தவறிப்போன நோக்கங்கள்.!

சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கு - குறிப்பாக வன்னியில் யுத்தப் பகுதியில் பெரும் அவலத்தின் மத்தியில் வாழும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கத் தவறிவிட்டது என்றே கூறுதல் வேண்டும். ஒருவகையில் பார்க்கப்போனால் வன்னி மக்கள் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளார்கள் என்றுகூடக் கூறுதல் பொருத்தப்பாடானதாகும்.

சிறிலங்கா அரசு வன்னியில் உள்ள மக்களுக்கான உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கப்பெறுவதைத் திட்டமிட்டுத் தடைசெய்தது என்பதில் கேள்விக்கு இடமில்லை. இதற்கென அது ஒரு புறத்தில் வன்னிக்கான விநியோகங்கள் - குறிப்பாக அரச மற்றும் தனியார் (வர்த்தகர்கள்) மூலமான விநியோகங்களைப் படிப்படியாகக் குறைத்து வந்ததோடு தடையும் செய்தது.

அடுத்ததாக, வன்னியில் பணியாற்றிய அரசசார்பற்ற நிறுவனங்களை வன்னியில் இருந்து வெளியேற்றியதன் மூலம் வன்னி மக்களுக்கான நிவாரணப்பணிகளை முடக்கியது. அரசின் பணிப்புக்களைப் புறந்தள்ளி பணி யாற்றிய அரசசார்பற்ற நிறுவனங்கள் மீது அரச படைகள் தாக்குதல்கள் நடத்தி அவற்றின் செயற்பாடுகளையும் முடக்கியதோடு நிவாரணப் பொருட்களை அழிவிற்குமுள்ளாக்கின.

சிறிலங்கா அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கையானது வன்னி மக்களின் வாழ்க்கையைப் பெரும் நெருக்கடிக்குள்ளாக்கும் என்பது சகல அரசசார்பற்ற நிறுவனங்களினாலும், ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புக்களினாலும் புரியப்பட்டே இருந்தன. ஆனால், இவ்விடயத்தில் இவ் அமைப்புக்கள் போதிய அக்கறை கொண்டிருந்தனவா? என்பது கேள்விக்குரியதே. இதனை ஒருவகையில் பார்க்கப்போனால் வன்னியில் ஏற்பட்ட மனித அவலத்தைப்போக்க அவை முற்படவில்லை என்றே கூறலாம்.

இதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் உண்மைக்குப் புறம்பான யதார்த்தத்திற்கு மாறான பிரசாரத்தையும் வாக்குறுதிகளையும் அவை நம்பியதுகூடக் காரணமாக இருக்கலாம். குறிப்பாகக் கடந்த பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதிக்கு முன்னராகவோ அன்றி அதற்கு சில நாட்கள் பின்னதகவோ யுத்தம் முடிவிற்கு வந்துவிடும் எனச் சிறிலங்கா அரசாங்கம் நம்பிக்கை வெளிப்படுத்தி வந்தது. ஆகையினால் யுத்தம் முடிவிற்குவந்த பின்னர் அதாவது விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டபின்னர், வவுனியா கொண்டுசெல்லப்படும் வன்னி மக்களுக்கு அங்குள்ள தடுப்பு முகாம்களில் வைத்து நிவாரணம் வழங்க சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் தம்மைத் தயார்ப்படுத்திக்கொண்டால் போதுமென்பதே அவர்களின் அறிவுறுத்தலாக இருந்தது.

இதனை ஐ.நா. நிவாரண அமைப்புக்கள் உட்பட பெரும்பாலான அரசசார்பற்ற நிறுவனங்களும்கூட நம்பின. இதன் காரணமாக அவை, வவுனியாவில் நிவாரணப் பணிகள், வன்னி மக்களை அவர்களின் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றுவதற்கு ஒத்துழைத்தல், போன்ற விடயங்களில் அவர்கள் காட்டிய அக்கறை அளவிற்கு வன்னியிலுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி அவை சிந்திக்கவில்லை. இதன் விளைவே வன்னி மக்களுக்கான மனிதாபிமான பணியாற்றுவதில் அவை தோல்வி கண்டவையாயின.

இது ஒருவகையில் அவை தமது நோக்கத்தில் இருந்து தவறின, அன்றி ஏமாற்றப்பட்டன என்றே கூறுதல் வேண்டும். அவ்வாறு இல்லாதுவிடின் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து வன்னி மக்களுக்கான மனிதாபிமானத் தேவைகளை வழங்காது புறந்தள்ளின என்றே அர்த்தப்படும்.

நன்றி: ஈழநாதம் (ஆசிரியர் தலையங்கம் 07.03.2009)

Comments