அ.மார்க்சின் பிரச்சனை என்ன?

1

LTTE அ.மார்க்சின் ஈழம் தொடர்பான பார்வைக் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டு சில விடயங்கள் பற்றிப் பார்ப்போம். அ.மாவின் சமீபத்தைய நேர்காணலொன்று ‘புத்தகம் பேசுது’ சஞ்சிகையில் “புலிகளை மட்டுமே வைத்து பிரச்சனையை அணுகுவதை சற்றே ஒத்திவைப்போம்’ என்ற தலைப்பில் இடம்பெற்றிருந்தது. அதில் ஈழம் தொடர்பில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசியிருக்கும் மார்க்ஸ் மீண்டும் தனது ஈழம் தொடர்பான அரைகுறை அவதானத்தையும், சிலரால் அவருக்கு போதிக்கப்பட்ட விடயங்களைக் கொண்டும் இன்றைய ஈழத்து நிலைமைகளை மதிப்பிட முயன்றிருக்கின்றார்.

புலிகள் தொடர்பாக நேர்மையான விமர்சனங்களை செய்வதானது ஒரு பிழையான விடயமல்ல ஆனால் அது காலம் குறித்த கரிசனை உள்ள விமர்சனமாக இருக்க வேண்டும். ஆனால் அ.மார்க்சிடம் அப்படியொரு தெளிவையும் நேர்மையையும் அவரது ஈழம் தொடர்பான எழுத்துக்களில் மற்றும் பேச்சுக்களில் கான முடியவில்லை. அ.மார்க்சின் ஈழம் தொடர்பான அனைத்து பதிவுகளிலும் இதனைக் கான முடியும். இந்த நேர்காணலும் அவற்றின் தொடர்ச்சிதான். இதிலுள்ள அபத்தம் என்னவென்றால் ஈழத் தமிழ் மக்கள் சொல்லொணா துயரங்களை சந்தித்துக் கொண்டிருக்கும்போதும், கருகிச் செத்துக் கொண்டிருக்கும் போதும் அவர்களது உடலங்களின் மேல் தனது புலமைத்துவ ஆற்றலை நிருபிக்க முயல்வதுதான். தமது உறவுகள் அழிகின்றார்களே என்ற உணர்வில் ஒன்றுபட்டு குரல் கொடுக்கும் தமிழக செயற்பாட்டாளர்களை எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் புலிகளின் முகவர்கள் என்று மார்க்ஸ் குறிப்பிடுகின்றார் என்றால் அ.மார்க்சின் மேதமையை என்னவென்பது.

ஒரு விடுதலைப் போராட்டம் அதன் வளர்ச்சிக் கட்டத்தில் பல்வேறு தடைகளை, சவால்களை சந்தித்தே வளர்வதுண்டு. அப்படியானதொரு படிமுறை சார்ந்த வளர்ச்சிப் போக்கில் தமிழீழ விடுதலைப் போராட்டமும் அதற்குரிய தடைகளை சவால்களை உள்ளக ரீதியாகவும் வெளியக சக்திகளிடமிருந்தும் எதிர் கொண்டிருக்கிறது. இதன்போது தவிர்க்க முடியாமல் சில முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அது சிலருக்கு வேதனையான சந்தர்ப்பங்களாகவும் இருந்திருக்கும். ஆனால் அத்தகைய சந்தர்ப்பங்களைக் கொண்டே எப்போதும் ஒரு போராட்டத்தையோ அல்லது அதன் தலைமையையோ மதிப்பிட முயல்வது சரியானதொரு கணிப்பாக இருக்காது என்றே நான் சொல்வேன்.

