்று அதன் பாதார விந்தங்களில் மனுக்களை சமர்ப்பிப்பது என்ன நியாயம்? கொலைக்களக் குற்றவாளியிடம் போய் ஈழத்து மக்களுக்கு உயிர்ப் பிச்சையா கேட்பது?

அமைதிக்கும் அமெரிக்காவிற்கும் என்ன சம்பந்தம்? ஈழத்தில் பெருக்கெடுக்கும் ரத்த வெள்ளத்தைத் துடைக்க அமெரிக்க இலவம் பஞ்சு பயன்படுமா? அது பஞ்சின் தோற்றம் கொண்ட பாஸ்பரஸ்.

பாலஸ்தீன மக்களின் ஹமாஸ் இயக்கம் நமக்கும் உலகிற்கும் விடுதலை இயக்கம். ஆனால், அமெரிக்காவிற்கு பயங்கரவாத இயக்கம். அதேபோல அதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம்தான். எனவே, சிங்கள அரசிற்கு அமெரிக்கா சிங்காரிப்புகள் செய்யும். ஆனால், ஈழ மக்களுக்கு ஆதரவாக இருக்காது.

பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரால் ஆப்கனுக்கு மேலும் பதினேழாயிரம் துருப்புக்களை அமெரிக்காவின் புதிய அதிபர் ஒபாமா அனுப்புகிறார். நாளை ராஜபக்ஷே அழைத்தால் ஈழத்திலும் அமெரிக்கத் துருப்புக்கள் கொட்டு மேளத்தோடு இறங்கும். எனவே, அமெரிக்காவிற்கு மனுக்கொடுத்து அதனை சமாதான சாம்ராட்டாக சித்திரிக்காதீர்கள்.

Comments