இந்திய படைத்துறை மருத்துவக்குழு ஈழத்திற்கு நேரடியாகக் களமிறக்கப்பட்டுள்ளமை பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்திருப்பதாக, படைத்துறை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்திய படைத்துறை மருத்துவர்கள் 8 பேர், மற்றும் உதவியாளர்கள் கொண்ட குழுவொன்று நேற்று (திங்கட்கிழமை) கொழும்பிற்கு சென்றிருப்பதுடன், முல்லைத்தீவு புல்மோட்டையில் முகாம் அமைத்து மருத்துவ உதவிகளை வழங்க இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்திய அரசின் மருத்துவ உதவிகளை வரவேற்று நன்றி தெரிவித்துள்ள சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம, புல்மோட்டையில் இவர்களுக்கென 30 வீடுகள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், 13ஆம் நாள் முதல் அவர்களது பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கொழும்பை சென்றடைந்த இந்திய படைத்துறை மருத்துவக் குழுவினர், தம்முடன் இலங்கை மதிப்பில் 70 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருள்களையும் எடுத்துச் சென்றிருப்பதாக, இந்தியத் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
ஈழத்தமிழர்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் இனவழிப்பு நடவடிக்கைக்கு பின்னணியில் இருந்து இந்திய அரசு முழுமையான ஆதரவு வழங்கி வருவதாக, இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மற்றும் பழ.நெடுமாறன், வைகோ, தொல்.திருமாவளவன் உட்பட தமிழ்நாட்டின் தலைவர்கள் பலர் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்ற நிலையில் இந்திய படைத்துறை மருத்துவர்கள் நேரடியாகக் களமிறக்கப்பட்டமை பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு இந்திய படைத்துறை மருத்துவக்குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை இந்தியத் தேர்தலுக்கான நாடகம் என, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வன்னியில் முள்ளியவளை, வள்ளிப்புனம், விசுவமடு, உடையார்கட்டு, மல்லாவி, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களிலிருந்த மருத்துவமனைகளை சிங்களப் படைகள் தாக்கி அழித்துள்ளதையும், ஏராளமான நோயாளிகளும், மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள நெடுமாறன், மருத்துவமனைகளை அழித்த நிலையில் சிங்கள படைகளின் பாதுகாப்புடன் இயங்கும் இந்திய மருத்துவமனைக்கு தமிழர்கள் யாரும் செல்ல மாட்டார்கள் எனவும், அவ்வாறு செல்வது அவர்களின் உயிர்களுக்கு அபாயத்தை விளைவிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலையின் காரணமாக தமிழக மக்களை ஏமாற்றுவதற்கு இத்தகைய நடவடிக்கைகளை இந்திய அரசு வெளியிடுவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் பழ. நெடுமாறன் கூறியிருக்கின்றார்.
உண்மையில் ஈழத் தமிழர்களுக்கு மருத்துவ உதவி செய்ய இந்தியா விரும்பினால், செஞ்சிலுவைச் சங்கம் அங்கு செயற்படுவதற்கு அனுமதிக்குமாறு சிறீலங்கா அரசை வற்புறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
செஞ்சிலுவைச் சங்கம் வெளியேற்றப்பட்டதையோ, மருத்துவமனைகள் அழிக்கப்பட்டதையோ இதுவரை கண்டிக்காத இந்திய அரசு, இப்போது மருத்துவ உதவி செய்யப்போவதாக நாடகமாடுவதை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் எனவும், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Comments