போரைத் தவிர வேறு எதற்கும் உடன்பட மாட்டோம் என்று உறுதியாக கூறுகின்றது சிறீலங்கா. சிறீலங்கா சமாதான உடன்படிக்கையில் இருந்து வெளியேறியபோது அதனைத் தடுத்து நிறுத்த முனையாத சர்வதேசத்திற்கு இப்போது பெரும் நெருக்கடி.
யார் சொன்னாலும் எவர் சொன்னாலும் போரை நிறுத்த முடியாது என்பதில் சிறீலங்கா உறுதியாக இருக்கின்றது. அதனை எவ்வாறு போரை நிறுத்தி சமாதானப் பாதைக்கு இழுத்து வருவது என்பது தான். புலிகளை அழிப்பதற்கு உற்சாகத்தை வழங்கி, பப்பா மரத்தின் உச்சத்தில் சிறீலங்காவை ஏற்றி வைத்துவிட்டன அதன் ஆதரவு சக்திகள். இப்போது பெரும் போர் வெற்றியில் இருப்பதாக கருதும் அதன் சிந்தனையில் மாற்றம் நிகழாத வரைக்கும் சிறீலங்காவை யாராலும் சமாதானப் பாதைக்கு இலகுவில் இழுத்து வந்துவிட முடியாது. அவ்வாறு இழுத்து வருவது சாதாரணமாக முடியக்கூடிய காரியமும் அல்ல.
உலகத்தால் முடியாததை விடுதலைப் புலிகள் செய்து முடிப்பார்கள். கடந்த காலங்களிலும் சிங்களப் பேரினவாதம் இவ்வாறு போர்ச் சன்னதம் கொண்டிருந்தபோது, முறையான மருந்து கொடுத்து அவர்களை வலுக்கட்டாயமாக சமாதானத்திற்கு இழுத்து வந்தவர்கள் விடுதலைப் புலிகளே. இப்போதும் சிறீலங்காவின் கடிவாளம் விடுதலைப் புலிகளின் கைகளிலேயே இருக்கின்றது. ஆனால், மிகவும் உச்சமான போரியல் தந்திரோபாயத்தை கையாளும் விடுதலைப் புலிகள், சிங்கள தேசத்தின் உண்மை முகத்தை முழுமையாக அம்பலப்படுத்துவதற்கு அதிக விலையைக் கொடுத்து நீண்ட பொறுமை காத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்தப் பொறுமையின் வெளிப்பாடாக சிறீலங்காவின் உண்மை முகத்தை, போர் வெறி கொண்ட அதன் கொடூர முகத்தை சர்வதேசம் மெல்ல மெல்ல உணர்ந்துகொள்ளத் தொடங்கியுள்ளது. ‘விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டையில் அவர்களை முற்றிலும் களையெடுத்தாலும் கூட, தமிழர் விவகாரங்களுக்கு அரசியல் தீர்வு காண்பதில் சிறீலங்கா அரசு ஆர்வம் காட்டாது' என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பொப் கேஸி வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளமை இந்த வெளிப்பாட்டின் அடிப்படையில்தான். அத்துடன், விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஏன் கையில் எடுத்தார்கள் என்பதையும் அவர் அமெரிக்க செனட் சபையில் புரிய வைத்திருக்கின்றார்.
இதேவேளை, சிறீலங்கா ஒரு இனப்படுகொலையைத்தான் செய்கின்றது என்பதை பிரித்தானியாவும் உணரத்தலைப்பட்டுள்ளதை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரம் குறித்து இந்த வாரம் நடந்த விவாதம் உணர்த்தியிருக்கின்றது. வன்னியில் மிகப் பெரும் மனித அவலம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக தனது ஆழந்த கரிசனையை வெளிப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எல்பின் லெயிட், சிறீலங்கா அரசாங்கத்திடமிருந்து வெளிப்படும் சில சமிக்ஞைகள் அது ஏற்கனவே ஈடுபட்டுள்ள இனப்படுகொலை நடவடிக்கைகளில் மேலும் முன்சென்று அதிகமாக ஈடுபடுவதற்கு தயாராகி வருவதனையே காட்டி நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விடயங்கள் குறித்து தாங்கள் மிகுந்த கவலையடைந்திருப்பதாகவும் ஒவ்வொரு நிமிடமும் நிலைமை மிகவும் மோசமடைந்து செல்வதாகவும் நாளைய இரவு மிகவும் கொடூரமானதாக கூட இருக்கலாம் என்றும் அவர் எச்சரித்திருக்கின்றார். இவரது கருத்திற்கு பதிலளித்து உரையாற்றிய பிரித்தானிய அரசின் வெளிவிவகார அமைச்சரும் கொமன்வெல்த் செயலருமான திரு.டேவிட் மிலிபான்ட் அவர்கள், இவரது கருத்து மிகவும் சரியானது எனவும் தான் முழுமையாக ஏற்றுக் கொள்வதாகவும் கூறியிருக்கின்றார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டு தமிழின அழிப்பைத்தான் சிறீலங்கா இத்தனை காலமும் செய்துகொண்டிருக்கின்றது என்பதைப் புரிய வைப்பதற்கும், தமிழர்கள் அதிகளவான விலையைக் கொடுக்க வேண்டியுள்ளது. இந்த விலைகள் எல்லாம் விடுதலைக்கானவையே. ஆனாலும் உலகத்தில் எங்குமே நிகழ்ந்திராத மிகக்கொடூரமான சாவை எங்கள் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த அவலத்தை தடுத்து நிறுத்துவதற்கு புலம்பெயர்ந்த மக்களால் மட்டுமே முடியும்.
வன்னியின் ஒரு மூலைக்குள், ஒட்டுமொத்த தமிழினத்தையும் சிங்கள தேசம் அழித்து முடித்திருக்கும். இன்று அதன் வேகத்தை தடுத்து நிறுத்தி வைத்திருப்பது புலம்பெயர்ந்த மக்களின் எழுச்சியும், அதனால் எழுந்த சர்வதேத்தின் அழுத்தங்களுமே. விடுதலைப் புலிகள் இழந்த நிலத்தை மீட்டெடுப்பார்கள், ஆனால், இன்று அங்கு இன அழிப்பிற்குள் சிக்கியுள்ள அந்த மக்களை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு புலம்பெயர்ந்த மக்களின் எழுச்சியிலேயே தங்கியிருக்கின்றது. சோர்ந்துபோகாத தொடர்ச்சியான பேரெழுச்சிகளே அந்த மக்கள் மீது விழுகின்ற ஒவ்வொரு குண்டையும் தடுத்து நிறுத்தும் என்பதை புலம்பெயர்ந்த மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஆசிரியர் தலையங்கம்
நன்றி
ஈழமுரசு
Comments