ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் தமிழீழ ஆதரவாளர்களை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார். கலைஞரும் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தமிழீழ ஆதரவாளர்களை கைது செய்திருக்கின்றார். ஆனால் இருவருக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது.
ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படும். அவர்கள் ஜாமீனில் வெளியில் வந்தாலும், வழக்கிற்காக அலைய வேண்டியிருக்கும். ஆனால் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவது இல்லை. கைது செய்யப்பட்டவர்களை ஏதாவது ஒரு மண்டபத்தில் வைத்திருந்து விட்டு, மாலையில் அனுப்பி விடுவார்கள்.
ஜெயலலிதாவை விட கலைஞர் மேலானவர் என்று கருதப்பட்டதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறி விட்டது. தமிழீழ ஆதரவாளர்களை ஜெயலலிதா பொடாவில் கைது செய்து சிறையில் அடைத்தது போன்று, கலைஞரும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து வருகின்றார். பொடாவிற்கு சற்றும் குறைந்தது அன்று தேசிய பாதுகாப்புச் சட்டம்.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டால், ஒரு ஆண்டு வெளியில் வர முடியாது. ஒரு ஆண்டிற்குப் பின்புதான் ஜாமீன் கிடைக்கும். பெரும் வன்முறையில் ஈடுபடுபவர்களை சிறையில் அடைப்பதற்கு இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த இந்தச் சட்டம் தற்பொழுது தமிழின உணர்வாளர்களின் குரல்வளையை நெரிப்பதற்குப் பயன்பட்டு வருகின்றது.
முதலில் சீமான் இந்தச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்பொழுது கொளத்தூர் மணி மீது இந்தச் சட்டம் பாய்ந்திருக்கிறது. விரைவில் மதிமுக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தின் மீதும் இந்தச் சட்டம் பாய இருப்பதாக செய்திகள் வருகின்றன.
இந்தியாவை ஒரு ஜனநாயக நாடு என்று சொல்வார்கள். ஆனால் பேச்சுரிமை இல்லாத ஒரு நாடாக இந்தியா மாறி வருகின்றது.
காந்தி கொலையை அடுத்து ஆர்எஸ்எஸ் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது: ஆனால் அந்தத் தடையை எதிர்த்து பேசுவதற்கு உரிமை இருந்தது. மாநாடுகள் போட்டு ஆர்எஸ்எஸ் மீதான தடையை நீக்கும்படி பரப்புரை செய்வதற்கு உரிமை இருந்தது:
இன்றைக்கு ஆர்எஸ்எஸ் மீது தடை இல்லை. அது மட்டும் அன்றி ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு அங்கமான பிஜேபி இந்தியாவை ஆளக்கூடிய கட்சிகளில் ஒன்றாக வேறு இருக்கின்றது.
ஆனால் விடுதலைப் புலிகள் மீது தடையை நீக்கும்படி யாராவது பேசினால், அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இத்தனைக்கும் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்திற்கு ஆதரவாக பேசுவது குற்றம் அன்று என்று இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது. அதுவும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது பற்றிய வழக்கு ஒன்றிலேயே இந்தத் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
அப்படியிருந்தும் தமிழின உணர்வாளர்களின் பேச்சுரிமையை பறிக்கின்ற மோசமான வேலையில் கலைஞரின் அரசு ஈடுபட்டு வருகின்றது.
சீமான், கொளத்தூர் மணி போன்றவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கலைஞரின் அரசு சிறையில் அடைத்து தமிழ் நாட்டின் தமிழுணர்வாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலை விடுத்துள்ளது. ஒரு ஆண்டு சிறையில் இருக்க வேண்டி வரும் என்ற பயத்தில் இனியாரும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன் வரமாட்டார்கள் என்று கலைஞரின் அரசும் காங்கிரஸ் கட்சியும் எதிர்பார்க்கின்றன.
