யார் பயங்கரவாதிகள்? தேவை சர்வதேச நீதிமன்ற விசாரணை!

1980 முதல் வட மாகாணத்தில் வலிகாமம் வடக்கில் இருந்த தமிழர்களை கடற்படைப் பீரங்கித் தாக்குதல்கள் மூலம் வெளியேற்றிய இலங்கையின் முப்படைகளும் சுமார் 25 சதுரக் கியோமீற்றர் பரப்பளவு பயிர்ச் செய்கை நிலங்களையும் குடியிருப்புகளையும் வன்பறிப்புச் செய்து வெளியேற்றி அப்பிரதேசத்தை அதி உயர் பாதுகாப்பு வலைமாக்கிக் கொண்டன. இன்று 25 வருடங்களுக்கு மேலாகியும் அப்பிரதேச மக்களை மீண்டும் குடியேற அனுமதிக்காது இருக்கிறது இலங்கை அரசு.

1987 இல் கொக்கட்டிச்சோலை முதல் இன்று முல்லைத் தீவு வரை தொடரும் ஈழத் தமிழரின் இனப் படு கொலைகளுக்கு பதில் கூற வேண்டியவை இலங்கை, இந்திய அரசுகளே. கடந்த இரண்டு வருடங்களாகக் கிழக்கிலும் வன்னியிலும் காலம் காலமாய் வாழ்ந்த தமிழ் மக்களை வகை தொகையின்றிக் கொன்று அழித்தபடியே போரை நடத்துவதும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், சீனா, யப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளே!

கிராமம் கிராமமாய் எறிகணைகளை, விமானக் குண்டுகளை வீசி மக்களைக் கொன்றும், குற்றுயிரும் குலை உயிருமாய் ஓட ஓட விரட்டியவர்கள் யார்? விடுதலைப் புலிகளா? உணவு, மருந்து போன்றவற்றை ஆயுதமாகப் பயன் படுத்துவது போர்க்; குற்றம் என்பதைத் தெரிந்தும் அந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் யார் புலிகளா? உலகால் தடைசெய்யப்பட வேண்டும் என்று கோரப்படும் கொத்தணிக் குண்டுகளை மக்கள் குடியிருப்புகள் மீது வீசிக் கொலை வெறியாட்டம் போட்டு வருவதும் விடுதலைப் புலிகளா?

இத்தனையும் செய்யும் இலங்கை இந்திய அரசுகளும் அவற்றுக்குத் துணை போகும் இணைத் தலைமை நாடுகளும் பயங்கரவாதிகளா? அல்லது இத்தகைய தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து மக்களைக் பாதுகாத்து, மக்களோடு மக்களாய் நிற்கும் விடுதலைப் புலிகளா பயங்கரவாதிகளா?

புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என இதுவரை காலமும் எழுப்பப் படாத குற்றச் சாட்டை புலிகள் கிளிநொச்சியைக் கைவிடும் வரை எவரும் எழுப்பவில்லையே ஏன்? மாவீரர் தினத்தில் கிளிநொச்சியில் சிங்கக் கொடி ஏற்றுவோம் எனக் வீராப்புப் பேசிய போதும், அன்று தலைவரின் பிறந்த நாள் பரிசாக மரணத்தைத் தருவோம் எனக் கூறி விமானக் குண்டுத் தாக்குதல் நடத்திய போதும் புலிகள் மனிதக் கேடயங்களைப் பயன் படுத்துகிறார்கள் என எவரும் பேசாதது ஏன்?

சென்ற நூற்றாண்டில் போலந்து, ஒஸ்ரியா, ஹங்கேரி என யூத மக்கள் வாழ்ந்த இடங்களெல்லாம் பிடித்துப் போய், யேர்மனியில் ஹிட்லர் கொன்று ஒழித்தது போல் மேற்கே மன்னார் வரை வாழ்ந்து வந்த அப்பாவித் தமிழ் மக்களை இன்று முல்லைத் தீவுக்குள் எந்தப் பக்கமும் பாதுகாப்புத் தேடி ஓடவிடாமல் விரட்டி வந்து கொன்று அழிப்பது யார்?

