அரச தலைவர் கொடுத்த நஞ்சை நாம் விழுங்குவதா?: அழைப்பை நிராகரித்து சம்பந்தன் விளக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப்பெரு நிலப்பரப்பில் இந்த மாதத்தில் மட்டும் 500 தமிழர்கள் சிறிலங்கா படைகளின் அகோரத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு அடிப்படை சுகாதார வசதிகள் எதுவும் இல்லை, மருந்துகள் இல்லை, குடிநீர் இல்லை, எறிகணைத் தாக்குதல்களுக்கு அஞ்சி பதுங்கு குழிகளுக்குள் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அழைப்பை ஏற்று சந்திப்பதற்கு நாங்கள் குழந்தைப் பிள்ளைகள் அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சந்திக்க வருமாறு அரச தலைவர் விடுத்த அழைப்பை நிராகரிப்பது தொடர்பான முடிவை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டினை கூட்டமைப்பு இன்று வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பில் நடத்தியது.

இந்த மாநாட்டில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

அழைப்பை நிராகரித்தமை தொடர்பாகவும் கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் குறித்தும் விளக்கமளித்து கடிதத்தினை நேரடியாகவும் தொலைநகல் மூலமும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு இன்று அனுப்பியதாக இரா.சம்பந்தன் குறிப்பிட்டார். ஆங்கிலத்தில் எழுதி அனுப்பப்பட்ட அந்த கடிதத்தின் பிரதிகள் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டன.

கடிதத்தை ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய பின்னர் அவர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்த இரா.சம்பந்தன், முல்லைத்தீவில் ஒவ்வொரு நாளும் 50-60 மக்கள் கொல்லப்படுகின்றனர். சராசரி 100-க்கும் அதிகமானவர்கள் காயமடைகின்றனர் என்று புள்ளி விபரத்தினை மேற்கோள் காட்டினார்.

ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் கருத்துரைத்த இரா.சம்பந்தன், முல்லைத்தீவில் ஒவ்வொரு நாளும் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி அதுவும் அரசாங்கம் அறிவித்த 'மக்கள் பாதுகாப்பு வலய'ங்களை நோக்கி எறிகனை, பீரங்கித் தாக்குதல்களும் வான் தாக்குதல்களும் சிறிலங்கா படைகளால் நடத்தப்படுகின்றன என்றும் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் படையினரால் கைப்பற்றப்பட்டதாக அரசாங்கம் அறிவித்த பிரதேசங்களில் கூட உணவுகள், அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்வதற்கு மக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், என்னென்ன வழிமுறைகள் உண்டோ அவை அனைத்தையும் பயன்படுத்தி மக்களை அரசாங்கம் கஸ்டத்திற்கு உள்ளாக்குகின்றது என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் அதுவும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகள் குறித்து பேச வருமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச எமக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். அவர் விடுத்த அந்த நச்சுத்தனமான அழைப்பை ஏற்று அந்த நஞ்சை விழுங்குவதற்கு நாங்கள் குழந்தைப் பிள்ளைகள் அல்ல என்றும் இரா.சம்பந்தன் நகைச்சுவையாக கூறினார்.

முதலில் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதன் பின்னர் தான் அரசியல் விடயங்கள் குறித்து பேசலாம் அதுதான் எமது நிலைப்பாட்டு. அதற்கு நாங்கள் தயார். ஆனால் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற விடயங்களுக்கு அரச தலைவர் சாதகமான பதிலளித்தால் நாங்கள் பேசுவோம் அதில் பிரச்சினை எதுவும் இல்லை என்று இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்மக்களின் கடந்த கால அரசியல் வரலாறுகளை நினைவுபடுத்தி பதிலளித்த இரா.சம்பந்தன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு முன்னரே தமிழ்மக்களுக்கு எதிரான வன்முறைகள் அரசாங்கத்தினால் கட்டவிழ்த்து விடப்பட்டன என்று கூறினார்.

அத்துடன் தமிழர்கள் நடத்திய அகிம்சை போராட்டங்கள் கூட வன்முறைகளால் தடுக்கப்பட்டன. இனப்பிரச்சினைத் தீர்விற்காக முன்வைக்கப்பட்ட யோசனைகள், ஒப்பந்தங்கள் அனைத்தும் அரசாங்கத்தினால் கைவிடப்பட்டன. இதன் பின்னணியிலேதான் விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாகியது என்று எடுத்துக்கூறிய இரா.சம்பந்தன், தற்போது இடம்பெறுகின்ற வன்முறைகளுக்கு யார் பொறுப்பு என்பதை நீங்கள் கூறுங்கள் என்று ஊடகவியலாளர் ஒருவரைப் பார்த்து கேள்வி தொடுத்தார்.

Comments