மாத்தளன் கடற்கரையில் பேரணி: செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோபத்தினை வெளிப்படுத்திய மக்கள்

வன்னிப்பெரு நிலப்பரப்பில் சிறிலங்கா அரச படைகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதனை வெளிப்படுத்தும் வகையிலான பேரணி இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் கடற்கரையில் மக்கள் நடத்தியுள்ளனர்.

நோயாளர்களை ஏற்றும் கப்பல் மாத்தளன் கடற்பரப்புக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வந்தது.

அக்கப்பலில் வந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழு அதிகாரிகள் கரைக்கு வந்த போது மக்கள் பேரணியை நடத்தினர்.

சிங்கள படையினர் தமிழ்மக்கள் மீது நடத்தும் இன அழிப்பை வெளிப்படுத்தும் வகையில் சிறிலங்கா படைத் தாக்குதல்களில் தமது உறுப்புக்களை இழந்த சிறார்களை பெற்றோர் தமது கைகளில் தாங்கி வந்து கதறி அழுதனர்.

தம்மை சிங்களப் படைகள் அழிப்பதை எவ்வளவு காலத்துக்கு நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள். நீங்கள் அமைதி காப்பதை சிங்களம் தமக்கு சாதகமாகவே பயன்படுத்துகின்றது எங்களை அழிக்க நீங்கள் துணை போகின்றீர்களா என மக்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழு அதிகாரிகளிடம் கோபமாக கேள்வியெழுப்பினர்.

உடல் உறுப்புக்களை இழந்த சிறார்களுடன் பெற்றோர் கதறி அழுத காட்சியால் அந்த அதிகாரிகளால் பதிலளிக்க முடியாது திணறினார்.

இன்றும் சிங்கள படைகளின் தாக்குதல்களில் உறுப்புக்களை இழந்து படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களை வந்து பார்க்குமாறும் மக்கள் கேட்டனர்.

மிகவும் கோபம் கொண்டவர்களாக மக்கள் கேள்விகளை எழுப்பினர்.

பேரணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது 'பாதுகாப்பு வலயம்' என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த மாத்தளன் பகுதி மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பேரணியில் கலந்து கொண்ட மக்கள் தமது நிலையை வெளிப்படுத்தும் மனுக்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழு அதிகாரிகளிடம் கையளித்தனர்.

Comments