கடந்த இரு மாதங்களுக்குள் 4000 க்கும் அதிகமான மக்களை இரவு பகல் ஏவிய எறிகணைகள் குண்டு வீச்சுகளால் கொன்றது யார்? உலகத்தாரால் ஏற்றுக் கொள்ளப் படாத கொத்துக் குண்டுகளை வைத்திய சாலைகள் மீதும் போட்டு அழித்து வருபவர் யார்? குழந்தைகள் பெண்கள் வயோதிபர் நோயாளிகளைக் கொன்று வந்தவர,; வருபவர் யார்? 12,000 க்கும் அதிகமான மக்கள் அங்கம் இழந்து தகுந்த மருத்துவ சிகிச்சை இன்றி வதைபடுவது யாரால்?

எந்த ஒரு குற்றம் ஆனாலும் தகுந்த சாட்சியங்களுடன் நிரூபித்தல் உலக நீதி. ஆனால் புலிகள் அதைச் செய்தார்கள் இதைச் செய்தார்கள் என அரசு கூறும் ஆதாரமற்ற அல்லது நெருக்குதல் மூலம் பெறப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் சுமத்துவது எப்படி நியாயம் ஆகும்? இதுவரை காலமும் கீறல் வீழுந்த இசைத் தட்டுப் போல் சிறுவரைப் புலிகள் போரில் ஈடு படுத்துகிறார்கள் எனப் பேசி வந்தவர்கள் இப்போது மக்களைக் கேடயமாகப் பயன் படுத்துகிறார்கள் என்றால் எப்படி ஏற்றுக் கொள்வது?

புலிகளா மக்களை மன்னாரில் இருந்து முல்லைத்தீவு வரை இழுத்து வந்தனர்? இடையில் எத்தனை உயிர்கள் இந்தியா நோக்கிய கடற் பயணத்தில் தமது இன்னுயிரை இழந்தனர்? இன்று இந்தியாவும் இணைத் தலைமை நாடுகளும் மக்களை பாதுகாப்பாக வன்னியில் கொண்டு விடப் போகிறார்களாம். நடந்து போகக் கூடிய தூரத்தில் உள்ள வவுனியாவுக்கு அவர்களா வந்து கப்பல் ஏற்றிக் கொண்டு போய் விட வேண்டும்?

தமிழ் மக்களா வவுனியா போகக் கேட்கிறார்கள்? இந்தியாவில் உள்ள அகதி முகாம்களே வசதி அற்றவை என உதறிவிட்டுப் போர் நடக்கும் காலத்தில் கூட வன்னிக்குத் திரும்பிய மக்கள் பற்றித்தான் அறிந்திருக்கிறோம். அப்போதும் கூட வவுனியாவுக்கோ கொழும்புக்கோ போக நினைக்காது மீண்டும் வன்னிக்குத் திரும்பினார்கள் என்றால் கோளாறு எங்கே யாரிடம் இருக்கிறது எனப் புரிந்து கொள்வது சுலபம். இணைத்தலைமை நாடுகள் கருணை மிக்க கண்ணியவான்கள் என்றால் மக்கள் தாம் வாழ்ந்த இடங்களிலேயே அமைதியாக வாழ இடம் தர வேண்டும்.

மகிந்தவின் அரசியல் தேவைக்காக ஒரு இனத்தையே அழிக்கும் வேலையில் இறங்க வேண்டிய தேவை என்ன? சென்ற ஜனாதிபதித் தேர்தலில் சிங்களத் தலைவர்கள் கொடுத்த கசப்பான அனுபவத்தால் எவருக்கும் வாக்களிக்காது வன்னி மக்கள் இருந்தது கொலைத் தண்டனைக்கு உரிய குற்றமா? அதுவும் வாக்காளர் இடாப்பில் இடம் பெறாத குழந்தை குஞ்சுகள் அப்போதும் இப்போதும் கருவில் உள்ளவர்களுக்கும் இன்று கூட்டுத் தண்டனை வழங்கும் கொடுங்கோல் சட்டம் இந்த நூற்றாண்டில் எந்த நாட்டில் இருக்கிறது?

இந்த மக்களின், ஈழத் தமிழ் மக்களின் இறையாண்மை பற்றி எங்கெங்கோ இருந்து வந்த பரதேசிகள் எல்லாம் பேசுகிறார்கள். இவர்கள் பேசும் இறையாண்மை என்பது மக்களிடமா அல்லது மக்கள் வாழும் மண்ணிடமா இருக்கிறது? எங்களின் இறையாண்மை எமக்குப் பிறப்பால் கிடைத்தது. அதனை மகிந்தவோ, மன்மோகன் சிங்கோ, பிரணாப் முகர்ஜியோ தரவும் முடியாது. தடுக்கவும் முடியாது.

