“ஈழத்தமிழர்” என்ற பெயர் “இலங்கைத் தமிழர்” ஆனதேன்...?

Nedumaran பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் தொல்.திருமாவளவன், மருத்துவர் ராமதாசு, வை.கோ, தா. பாண்டியன் ஆகியோர் தத்தம் கட்சிகளின் சார்பில் பேராளர்களாக முன்னின்று தொடங்கிய அமைப்பே இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம். தொல்.திருமா உண்ணாப் போர் நடத்திய மறைமலைநகர் மேடையில் கருப்பெற்று, தியாகி முத்துக்குமரனின் தீக்குளிப்பில் உருப்பெற்று நாடெங்கும் பரவிய மாணவமணிகளின் போராட்டத்தாலும், வழக்கறிஞர்களின் ஆர்ப்பாட்டத்தாலும் வலுப்பெற்றது இ.த. பா. இயக்கம்.

31.01.2009 அன்று சென்னையில் கூடிய இ.த. பா. இயக்கத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் திருநாவுக்கரசர் மேலும் ஒரு பிரதிநிதியாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அன்றைய கூட்டத்தின் முடிவாக இ.த. பா. இயக்கம் வெளியிட்ட பொதுவேலை நிறுத்த அறைகூவலை ஏற்றுத் தமிழ் நாட்டின் பெரும்பான்மையான கடைகளும் வணிக நிறுவனங்களும், தனியார் போக்குவரத்தும் இயங்கவில்லை என்பது தமிழர்களின் நாடித்துடிப்பை நாடறியச் செய்வதாக இருந்தது. வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் அவர்களின் பங்களிப்பு இதில் முதன்மையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கே நம்மை உறுத்துகிற ஒரு செய்தியைத் தெரியப்படுத்த வேண்டியுள்ளது. மறைமலைநகர் மேடையில் மருத்துவர் ஐயா வெளியிட்ட ஈழத்தமிழர் பாதுகாப்பு என்ற நிலைப்பாடு, கொளத்தூர் குமரனின் மரண சாசனத்தை மனப்பூர்வமாக ஏற்று ஈழத்தமிழர் விடுதலையை இயக்கப் பூர்வமாக ஏற்றுக் கொண்ட ஒரு நிலைப்பாடு. ஆனால் இந்நிலைப்பாடு மூலக் கொத்தல இடுகாட்டில் மாற்றம் பெற்று ‘இலங்கைத் தமிழர் பாதுகாப்பு’ என்ற பெயரில் ஈழத்தைக் கைவிட்டு இலங்கையோடு சமரசம் செய்துகொள்ள நேர்ந்தமைக்கான பின்னணி என்ன என்பதை ஆராய்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

Dr.Ramadoss இதில் தொடர்புள்ள ஒவ்வொரு கட்சிக்கும் மேற்படிப் பெயர் மாற்றத்துக்கான ஒரு பின்னணி இருக்கிறது. பா. ம. க. வைப் பொறுத்தவரை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில்தான் பா.ம.க. இருக்கும் என்பதைப் பலமுறை அறிவித்திருக்கிறார் மருத்துவர் ராமதாசு அவர்கள். ஈழம் என்பதைக் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளாத கட்சி காங்கிரஸ். எனவே ஈழத் தமிழர் என்ற பெயரும் காங்கிரஸ் கட்சியின் கடுமையான மறுப்புக்குரிய பெயராகவே அமையும் என்று இயக்கத் தலைவர்கள் எண்ணியிருக்கக் கூடும்.

இந்தச் சிக்கலைச் சீராக்கும் ஒரே வழி, மலையகத் தமிழரையும் உள்ளடக்கிய சொல் என்ற பொருளில் இலங்கைத் தமிழர் என்ற தொடரே காங்கிரசின் ஈழ எதிர்ப்புக்கு மாற்றாக அமையும் என்று கருதி, ஒரு சமரச ஏற்பாடாகவே டாக்டரையா அவர்கள் அத்தொடரை ஒப்பியிருக்கக்கூடும். ஈழத் தமிழர்களுக்காக வாய்திறந்தாலே தீப்பொழியும் வைகோ அவர்கள் இலங்கைத் தமிழர் என்ற பெயரைச் சத்தமில்லாமல் ஏற்றுக்கொண்டது ஏன் ?

