சிறீலங்கா படைகள் பொதுமக்கள் மீது தாக்குகின்றன – ஐ.நா, அமெரிக்கா, பிரித்தானியா கூட்டாகக் கண்டனம்

வன்னியிலுள்ள பல இலட்சக்கணக்கான பொதுமக்கள் மீது சிறீலங்கா படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக, ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, பிரித்தானியா என்பன கூட்டாகக் கண்டனம் வெளியிட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பான விவாதத்திற்கு ரஸ்யா, சீனா என்பன எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், உத்தியோக பற்றற்ற விவாதம் ஒன்று நேற்று (வியாழக்கிழமை) திரைமறைவில் இடம்பெற்றது.

இதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில், சிறீலங்கா படைகள் பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் கண்டனம் வெளியிடப்பட்டதுடன், அதேநேரம் விடுதலைப் புலிகளும் மக்களை வெளியேற விடாது தடுப்பதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் 20ஆம் நாளில் இருந்து இதுவரை பொதுமக்கள் 2,800 பேர் படையினரது எறிகணை வீச்சில் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது.

பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என சிறீலங்கா அரசு தமக்கு உறுதிமொழி வழங்கியிருந்த போதிலும், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை என அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான கலாநிதி ஜோன் ஹோம்ஸ் (Sir John Holmes), ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் துணைத் தூதுவர் றோஸ்மேரி டிகார்லோ (Rosemary DiCarlo), ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரித்தானியத் தூதுவர் ஜோன் சாவேர்ஸ் (John Sawers) ஆகியோர் இந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

பாதுகாப்பு வலயத்தில் பெருமளவிலான மக்கள் தஞ்சமடைந்துள்ள நிலையில், அந்தப் பகுதிகளை நோக்கி சிறீலங்கா படைகள் எறிகணைத் தாக்குதலை நடத்தி வருவதாகவும், இது தொடர்பாக அமெரிக்கா ஆழ்ந்த அக்கறை கொண்டிருப்பதாகவும் கூறிய அமெரிக்கத் தூதுவர் றோஸ்மேரி, படையினர் வீசும் எறிகணைகள் மருத்துவமனைகள், மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வீழ்ந்து வெடிப்பதாகவும் தெரிவித்தார்.

நாளாந்தம் டசின் கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதாகக் கூறிய ஐ.நா பிரதிநிதி ஹோம்ஸ், 150,000 முதல் 190,000 வரையிலான மக்கள் விடுதலைப் புலிகளின் நிருவாகப் பகுதிகளுக்குள் இருப்பதாகத் தெரிவித்தார். (வன்னியிலுள்ள அரச அதிபர்களின் தகவலின் அடிப்படையில் 300,000 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

பொதுமக்கள் அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேற தற்காலிக போர் நிறுத்தம் செய்ய போரில் ஈடுபடுபவர்கள் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என ஐ.நா பிரதிநிதி விடுத்த வேண்டுகோளுக்கு அமெரிக்கா, பிரித்தானியத் தூதுவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஐ.நாவின் நிகழ்ச்சித் திட்டத்தில் இல்லாத நிலையிலும், ரஸ்யா, சீனா போன்ற நாடுகள் எதிர்த்துள்ள சூழலிலும் ஐ.நா பாதுகாப்பு சபையில் இலங்கை பற்றிய விவாதம் மீண்டும் இடம்பெறுவது ஐயம் என ஐ.நாவிற்கான பிரித்தானியத் தூதுவர் சாவேர்ஸ் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை விவகாரத்தை விவாதத்திற்கு எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள வீற்றோ அதிகாரமுள்ள ரஸ்யா, சீனா என்பன சிறீலங்கா அரசுக்கு படைத்துறை வழங்கும் நாடுகளின் வரிசையில் முன்னணியில் இருக்கின்றன.

இருந்த போதிலும் இதனையும் எதிர்த்து விவாதத்திற்கு நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையோ, அமெரிக்காவோ, அல்லது பிரித்தானியாவோ திராணியற்ற நிலையில் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தி வருவதாக சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் பொய்யான பரப்புரைக்கு மேற்குலக நாடுகளும் செவிசாய்த்து வருகின்றமை பல சந்தர்ப்பங்களில் அவதானிக்கப்பட்டுள்ளது.

அல்லது சிறீலங்கா அரசுக்கு மட்டும் தனியாக, நேரடியாக கண்டனம் தெரிவிக்க திராணியற்ற வெளிநாடுகள் விடுதலைப் புலிகள் மீதும் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சுமத்த முனைவதை அவதானிக்க முடிகின்றது.

இது பற்றி 'பதிவு' இணையத்திற்கு நேற்று கருத்துக் கூறியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வன்னியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் பல ஆண்டுகளாக ஏற்கனவே வாழ்ந்தவர்கள் எனவும், அவர்கள் விடுதலைப் புலிகளுடன் இருப்பதே அவர்களுக்கான பாதுகாப்பு என்றும், படைகளிடம் அகப்பட்டுள்ள மக்கள் அகதி முகாம்களில் படும் வேதனைகள், துன்பங்களை மேற்குல நாடுகள் அவதானிக்கவில்லையா எனக்கேள்வி எழுப்பியிருந்தார்.

எது எவ்வாறாயினும் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் வீற்றோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்புரிமை கொண்ட நாடுகளில் ரஸ்யா, சீனா என்பன ஒரு பக்கமாகவும், அமெரிக்கா, பிரித்தானியா என்பன மற்றொரு அணியாகவும் பிளவுபட்டுள்ள நிலையில், புலம்பெயர் தமிழ் மக்கள் சழைக்காது தமது போராட்டங்கள் மூலம் இந்த நாடுகளின் கவனத்தை மேலும் தமது பக்கம் திசை திருப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

Comments