உன்னை எரித்தத் தீ


முத்துக்குமாரா!
ஒரு தீக்குச்சியை உரசி
எங்களை நெருப்பாக்கிவிட்டாய்!

உன் மரணத்தை நினைத்து
பெருமைப்படுகிறோம்
பைத்தியக்காரர்கள்
கடன்காரர்கள் என
கடந்தகாலம்போல்
உன்னைக் கொச்சைப்படுத்த முடியாது
தமிழினத்தின் கோரிக்கைகளை
எழுதிவைத்துவிட்டே
நீ இறந்திருப்பதால்

ஆளும் மன்னர்களின்
மனசாட்சியை உலுக்க
நீ மண்ணெண்ணெய் ஊற்றினாய்
இதயத்தையே இரவல் பெற்றவர்களிடம்
இருக்குமா மனசாட்சி ?

ஈழத்தில்
குண்டு மழையில்
நனைந்த தமிழர்கள்
குருதி வெள்ளத்தில்
மிதக்கிறார்கள்
கொழும்பு சென்ற
இந்தியப் பயணம்
விருந்து முடித்து வீடு திரும்பியது.

உன் மரணம் கண்டு
ஊமைகள் பேசுகிறார்கள்
முடவர்கள் நடக்கிறார்கள்
எங்கிருந்து தொடங்கலாம்
உனக்கான இரங்கல் கவிதையை
வழக்கம்போலவே யோசிக்கிறார்,
தமிழினத்தலைவர்.....

நாற்காலியைக் காக்க
மருத்துவமனையில் நாடகமாடும்
தமிழின இந்திய துரோகத்தையும்
எரித்த பின்பே அணையும்
உன்னை எரித்தத் தீ...

விழுப்புரம் கா. தமிழ்வேங்கை

Comments