கட்சி நிலையைத் தாண்டிக் கருணை நிலையை முன்வைத்து, ‘ஈழத்தமிழர்க்கு விடிவு ஏற்படாதவரை நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம்’ என்று டெல்லியில் டி. ராஜாவும், தமிழ் நாட்டில் தா. பாண்டியனும் முழக்கியவை எத்தனையோ மேடைகளிலும் ஏடுகளிலும் பதிவாகியுள்ளன. ஆனால் மேற்படிப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைப் பெயர் ஈழம் என்றில்லாமல் இலங்கை என்றிருப்பதை ஏற்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இணங்கியதே ஏன் ?

மேலே உள்ள இரண்டு ‘ஏன்’ களுக்கும் ஒரே விடைதான் உண்டு. அந்த விடைதான் : ஜெயலலிதா. ஜெயலலிதாவின் வெறுப்புக்குரிய சொல் ஈழம்.“ ஈழம் என்ற தேசம் இல்லை. எனவே ஈழத்தின் பெயரால் தமிழரை ஈழத்தமிழர் என்று அழைப்பதை நான் ஏற்கமாட்டேன். இலங்கைத் தமிழர் என்றுதான் குறிப்பிடுவேன்” என்று ஜெயலலிதா தந்த விளக்கம் ஊடகங்களில் எல்லாம் ஒலி, ஒளிபரப்பாயிற்று. ஜெயலலிதா கிழித்த எல்லைக் கோட்டைத் தாண்டி ஈழ வசனம் பேச முடியாத இக்கட்டில் உள்ள வைகோ, அம்மையாரின் கருத்தை மதித்து‘ இலங்கைத் தமிழர்’ என்ற மாற்றுத் தொடரை மறு பேச்சின்றி ஒப்புக்கொண்டிருப்பார்.

Vaiko தமிழ்நாட்டில் இடதுசாரிகளின் மூன்றாம் அணி அமைக்க வலதுசாரி ஜெயலலிதாவைச் சேர்த்துக் கொள்வதில் முனைப்பும் துடிப்பும் காட்டிய தா.பாண்டியன் அவர்கள், அம்மையார் ஈழத்துக்குப் போட்ட ‘தாழ்ப்பாளை’ உடைக்க முடியாத ‘தா.பா வாகப்’ பின்வாங்கி, அரண்மனையின் ஏவலை ஏற்று அம்மையின் ஆவலைப் பூர்த்தி செய்திருக்கிறார். எனவேதான் ‘ஈழத்தமிழர்’ விலக்கப்பட்டு ‘இலங்கைத் தமிழர்’ இடம் பெற்றது என்ற கருத்துப் பரவலாகி யிருக்கிறது.

இவ்வாறு, சோனியாவுக்கு அஞ்சி ஒருபுறமும் மாமியாவுக்கு அஞ்சி மறுபுறமும் ‘இலங்கைத் தமிழர்’ என்ற பெயரைப் பாதுகாப்பு இயக்கத்துக்குச் சூட்டப் பெருந்தலைகள் இணங்கி, அரசியல் காரணங்களுக்காக அடங்கிப்போன பிறகு, அந்த இயக்கத்தில் ஈழத்தமிழர் மேல் உண்மையான பற்றும் பாசமும் கொண்ட, தொல்தமிழர் திருமாவும், நல்தமிழர் நெடுமாவும் இயக்கத்தின் ஒற்றுமையை முன்னிட்டு ‘இலங்கைத் தமிழர்’ என்ற தொடரை வேறுவழியின்றி ஏற்க நேர்ந்தது என்பதே ஈழ ஆதரவாளர்களின் அனுமானம்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இயற்கையாகவே இருக்க வேண்டிய தோழர்கள் மணியரசன், சுப.வீரபாண்டியன், தியாகு போன்றோர்தம் அமைப்புகளின் பங்களிப்பை இ. த. பா. இயக்கம் ஏன் கோரவில்லை, அவர்கள் ஏன் அதில் சேரவில்லை என்ற வினாவும் விடையின்றியே நிற்கிறது. இ.த.பா.இயக்கத்தின் எதிர்வினையாகத் தோற்றம் பெற்ற அமைப்புதான் கலைஞரின் “இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை”. கலைஞருக்கு விடுதலைப் புலிகள் மீதுதான் விமர்சனம் உண்டே ஒழிய, ஈழத்தின் விடுதலைக் கோரிக்கையை அவர் என்றுமே ஆதரித்து வந்தவர்தாம். போர் நிறுத்தம் கோரிய சட்டமன்றத்தின் இறுதித் தீர்மானத்தின் மீது அவர் பேசிய அண்மை உரையில்கூட ‘ஈழம் மலர்வதாய் இருந்தால் இந்த ஆட்சியை இழக்கத் தயார்’ என்று சூளுரைத்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அத்தகைய ஈழப்பற்றாளரின் அமைப்பும் கூட ‘இலங்கைத் தமிழர்’ என்ற பேரால்தான் அடையாளப்படுத்தப்படுகிறது என்ற செய்தியைச் செரித்துக் கொள்வது கடினமாக இருக்கிறது.