ஜெயலலிதா தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பல தமிழுணர்வாளர்களை பொடாவில் ஒரு ஆண்டுக்கு மேலாக சிறையில் அடைத்து வைத்திருந்த பொழுது, பலருடைய குடும்பங்கள் நிலைகுலைந்து போயின. ஒரு குடும்பத் தலைவன் ஒரு ஆண்டுக்கு மேலாக சிறையில் இருந்தால், அந்தக் குடும்பம் எத்தகையை ஒரு நெருக்கடிக்குள் சிக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
முக்கிய அரசியல் தலைவர்களைத் தவிர பொடாவில் சிறையில் இருந்த இப்படியான பலர் இன்றைக்கு ஈழத் தமிழர் பற்றிய விடயங்களில் இருந்து சற்று ஒதுங்கியே இருக்கின்றார்கள். இப்படியான ஒரு அச்ச உணர்வை உருவாக்கும் திட்டத்துடனேயே இன்றைக்கு தேசிய பாதுகாப்புச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.
சில மாதங்களுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த காடுவெட்டிக் குருவையும் கலைஞரின் அரசு சிறையில் அடைத்தது. பாட்டாளி மக்கள் கட்சியோடு ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த நடவடிக்கை இடம் பெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டம் ஒன்றில் காடுவெட்டி குரு கலைஞர் பற்றி கடுமையாக பேசியதை வைத்து இந்தக் கைது இடம் பெற்றது:
ஆனால் காடுவெட்டிக் குரு மீதான வழக்கு ஓரிரு மாதங்களில் திரும்பப் பெறப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் வைத்திருப்பதற்கான காரணங்கள் தற்பொழுது இல்லை என்று காரணம் கூறி அவர் விடுவிக்கப்பட்டார். பாட்டாளி மக்கள் கட்சியுடனான மோதல் முடிவுக்கு வந்ததே காடுவெட்டி குருவின் விடுதலைக்கு காரணமாக இருந்தது.
சீமானும், கொளத்தூர் மணியும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எழுப்புகின்ற குரல் ஈழத் தமிழர்களுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியை பாதிக்கும் என்பதனாலேயே இன்றைக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். தேர்தல் முடிந்த பிற்பாடு இவர்கள் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டம் திரும்பப் பெறப்படும் வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.
சீமான் போன்றவர்கள் மீது வழக்குப் போடுகின்ற போது காங்கிரசின் தயவில் இயங்குகின்ற கலைஞரின் அரசு மிகவும் கெட்டிக்காரத்தனமாகவே செயற்படுகின்றது. இவர்கள் மீது விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் என்று வழக்குப் போடாது, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயற்பாட்டார்கள் என்றுதான் போடுகின்றது. புலிகளை ஆதரித்து பேசுவதற்கு வழக்குப் போட்டால், அது சட்டரீதியாக எடுபடாது என்பது கலைஞரின் அரசுக்கு தெரியும். ஆனால் தமிழ் நாட்டின் ஊடகங்களில் “புலிகளை ஆதரித்த சீமான் கைது” என்றுதான் செய்தி வருகின்றது.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான குரல்களை நசுக்குவதற்கு இந்த ஊடகங்களும் தங்களின் பங்களிப்பை செய்து வருகின்றன.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார் என்று வழக்குப் போடுவதும் ஒரு கேலிக் கூத்தான விடயம்தான். இந்தியா என்று ஒரு நாடு இருக்கின்றதா என்பதும், அப்படியான ஒரு நாட்டிற்கு இறையாண்மை என்கின்ற ஒன்று இருக்கின்றதா என்பதும் பெரும் கேள்விக்குரிய ஒரு விடயம்.
வரலாற்றுரீதியாக இந்தியா என்று ஒரு நாடு ஒரு போதும் இருந்தது இல்லை. வீரபாண்டிய கட்டப் பொம்மனும், மருதுபாண்டியர்களும் இந்தியாவிற்காக போர் செய்யவில்லை. இறையாண்மையோடு இருந்த தங்களின் நாட்டுக்காகவே போராடினார்கள். ராஜராஜ சோழனும் இந்தியாவிற்காக படை நடத்தவில்லை. தன்னுடைய நாட்டுக்காகவே படை நடத்தினான்.
தனித் தனி நாடுகளாக இருந்த ஒரு பரந்த பிரதேசத்தை வெள்ளையர்கள் கைப்பற்றி ஆண்டார்கள். அவர்கள்தான் “இந்தியா” என்று பெயரும் வைத்தார்கள். வெள்ளையர்கள் ஆண்ட பொழுது கூட இன்றைக்கு இருக்கும் இந்தியா இருக்கவில்லை. தற்போதைய இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ளையர்களின் மேலாண்மையை ஏற்ற தனி அரசுகளாக திகழ்ந்தன. ஆட்சி நிர்வாகம் அந்தந்த அரசுகளாலேயே நடத்தப்பட்டன.