எனவே, எமது மக்களை ஆடு மாடுகள் போல் கட்டாயமாக இழுத்துச் செல்லப் படுவதையோ, தடுப்பு முகாம்களிலும் வதை முகாம்களிலும் அடைக்கப் படுவதையோ நாம் அனுமதிக்கவோ, மன்னிக்கவோ கூடாது. தமது வாழ்விடங்களில் வாழும் இறையாண்மை இவர்களுக்கு உண்டு என்பதை உலகம் ஏற்க வேண்டும். இவர்களுக்கான சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப் பட்டு அவரவர் வாழ்விடங்களில் அரசமைத்துச் சுயமாக வாழ அனுமதிக்கப் பட வேண்டும்.

நோர்வேயின் அனுசரணையுடன் உலக நாடுகள் எங்கும் இலங்கையும் இணைத் தலைமை நாடுகளும் அமைதிப் பேச்சு நடத்தி தமிழ் மக்களுக்கு நம்பிக்கை மோசடி செய்தன. கடந்த 3 வருடங்களாக சிங்கள இன வெறி அரசின் தமிழ் இனப் படுகொலைக்கு பணமும் படைக் கலமும் பயிற்சியும் வழிநடத்தல் களையும் செய்து முழு ஊக்கமும் ஆக்கமும் அளித்து வரும் இவர்கள் அனைவரும் குற்ற வாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்களே.

1956 முதல் இன்றும் இலங்கையில் தொடரும் இனப் படுகொலையில் இந்திய, இலங்கை அரசுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. எனவே, இவ்விரு நாடுகளும் முதல் குற்றவாளிகளாக நிறுத்தப்பட வேணடியவர்களே. இந்த இனப் படுகொலையை ஊக்குவித்த குற்றவாளிகளாகக் கூண்டில் ஏற்றப் பட வேண்டியவர்கள் நோர்வேயும் ஏனைய இணைத் தலைமை நாடுகளுமே.

தமிழ் மக்களின் அரசுரிமை மற்றும் தாயக மீட்புக்காக உருவான தமிழரின் விடுதலை இயக்கமே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். அதனை சர்வதேச போர்ச் சட்ட விதிகளுக்கும் அமைவாக நேர்மையான நீதி விசாரணைகள் மேல் அல்லாது தடை செய்யும் உரிமை எந்த நாட்டுக்கும் கிடையாது. அப்படி தடை செய்யப் பட்டாலும் அதற்கு நாம் கட்டுப் பட வேண்டும் என்ற தேவை பரந்து பட்ட நாடுகளில் உள்ள எம் இனத்தைக் கட்டுப் படுத்தவும் முடியாது.

புலம் பெயர் மக்கள் அனைவரும் எமது மக்களை வலுக் கட்டாயமாக அவர்களது வாழ்விடங்களில் இருந்து அகற்றி புலிகளிடம் இருந்து பிரித்து விடும் இலங்கை இந்திய அரசுகளின் சதி வேலைகளுக்கு எதிராகக் கிளம்ப வேண்டிய காலம் ஏற்பட்டு விட்டது. இவர்களை நாம் தெருத் தெருவாய் இறங்கி ஆர்ப்பரிப்பதோடு நின்று விடாமல் இவர்களை உலக போர்க் குற்றவியல் நீதி மன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நீதி கேட்கும் செயலிலும் இறங்க வேண்டும்.

பொங்கி எழுந்து விட்ட தமிழ் இனமாய் நாம் எழுந்துவிட்ட இன்றைய நிலையில் நாம் தொடராக இவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் சோர்வின்றி செயற்படுவது அவசியமும் அவசரமும் ஆக உள்ளது. எனவே, புலம் பெயர் ஈழத் தமிழினம் இப்படியான வேலைத் திட்டத்தில் உடனடியாக இறங்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது என்பதைத் தெரிந்து கொள்வது இன்றைய தேவையாகும்.

- த.எதிர்மனசிங்கம் -

நன்றி: நிலவரம்

Comments