‘இலங்கையின் மலையகத் தமிழரையும் இஸ்லாமியத் தமிழரையும் உள்ளடக்கி, அவர்களின் நல உரிமைக்காக நடத்தப்படும் பேரவை இது’ என்று விளக்கம் தரப்படலாம். மேற்பரப்பில் இது சரி என்பது போலக்கூடத் தோன்றலாம். ஆனால் உண்மை அது அன்று. இன்று எரிமலை மீது வெந்து மடிகிறவர்கள் ஈழத்தமிழர்களே. அவர்களைக் காக்கவே உலகெங்குமுள்ள தமிழர்கள் உயிர்வாதை அடைகிறார்கள். இந்த நேரத்தில் ஈழ உயிர்ப்பலியில் தொடர்பற்ற பிற தமிழர்களின் பெயரைச் சாக்கிட்டு ‘இலங்கைத் தமிழர்’ என்றுள்ள அமைப்பின் அடையாளப் பெயரை நியாயப்படுத்த எண்ணுவது இரண்டு அமைப்புகளுக்குமே அறமாகாது.

காங்கிரஸ் கட்சியையும், டெல்லி அரசையும் பகைத்துக் கொள்ளாத அணுகுமுறையை பா.ம.க. பாதுகாப்பு இயக்கத்தில் மேற்கொள்கிறது என்றால், காங்கிரஸ் கூட்டணியையும், மத்திய அமைச்சுப் பதவிகளையும், சோனியாவின் நல்லுறவையும் இழந்துவிடாத அணுகு முறையே கலைஞர்க்குக் காலத்தின் கட்டாயமாகிவிட்டது. ஆண்டிப்பட்டியாரின் ஆதிக்க அணியில் உள்ளவரை கலிங்கப்பட்டியார் பொடாச் சிறையிலிருந்து இடம்பெயர்ந்து போயஸ் சிறையில் குடியேறிய கைதிதான். அமெரிக்காவைச் சவாலுக்கழைக்கும் சுதந்தரமும் அவருக்குண்டு ஆனால் பரிதாபம். அவரைப் பிணைத்துள்ள சங்கிலியின் நீளம்தான் அவரது சுதந்திரத்தின் நீளம்.

Jeyalalitha முலாயம் சிங்கும், சந்திரபாபு நாயுடுவும் சேர்ந்து மூன்றாம் அணித்தலைவி என்று முடி சூட்டிய மூன்றாம் நாளே அந்த முடியைத் தூக்கியயறிந்துவிட்டுக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஷெகாவத்துக்கு வாக்களித்ததன் மூலம் பார்ப்பனிய லலிதாவும் பாரதிய ஜனதாவும் ஓரினமே என்பதை அந்த அம்மையார் உலகுக்கு உணர்த்தினார். அப்படி உணர்த்திய பின்பும், ‘ மூன்றாம் அணித் தலைவி நீங்களே’ என்ற முழக்கத்துடன் அவருக்குப் பாதுகா பட்டாபிஷேகம் நடத்த பரதன் வந்து தரிசித்திருக்கிறார்.