விடுதலைப்புலிகள் குறித்து மார்க்ஸ் போன்றவர்கள் வெளிப்படுத்திவரும் மதிப்பீடுகளில் மீண்டும் மீண்டும் பொதிந்திருக்கும் கருத்து, அவர்கள் ஏனைய இயக்கங்களை அழித்தார்கள், தடை செய்தார்கள் என்பது. புலிகள் மற்றைய இயக்கங்களை மட்டுப்படுத்தினார்கள், அமைதிப்படுத்தினார்கள்தான். ஆனால் அன்றைய புறச் சூழல் நிலைமைகளிலிருந்துதான் அதனை மதிப்பிட வேண்டுமே தவிர மன எழுச்சியினாலோ அல்லது யாரோ ஒரு சிலர் தமது சுய அனுபவத்தில் இருந்து சொல்வதைக் கேட்டோ மதிப்பிடக் கூடாது. டெலோ அமைப்பின் தலைவராக செயலாற்றிய சிறிபாரெத்தினத்தை புலிகள் சுட்டார்கள் என்று சொல்பவர்கள், தமிழகத்திலிருந்து சபாரெத்தினம் ஏன் திடிரென இந்திய புலனாய்வுத் துறையால் யாழ்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பதைச் சொல்வதில்லை; அது பற்றி பேசவே முயல்வதில்லை. விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதற்காக ஏனைய அமைப்புக்கள் அனைத்தையும் இந்திய வெளிய புலனாய்வுத் துறையான றோ பயன்படுத்தியது என்ற உண்மையை எண்ணிப் பார்ப்பதில்லை. இந்த உண்மைகளை கருத்தில் கொண்டுதான் புலிகளின் கடந்தகால சில குறிப்பான அணுகுமுறைகளை மதிப்பிட முயல வேண்டும்.

1985 திம்பு பேச்சுவார்த்தையில் புளொட் தவிர்ந்த முக்கிய அமைப்புக்கள் அனைத்தும் ஒரு தேசிய அணியாக இணைந்து நின்றன. அவ்வாறு இணைந்து நின்ற அணிகளுக்கிடையில் எவ்வாறு பிளவுகள் தோன்றின, அதற்கு பின்னால் இருந்த றோவின் சதி முயற்சிகள் என்ன? இது பற்றியெல்லாம் சிந்திக்காமல் புலிகள் அழித்தார்கள் சிதைத்தார்கள் என்பது ஓர் அரை குறை பார்வையை பொதுமைப்படுத்தும் முயற்சியாகவே இருக்கும்.

2

அடுத்த விடயம், ஈழத் தமிழ் சமூக அமைப்பினை தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பதற்கான நியாயமாக காட்டுவது. அதில் முக்கியமானதுதான் தமிழக தலித்திய சிந்தனையை ஈழத்திற்கு பொருத்த முயல்வது. அதனைக் கூட சரி ஒரு சிந்தனைப் போக்காக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதிலுள்ள மிகப் பெரிய அபத்தம் என்னவென்றால் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பிரச்சனை பற்றி விவாதிக்கும்போது தலித்துக்கள் என்போருக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டுமென்பது. இது பற்றி அ.மார்க்ஸ் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

“வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இன்னும் அவர்கள் நாடு திரும்ப இயலவில்லை. கிழக்கில் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். தேசிய இனப் போராட்டத்தின் ஊடாக சாதிய ஒடுக்குமுறைகள் ஒழிந்துவிட்டதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இன்று கிழக்கு மக்கள் அந்நியப்பட்டு நிற்பதற்கும் இதுகாறும் புலிகளில் இருந்து எல்லாவிதமான மனித உரிமை மீறல்களுக்கும் காரணமாக இருந்த கருணா கும்பலின் சந்தர்ப்பவாதம் மட்டுமே காரணம் எனச் சொல்லிவிட முடியாது. இந்திய அரசியலின் பிரதிபலிப்பு எல்லாக் காலங்களிலும் ஈழத்தில் இருந்து வந்துள்ளதை பல ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இப்போதும் அது நடந்துள்ளது. தலித் இலக்கியம், தலித் இயக்கம் முதலான முயற்சிகள் அங்கே இப்போது வந்துள்ளன. ஐரோப்பாவில் இரண்டு தலித் மாநாடுகள் நடந்துள்ளன. எக்ஸில் என்றொரு இலக்கியப் பத்திரிக்கையை நடத்திக் கொண்டிருந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எம்.ஆர்.ஸ்ராலின் இன்று கிழக்கு மாகாணத்தின் தனித்துவம் பற்றிப் பேசுகின்றார். யாழ்ப்பாண மேலாதிக்கத்தின் கீழ் தாங்கள் இருக்க முடியாது என்கிறார். ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ‘தனி ஈழம்’ என்பது மட்டுமல்ல கூட்டாட்சிக்குக் கீழான ஒன்றிணைந்த தனி மாகாணம் என்ற கோரிக்கைக்குக் கூட ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழர்களுடைய ஆதரவும் உள்ளது எனச் சொல்ல முடியாது”