கேரளம், மைசூர், ஐதரபாத், ஒரிசா, காஸ்மீர், சிக்கிம் போன்ற பல பகுதிகள் தனி நாடுகளாக திகழ்ந்தன. வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்திற்கு முன்பும் “இந்தியா” இருக்கவில்லை. வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்திலும் “இந்தியா” இருக்கவில்லை. ஒரு நிலப் பகுதிக்கு வைக்கப்பட்ட பெயர்தான் “இந்தியா” என்பது. ஒரு நாட்டுக்கு அன்று.
இந்தியத் துணைக்கண்டத்தை வெள்ளையர்கள் விட்டுச் சென்ற பின்பும் இந்தியாவின் வரைபடம் காலத்திற்கு காலம் மாறவே செய்தது. ஐதரபாத் போன்ற தனியரசுகள் இந்திய மேலாதிக்கத்துக்குள் இணைய மறுத்தன. அந்த நாடுகள் படை பலத்தின் துணையோடு வலுக்கட்டயாமாக இணைக்கப்பட்டன. சில நாடுகள் பல ஆண்டுகள் கழித்தே இந்தியாவுடன் இணைந்து கொண்டன.
காஸ்மீரையும் இந்தியா தன்னுடன் இணைப்பதற்கு முற்பட்டது. பாகிஸ்தானும் தன்னுடைய படைகளை அங்கு அனுப்பி விட்டதால், அது முற்றுமுழுதான வெற்றியை அளிக்கவில்லை. இந்தப் பிரச்சனைக்குள் ஐநா சபை தலையிட்டது. காஸ்மீர் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டது. இன்று வரை அப்படியான ஒரு வாக்கெடுப்புக்கு இந்தியா தயாராக இல்லை.
இதற்கு இடையில் பாகிஸ்தான் தான் கைப்பற்றிய காஸ்மீரில் ஒரு பகுதியை சீனாவுக்கு விற்று விட்டது. தன்னுடையது என்று இந்தியா உரிமை கொண்டாடுகின்ற ஒரு நிலத்தின் மூன்றில் ஒரு பங்கை இன்னொரு நாடு கைப்பற்றி, அதில் ஒரு பகுதியை வேறொரு நாட்டுக்கு விற்கிறது என்றால், இந்தியாவை இறையாண்மை உள்ள நாடு என்று எப்படிச் சொல்ல முடியும்?
காஸ்மீர் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்துவதை தடுக்கின்ற இந்திய அரசு, சிக்கிம் நாடு இந்தியாவுடன் இணைவதற்காக வாக்கெடுப்பை நடத்துவதை ஆதரித்தது. 1975ஆம் ஆண்டு சிக்கிம் இந்தியாவுடன் இணைந்து கொண்டது. இதுவும் பல சித்து வேலைகள் ஊடாகத்தான் நடைபெற்றது.
இந்தியாவின் பல பகுதிகளை சீனா இன்றும் ஆக்கிரமித்துள்ளதோடு இந்தியாவில் உள்ள அருணாச்சல பிரதேசத்தை தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடுகின்றது. அப்படியான சீனாவுடன் இந்திய அடக்க ஒடுக்கமாகத்தான் நடந்து கொள்கின்றது.
வரலாற்றின் அடிப்படையிலோ, யதார்த்தத்தின் அடிப்படையிலோ இந்தியா என்பது இறையாண்மை அற்ற ஒரு நாடு. இந்த நாட்டில் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக சீமான் போன்றவர்கள் கைது செய்யப்படுவது முரண்பாடான ஒன்று.
இந்திய வரலாற்றின்படி, அந்த நிலப்பகுதியில் உள்ள நாடுகளின் எல்லைகள் மாறிக் கொண்டே இருப்பன. இந்திய வல்லாட்சிக்குள் சில நாடுகள் இணைவதும், சில நாடுகள் பிரிந்து போவதும் இயல்பான ஒன்று. வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது. அது சட்டங்களாலும் முடியாது.
Comments