சோனியா காந்திக்கும் ஜெயலலிதாவுக்கும் அஞ்சி ஈழத் தேசிய இனத்தின் பெயரையே தம் இயக்கத்துக்குச் சூட்டாமல், ஈழத் தமிழரையே கைவிடத் துணிந்த இந்த இனப்போர் தலைவர்களைக் கேட்கிறோம். நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ‘தொகுதி ஒதுக்கீட்டுக்கான தகுதியே ஈழம் பற்றி மூச்சுவிடாமல் இருப்பதுதான்’ என்று மேற்படித் தலைவிமார்கள் தம் தோழமைக் கட்சிகளுக்குத் தடை விதிப்பார்களானால், அதையும் ஒப்புக்கொண்டு தம் கட்சிக் கொடிகளின் வெற்றிக்காகத் தொப்புள்கொடிகளைத் தூக்கி எறிய மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதமுண்டா ?

2006 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா விதித்த ‘ ஈழத்தடை’ ‘ புலித்தடை’ என்ற இருதடைகளையும் ஏற்றுக்கொண்ட பிறகுதானே வைகோ - ஜெயலலிதா ஒப்பந்தம் முடிவாயிற்று ? தேர்தல் பிரச்சாரங்களில் அம்மையாரின் தடையை அட்சரசுத்தமாக அமலாக்கினார் ‘ புரட்சிப்புயல்’. ஈழம் பற்றி ஒற்றைச் சொல்லையும் உதிர்க்கவில்லை; பிரபாகரன் பற்றி ஒரு வார்த்தையும் உச்சரிக்கவில்லை. பொடாச் சட்டத்தின் கொடுமைகளை அம்பலப்படுத்த வேண்டிய தேர்தல் மேடையை பொடாத் தலைவியின் மெய்க்காப்பாளர் பணிக்குப் பயன்படுத்தினார். புலிகளின் மீதான தடையை உடைக்கப் போராடவேண்டிய தேர்தல் களத்தில் தன் மீது ஜெயலலிதா போட்ட புலித்தடையைக் காப்பாற்றுவதிலேயே கவனமாக இருந்தார்.

இன்று என்ன நிலைமை ? 2006 இல் இருந்ததைவிட 2009 இல் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இட்லரிசத்துக்குமான பகை முரண் அதிக ஆழப்பட்டுள்ளது ; கூர்மைப்பட்டுள்ளது. 2006 இல் இருந்ததைவிட இன்று ஈழப்போர் தீவிரப்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதாவும், தனது முந்தைய போயஸ் உத்தியை மாற்றிக் கெண்டு ஒரு புதிய போர் உத்தியைத் தேர்தலிலே கையாளத் தீர்மானித்திருக்கிறார். ஈழமும் புலிகளும் அழிக்கப்படவேண்டும் என்ற அவரது அடிப்படை நிலை அன்றும் இன்றும் மாறவில்லை. அன்று சந்திரிகாவை ஆதரித்தது போலவே இன்று ராஜபக்சேவை ஆதரிப்பதிலும் அவருக்குக் கூச்சமோ ஒளிவுமறைவோ துளியும் இல்லை.

Karunanidhi பின் எதிலே அவரது போர் உத்தி மாறியுள்ளது ? ஈழத்தடை புலித்தடை என்று வைகோவுக்கு அன்றுபோட்ட தடைகளை இன்று விலக்கிக்கொண்டார். ஈழம் பற்றியும் புலிகள் பற்றியும் வைகோ இனி முழங்கலாம். ஈழத்தின் மீது தாயகத் தமிழர்களின் ரத்தபந்தம் கொதித்துக் கொதிநிலை கடந்து கொந்தளிக்கிற உணர்வலைகளுக்கு இனியும் தடைபோட முடியாது என்பதை உணர்ந்துவிட்ட ஜெயலலிதா, தன்னெழுச்சியான இந்தத் தமிழலையை அறுவடை செய்து தேர்தலில் அரசியல் ஆதாயம்காண முடிவெடுத்துள்ளார்.