மேற்படி வாதமானது அ.மாவிற்கு ஈழ அரசியல் குறித்து எதுவுமே தெரியாதென்பதை நிரூபிக்கின்றது. முதலாவது அ.மா குறிப்பிடும் முஸ்லிம்கள் பற்றிய விடயத்திற்கு வருவோம். வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பான தவறுகள் தமிழர் தரப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம். ஆனால் முஸ்லிம்கள் தொடர்பாக தமிழர் தரப்பால் விடப்பட்ட தவறுகளை சதா சுட்டிக் காட்டும் அ.மா போன்றவர்கள் முஸ்லிம்கள் தொடர்ந்தும் பேரினவாத சிங்கள அரசுகளின் ஏவலாளிகளாக இருப்பது பற்றியும் தமிழரின் உரிமைகளை சிதைப்பதற்கான உப சக்திகளாக பயன்படுவதையும் ஏனோ பேச முன்வருவதில்லை. பேச்சுவார்த்தையில் சம அந்தஸ்து கோரிய முஸ்லிம் தலைமைகள் இன்று வன்னியில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டிருக்கும் போதும் பேரினவாத அரசின் பங்காளிகளாக இருக்கின்றார்களே அன்றி அதிலிருந்து விடுபட்டு செயலாற்றத் தயாராக இல்லை. நலன்களில் மட்டுமே சமசந்தர்ப்பம்; போராடுவதில் (சாவதில்) அல்ல.

அடுத்தது, தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியது. அ.மாவும் அவரை ஒரு தத்துவ ஆசிரியராகக் கருதும் சில புலம்பெயர் நண்பர்களும் சில வருடங்களாக ‘ஈழத்தில் தலித்தியம்’ பற்றி உரையாடி வருகின்றனர், ஆனால் இதிலுள்ள பிரச்சனை என்னவென்றால் இவ்வாறு தலித்தியம் பற்றி பேசும் அவர்களுக்கோ அவ்வாறானவர்களுக்கு ஆலோசனை வழங்கும் அ.மாவிற்கோ ஈழத்தின் சாதிய நிலைமை பற்றி எதுவுமே தெரியாது என்பதுதான்.

3

LTTE ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் என்பது நடந்து கொண்டிருக்கும் ஒரு போராட்டம். அதன் இலக்கு சிங்கள மேலாதிக்கத்திலிருந்து ஈழத் தமிழர்களை விடுவிப்பது. அதாவது தமிழர்களுக்கென்று ஒரு சுயாதீனமான அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதாகும். முதலில் அது நிகழ்ந்து முடியட்டும் பின்னர் அதில் இடம்பெற வேண்டிய அகநிலை மாற்றங்கள் குறித்து நாம் பேசலாம். இங்குள்ள பிரச்சனை என்னவென்றால் நம்மில் பலருக்கு தலை எது கால் எது என்று விளங்குவதில்லை. தம்மை புத்திஜீவிகளாக காட்டிக் கொள்ள வேண்டுமென்ற அவசரத்தில், இவர்கள் தலையைக் கால் என்பார்கள் காலை, தலை என்பார்கள். இவர்களது தேவை தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதே ஒழிய பிரச்சனைகளை புறச் சூழல் நிலமைகளுக்கு ஏற்ப அலசி ஆராய்வதல்ல. எல்லோருக்கும் தாங்கள் தங்கிக் கொள்வதற்கு வசதியான தரிப்பிடங்கள் தேவைப்படுகின்றன. அ.மார்க்சின் பிரச்சனையும் அதுதான்.

