நோர்வேஜிய மக்களை நோக்கிய துண்டுப்பிரசுர பரப்புரை

தமிழீழ மக்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் இன அழிப்புப் போர் தொடர்பாக நோர்வேஜிய மக்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கில் வீடு, வீடாக துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாடு கடந்த வாரத்தில் இருந்து நோர்வேயில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தலைநகர் ஒஸ்லோவிலும் ஏனைய நகரங்களிலும் நோர்வேஜிய மக்களை நோக்கிய இப் பரப்புரைச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.

ஓஸ்லோவில் முதற்கட்டமாக 40 ஆயிரம் துண்டுப் பிரசுரங்கள் மக்களின் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்ச்சியாக இந்த வாரமும் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.





தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நிறுத்தப்பட வேண்டும் என்ற தலைப்பில், வன்னியில் சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படைகளின் போர் முற்றுகைக்குள் சிக்குண்டிருக்கும் மக்கள் எதிர்நோக்கும் பாரிய மனிதப் பேரவலங்கள் தொடர்பாகவும் அத்துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அப்பிரசுரத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மூன்று லட்சம் வரையான மக்கள் தங்குமிடம், உணவு, மருந்து, குடிநீர் வசதிகள் இன்றி அல்லற்படுகின்றனர்.

வன்னிப் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்படும் மக்கள், நலன்புரி முகாம்கள் என்ற போர்வையில் வதை முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.

உடனடிப் போர் நிறுத்தம், உடனடி மனிதாபிமான உதவிகளின் அவசியம் தொடர்பாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு சிங்களப் பேரினவாதத்தின் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான வரலாற்று ரீதியான எடுத்துரைப்புகளோடு, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளும், தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதும் அதில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

Comments