அதை அறுவடை செய்யத் தகுதியான பண்ணையாளாக வைகோவைக் கருதுகிறார். எனவே வைகோ விண்ணுக்கும் மண்ணுக்குமாக எகிறிக் கொக்கரித்து காங்கிரஸ் அரசையும் கருணாநிதியையும் விளாசுகிறார். இந்தத் தாக்குதல்கள் அத்தனையும் வாக்குகளாக மாறவேண்டும் என்ற பொற்கனவில் வைகோவுக்குத் தரப்பட்டுள்ள புதிய சுதந்திரமே இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அவரது செயல்பாடுகளுக்கான அடிப்படை.

“ஈழத் தேசியம் என்பது கிடையாது ; ஈழத் தமிழர் என்ற இனமும் கிடையாது; போர் என்று வந்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது குற்றமாகாது” என்று தமிழ்நாட்டுக்குள்ளேயே துணிந்து தமிழர்களை இழிவுபடுத்தும் பார்ப்பனிய வித்தை விதைத்து ராஜபக்சேவின் ரத்தத்தின் ரத்தமாகச் செயல்படும் தமிழினப் பகைகளின் தலைப்பாகையாக விளங்கும் ஜெயலலிதா என்ற தேசவிரோதியைக் கண்டிக்கச் சுண்டுவிரலைக் கூட அசைக்கவில்லையே இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஏன் ?

தானும் கணை வீசாமல், மற்றவர்களின் கணைகளும் வீசப்படாமல் தன்னைக் காக்கும் மெய்க்காப்பாளராக வைகோ அங்கிருக்கிறார்; தனது பொய்க்காப்பாளராகத் தா.பா அங்கிருக்கிறார் ; எந்த நேரத்திலும் தன்பக்கம் புலம்பெயரக் கூடிய மருத்துவர் அங்கிருக்கிறார் ‡ என்ற காப்புறுதிகள் இருப்பதால், ஈழத்தையும் பிரபாகரனையும் புலிகளையும் தாக்கியே அரசியல் நடத்தினாலும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தன்னைத் தாக்காது என்ற உறுதியோடு தேர்தலை எதிர்நோக்கி நிற்கிறார் ஜெயலலிதா !

Jeyalalitha சற்றுச் சிந்தித்துப் பாருங்கள் ராஜபக்சேவின் அரவணைப்பும், ஈழப் பாதுகாப்பியக்கத்தின் அரசியலணைப்பும் ஒரே நேரத்தில் ஒருங்கே பெற்றுப் பரிமளிக்கும் சாதுரியம் உள்ள அரசியல்வாதி யாரேனும் உண்டா ? கிடையாது. ஒரு பகை முரணையே நகை முரணாக்கும் சாமர்த்தியம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு. பார்ப்பனியத்தின் எத்தனையோ படையயடுப்புகளைத் தமிழகம் சந்தித்திருக்கிறது. ஆனால் ஒரே நேரத்தில் ஈழத்தமிழனையும் இங்குள்ள தமிழனையும் வெல்வதற்கான யுத்த தந்திரத்தை உருவாக்கிய பார்ப்பனியப் போர் முறைக்கு ஜெயலலிதா மட்டுமே சொந்தக்காரர்.

மேலும் சற்றுச் சிந்தியுங்கள் ஆயுதமேந்தியோ ஆயுதமேந்தாமலோ நடக்கும் எல்லா அரசியல் இயக்கங்களும் கைக்கொள்ளும் பொதுவான போர் உத்தி என்பது மூலப்பகையை முறியடிப்பதற்காக இடைநிலைப் பகைகளோடு தற்காலிகச் சமரசம் செய்துகொள்வது தவிர்க்க முடியாத ஒன்றாகும். மூலப்பகையான இட்லரை வீழ்த்த வேண்டி அமெரிக்க பிரித்தானிய ஏகாதிபத்தியங்களோடு இடைக்காலச் சமரசம் கண்டு கூட்டணி கண்டார் ஸ்டாலின்.

மூலப்பகை இங்கிலாந்து என்ற பெரிய வல்லரசை வெல்வதற்கு இளைய வல்லரசான ஜப்பானுடன் சமரசம் செய்தார் நேத்தாஜி. ராஜாஜி என்ற பார்ப்னிய மூலப் பகையை முறியடிக்கக் காமராசரின் காங்கிரசுடன் சமரசம் செய்துகொண்டார் பெரியார். மூலப்பகை எது என்று அடையாளம் கண்ட பின் இளைய பகைகளை இனங்காண்பதும் சமரசங் காண்பதும் எளிது. எந்த இயக்கத்துக்கும் இலக்கு என்பது மூலப்பகை முறியடிப்பு என்பதாகத்தான் இருக்க முடியும்.