ஈழத்தில் தலித்துக்கள் ஒடுக்கப்படுகின்றனர், தமிழர் தேசியம் தலித்துக்களுக்கு விமோசனத்தைக் கொடுக்கப் போவதில்லை என்ற வாதங்களை சொல்லி வருபவர்களெல்லாம் ஒரு வகையான அடையாள விரும்பிகள்தான். இவர்களது கருத்துக்களில் ஒரு அடிப்படையான நேர்மை இல்லை. இவர்களைப் பொறுத்தவரையில் தலித்தியம் என்பது வசதியாகக் கருதி ஒளிந்து கொள்வதற்கான ஒரு கூடாரமேயன்றி வேறொன்றுமில்லை. தங்களை எழுத்தாளர்களாகவும், புலிகளை விட நாங்களே முற்போக்காளர்கள் என்று பீற்றிக் கொள்வதற்கும் இவர்களுக்கு தலித்தியம் தேவைப்படுகிறது. இதற்காக தங்களது கடந்த கால அனுபவங்களை சிரமப்பட்டு நினைவுக் குறிப்புக்களாக எழுதி வருகின்றனர். 30 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைமைகளை முற்றிலும் வேறுபட்டதொரு சூழலில் நினைவு கொள்கின்றனர். உண்மையில் இவர்களது பிரச்சனை தங்களது அனுபவங்களை சொல்லுவதன் மூலம் தங்களை இன்றைய தலைமுறைக்குள்ளும் அடையாளப்படுத்திக் கொள்வதுதான். இவர்களிடம் இருப்பது வெறுமனே அடையாள விருப்பு நிலை மட்டுமே.

ஆழமாகப் பார்த்தால் தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரிகளே இவர்கள்தான். ஏனென்றால் இவர்கள் கால மாற்றங்களை இருட்டடிப்பு செய்ய முயல்கின்றனர். கால மாற்றங்களை இருட்டடிப்பு செய்பவர்களின் பெயர் முற்போக்காளர்களோ அல்லது விடுதலை விரும்பிகளோ அல்ல. அவர்கள் பழமையின் ரசிகர்கள். இன்று ஈழத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனை அன்றுபோல் அப்படியேதான் இருக்கின்றது என்பவர்களும், தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தினால் ஏற்பட்ட உடைவுகளை சுட்டிக்காட்ட தயங்குபவர்களும் சாதி என்னும் அழிந்து போக வேண்டிய பழமையின் ரசிகர்களே அன்றி அதன் மறுப்பாளர்கள் அல்ல என்பதே எனது நிர்திடமான வாதம்.

4

அதற்காக நீங்கள் யாரும் நினைத்துவிடக் கூடாது, தலித்தியம் என்று சொல்லப்படுவதையோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்களின் நியாயமான பிரச்சனைகளையோ நான் மறுப்பதாக. ஈழத்தில் சாதியம் வலுவாக இருந்ததையும் இப்பொழுதும் திருமணம், சடங்கு, சமூக அந்தஸ்து போன்றவற்றில் அது உயிர்பெறுவதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் அது முன்னைய இறுக்கத்துடன் இருக்கிறது என்று வாதிடுவது சுத்த பம்மாத்து என்பதுதான் எனது துனிபு. இப்படியான பம்மாத்துக்களின் தோற்றுவாயைப் பார்ப்போமானால், தமிழக தலித்திய ஆய்வுகளையும், அங்குள்ள சாதிய அரசியல் அனுபவங்களையும் அரிச்சுவடிகளாக கொண்டு ஈழத்து அரசியலுக்கு விளக்கம் சொல்ல முற்படும் பொழுதுதான் இந்த பிரச்சனை எழுகிறது. தமிழக தலித்திய அரசியல் என்பது எந்தவகையிலும் ஈழத்து அனுபவங்களுடன் பொருந்திப் போகக் கூடிய ஒன்றல்ல. அது வேறு இது வேறு.