திராவிட இயக்கம் தோன்றி வளர்ந்து அது இறுக்கமும் தெளிவும் பெற்றுத் தமிழ்த் தேசியம் என்று வடிவெடுத்தவரை பார்ப்பனியமே ஆதிக்க நிழலாக நிலைத்திருக்கிறது. அரசியலில் அது டெல்லி பீடமாகவும், பொருளியலில் அது பெருமுதலாளியமாகவும், பண்பாட்டியலில் அது இந்துத்துவமாகவும் மூன்று கால்கள் மீது நிற்கிறது. எனவே தமிழனின் மூலப்பகை பார்ப்பனியமே என்றும் தனித்தமிழ் நாடு என்ற தமிழ்த் தேசியமே அந்த மூலப் பகையை வெற்றிகொள்ளும் மூலப்படை என்றும் பெரியார் கண்டறிந்தார்.

பெரியாருக்குப் பின் வந்த திராவிட இயக்கங்கள் பதவி அரசியலுக்காகப் பெரியாரிலிருந்து பிறழ்ந்துபோய்ப் பல குற்றங்கள் புரிந்திருந்தாலும் தம் மூலப்பகை பார்ப்பனியமே என்பதை அவை மறுப்பதில்லை. தி.மு.க. விலிருந்து ம.தி.மு.க. பிரிந்தமைக்கான ஒரே காரணம் விடுதலைப்புலிகளே. மற்ற கட்சிகளிலிருந்து ம.தி.மு.க. வைப் பிரித்துக்காட்டிய தனித் தன்மை என்பது தமிழீழ விடுதலைக்கு ஆதரவு என்ற அதன் சரியான நிலைப்பாடு மட்டுமே.

தமிழீழத்தின் எதிரிகளே ம.தி.மு.க வின் எதிரிகள் என்பதே ஊடகங்களில் வைகோ வெளிப்படுத்திய சாரப் பொருள். எனவே பார்ப்பனியமே மூலப்பகை என்ற திராவிட இயக்கச் சித்தாந்தம் ம.தி.மு.க வின் அரசியலாக மொழிபெயர்க்கப்பட்ட போது, ‘தமிழையும், தமிழீழத்தையும், பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் வேரோடு அழிக்கத் திட்டமிடும் ஜெயலலிதா என்ற பார்ப்பனியச் சக்தியே ம.தி.மு.க. வின் மூலப்பகை’ என்பதை வேறு சொற்களில் விளக்கப்படுத்தினார் வைகோ.

முன்னர்க் காட்டியது போல மூலப்பகை அழிப்பு என்பதை இயக்கத்தின் இலக்காகக் கொண்டவர்களில் யாரும் மூலப்பகையுடனேயே சமரசம் செய்த வரலாறு இதுவரை நிகழ்ந்ததில்லை. வரலாற்றில் முதல் முறையாக அந்த வினோதம் தமிழ்நாட்டில் நடந்தது வைகோ மூலம். ஈழவிடுதலைக்கான ஆதரவு திரட்டுவதே எம் குறிக்கோள் என்று களமிறங்கிய கட்சியின் தலைவர் வைகோ, தமிழீழத்தின் தலைப் பகையாகத் தமிழ்நாட்டில் முடிதரித்திருந்த ஜெயலலிதாவுடன் கைகோக்கத் துணிந்தார்.

ஈழ ஆதரவுப் பேச்சுக்காகப் பிணையில் கூட வைகோ வெளிவர அனுமதிக்காத பொடாச்சட்டத்தின் முதல்வியை அவரது போயஸ் மாளிகையிலேயே சந்தித்துப் புன்னகை பூத்த ‘பெரியாரின் பேரனுக்கு’ இணையாகத் திராவிடச் சரித்திரத்தில் வேறு யாரும் தோன்றவில்லை. சம்பத் நேருவோடு சேர்ந்தது இதற்கு முன்னுதாரணமாகாது. ஏனெனில் தம் கட்சியைக் கலைத்துவிட்டு அவர் காங்கிரசில் சேர்ந்தார். ஒரு திராவிட இயக்கத்துக்குத் தலைமைதாங்கிய நிலையிலேயே தான் பிரகடனப்படுத்திய மூலக்கொள்கையின் மூல எதிரியிடமே தன்னை முழுதாக ஒப்படைத்த வைகோவின் சரணாகதிபோல், வரலாற்றில் நிகழ்ந்ததாக நம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் யாரையும் காண முடியவில்லை.

Thirumavalavan சட்ட மன்றத்தில் சொந்த நிழல்கூட அற்றுப்போய் அ.தி.மு.க.வின் நிழலாகவே வெளிநடப்பிலும், உள்நடப்பிலும் உழல்வதால் நாளை பறிக்கப்பட இருக்கும் திருமங்கலங்கள் குறித்து இன்றே இரங்கற்பா எழுதுவதைத் தவிர வேறு ஆற்றலிராது வைகோவுக்கு.‘கொலைகாரி’ ( வைகோவின் வர்ணனை இது ) ஜெயலலிதாவை வீழ்த்த வேலூர் சிறையிலிருந்து வாளையேந்திப் புறப்பட்ட பயணம் மாலையேந்தியபடி துரைசாணியின் தோட்டத்தில் சென்று முடிந்த கதை ஹிட்ச்காக் திரை மேதையாலும் தரமுடியாத திருப்பம். சிறந்த சிந்தனையாளர், படிப்பாளர், பேச்சாளர், அறிவாளர் என்று அறியப்பட்ட வைகோ அவர்கள் சிறந்த அரசியல்வாதியாக உயரமுடியாமற் போனமைக்கு ‘ஆரியமாயையே’ காரணம்.

புறப்பட்ட இடத்துக்கே மீண்டும் வருகிறோம். வைகோ பற்றி விரிவாக விவாதிக்க நேர்ந்தமைக்கான காரணம், தமிழ் இளைஞர்களிடம் பொங்கி வரும் தமிழின உயர்வின் எழுச்சி வெள்ளத்தை நமது இனத்துக்கும் ஈழத்துக்கும் பிறவிப் பகைவியான ஒருவரின் தோட்டத்துக்கு மடைமாற்றுவதற்கு வைகோவும் ‘வைகோ அண்ட் கோ’ வும் காத்திருக்கிறார்கள் என்று நமது இளந்தமிழர்களை எச்சரிக்க வேண்டுவது நம் கடமையாகும். இது தொடர்பாகத் தொல்.திருமா அவர்கள் தம் உண்ணாப்போரின் இறுதிநாளில் தமிழ்நாட்டுக்கு விடுத்த வேண்டுகோளின் சாரத்தை மீண்டும் நினைவூட்டுகிறோம்.

“காங்கிரஸ் கட்சியும், ஜெயலலிதாக் கட்சியும்தாம் தமிழனின் பகைவர்கள். அந்த இரண்டு சக்திகளையும் தோற்கடிப்பதே தமிழகத்தின் முன்னுள்ள முதற்கடமை”. திருமாவின் இந்தக் கருத்தை அடிக்கோடிட்டு நாமும் வலியுறுத்துகிறோம். மூன்றாம் அணிக்காரர்களுக்கு ஜெயலலிதா தேவை. இரண்டாம் அணிக்காரர்களுக்கு அயோத்தி ராமன் தேவை.முதலாம் அணிக்காரர்களுக்கு சோனியாகாந்தி தேவை. இந்தச் சிங்கள அணிகளைத்தாண்டிய செருகள அணியே தமிழனின் தேவை.

ஈழக விடுதலைக்கு மட்டுமன்று, நம் தாயக விடுதலைக்கும் அதுதான் தேவை. இந்த அணிமாற்றம் நிகழாதவரை தமிழ்த்தேச அரசியலில் குணமாற்றம் நிகழாது. அந்த இலக்கு நோக்கி நடக்கும் இயக்கம்தான் தமிழினத்தையும் விடுவிக்கும் தமிழீழத்தையும் விடுவிக்கும்.

கவிஞர் தணிகைச் செல்வன்

Comments