ஆனால் அதனை வலிந்து பொருத்த சிலர் மேற்கொண்ட தந்திரோபாயம்தான் ஈழத்து எழுத்தாளர் டானியலை தமிழக தலித்தியத்தின் முன்னோடி என்று அழைத்துக் கொண்டமையாகும். டானியல் ஒருபோதும் தன்னை ஒரு தலித் எழுத்தாளர் என்று அழைத்துக் கொண்டவர் அல்லர். டானியல் தன்னை இடதுசாரி என்றே அழைத்துக் கொண்டார். ஆனால் டானியலின் பிரதான கருத்து நிலை யாழ்ப்பாண சாதிய மரபிற்கு எதிரானதாக இருந்தது. அன்றைய சூழலில் அது முற்றிலும் சரியானதுதான். இதற்கு டானியல் சார்ந்திருந்த சீனசார்பு இடதுசாரி கட்சியின் தீண்டாமை ஒழிப்பு நிலைப்பாடும், டானியலின் தனிப்பட்ட அனுபவங்களும் காரணங்களாக இருந்தன. அதற்காக அது எல்லா காலத்திற்கும் சரியாகத்தான் இருக்குமென்று வாதிடுவது அறிவுடமையன்று.

அ.மார்க்ஸ் இன்னொரு பெரிய கண்டுபிடிப்பையும் செய்திருக்கிறார். “ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ‘தனி ஈழம்’ என்பது மட்டுமல்ல கூட்டாட்சிக்குக் கீழான ஒன்றிணைந்த தனி மாகாணம் என்ற கோரிக்கைக்குக் கூட ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழர்களுடைய ஆதரவும் உள்ளது எனச் சொல்ல முடியாது”. இது ஒரு அபத்தமான வாதம். இந்த வாதத்திற்கு ஆதாரம் சேர்க்க அவர் காட்டியிருக்கும் உதாரணமோ எம்.ஆர்.ஸ்டாலின். சமீபத்தில் ‘இனி’ என்னும் இணையத்தில் இந்த ஸ்டாலின் தற்போது பிள்ளையானின் ஆலோசகராக தொழிற்பட்டுவருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படியான ஒருவர் ஏன் கிழக்கு பற்றி பேசுகிறார் என்பதை விளங்கிக்கொள்ள முடியாதளவிற்கு அ.மாவிடம் சுயசிந்தனை வறட்சி ஏற்பட்டிருக்கிறது.

ஏனென்றால் இப்போது அ.மார்க்ஸ்சின் தேவை தங்குவதற்கு ஒரு கூடாரம். சில புலம்பெயர்வாதிகள், புலி எதிர்ப்பு என்ற பேரில் ஒட்டுமொத்த தமிழர்களின் அபிலாசைகளையே எதிர்ப்பவர்கள் அந்த கூடார வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர். அவர் வசதியாக அந்த கூடாரத்தில் இருந்தவாறு ஈழத் தமிழர் தேசிய எதிர் அரசியலுக்கான மதிஉரைஞர் வேலையை செய்து வருகின்றார். ஏனென்றால் இது வசதியானது. ஆனால் பழ.நெடுமாறன் செய்வதோ அல்லது ஈழத் தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக தொழிற்படும் தமிழக செயற்பாட்டாளர்கள் செய்வதோ கடினமானது. அதற்கு அர்ப்பணிப்பும் தியாக உணர்வும் தேவை. அவர்களுடன் இணைந்து கொள்வது அ.மார்க்ஸ் போன்றவர்களுக்கு முடியாத காரியம். ஆனால் அதனை விமர்சிப்பது இலகுவானது. அதனால்தான் அவர்களது செயற்பாடுகளை எந்த குற்றவுணர்வும் இல்லாமல் புலிகளுக்கான முகவர் வேலையென கூறுகின்றார் அ.மார்க்ஸ். இப்படி கூறும் அ.மார்க்ஸ், அவர்சார்ந்த இன்னும் சிலருக்காக முகவர் வேலை செய்து கொண்டிருப்பதை ஏனோ மறந்துவிட்டார் போலும்.

- தாரகா (t.tharaga@yahoo.com)

Comments