நான்கு மாதங்களாக மருந்துகள் அனுப்பப்படவில்லை: மருத்துவர் சத்தியமூர்த்தி

வன்னிக்கு கடந்த நான்கு மாதங்களாக மருந்துகள் அனுப்பப்படாத நிலையில் மருத்துவமனை மூடப்படும் அயாய நிலையில் உள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரும் மருத்துவருமான சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (17.03.09) ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்' நிகழ்ச்சிக்கு மருத்துவர் சத்தியமூர்த்தி வழங்கிய நேர்காணலில் தெரிவித்தவற்றில் முக்கிய பகுதிகள்:

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் நேற்றும் அதற்கு இரண்டு நாட்டுகளுக்கு முன்பாக இரு தடவைகள் 850-க்கும் அதிகமான நோயாளர்களை ஏற்றிச் சென்றிருக்கின்றது.

நேற்று சென்ற கப்பல் புல்மோட்டை பகுதியில் காயமடைந்தவர்களை இறக்கி விட்டிருக்கின்றது. அது தவிரவும் இன்னும் காயமடைந்தவர்களும் நோயாளிகளும் மருத்துவமனையில் இருக்கின்றனர்.

நாளை நோயாளர்களுக்கான கப்பல் வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்போது காயமடைந்தவர்கள், கடுமையான வேறு நோய்களுக்கு உள்ளானவர்கள் என 400-க்கும் அதிகமான நோயாளர்கள் மருத்துவமனையில் இருக்கின்றனர்.

200-க்கும் அதிகமான காயமடைந்தவர்களும், வேறு மருத்துவ நோய்கள் உடையவர்களுமாக 200-க்கும் அதிகமானவர்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டியதாய் இருக்கின்றது.

மழைக் காலம் முடிந்து இப்போது கடுமையான வெயில் காலமாக இருக்கின்றது. பல இடங்களில் வெள்ள நீர் வற்றி விட்டது. இருந்தாலும் மக்கள் வாழ்விடங்களில் அமைக்கப்பட்டிருந்த கிணறுகள் இடிந்து விட்டன. மக்கள் கிணறுகளை அமைத்தபடி இருக்கின்றனர்.

அத்தோடு, அவர்களின் பதுங்கு குழிகள் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டும் சிதிலமடைந்தும் விட்டன. அதிகமான பொதுமக்கள் மீண்டும் புதிதாக பதுங்கு குழிகளை புனரமைத்தப்படி இருக்கின்றனர்.

கடுமையான வெள்ளம் ஏற்பட்டதால் தொற்று நோய் பரவக்கூடிய அபாயம் இருந்தாலும் அதனை தடுப்பதற்காக மக்களைப் பொது சுகாதார பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியபடி இருக்கின்றோம்.

கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய சுகாதார திணைக்களத்தின் கீழ் 1,000-க்கும் அதிகமான பணியாளர்களும் தொண்டர்களும் இருப்பதனால் அவர்களின் பெரும்பாலானவர்கள் மருத்துவமனையிலும் ஏனையவர்கள் வெளிக்கள வேலைக்கும் அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.

வெளிக்கள பணிகளில் ஈடுபடும் மருத்துவ மாதர்கள், பொதுநல சுகாதார பரிசோதகர்கள், தொண்டர்கள் தனியே அந்த வெளிக்கள பணிகளை மாத்திரம் புரிகின்றனர்.

அதனைவிட, வேறாக மருத்துவமனைகளிலே மருத்துவர்கள், தாதியர்கள், பரிசோதகர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

மருந்துப்பொருட்கள் இதுவரையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினரால் அனுப்பி வைக்கப்படவில்லை. சுமார் 4 மாதங்களுக்கு மேலாக இந்தப் பகுதிக்கு மருந்துகள் அனுப்பி வைக்கப்படவில்லை.

இந்தப் பகுதி மருத்துவமனைக்கு ஜனவரி முதலாம் நாள் தொடங்கி இன்றுவரை 500-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவ குறைபாடுகள் காரணமாகவே உயிரிழந்திருக்கின்றனர்.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கு எங்களின் தேவை குறித்து நேரடியாக அவர்கள் இங்கே வருகை தந்தபோது கூறியிருக்கின்றோம். அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதி இன்று 500 மெற்றிக் தொன் உணவுக் கப்பலோடு வந்திருந்தார். அவர், கப்பல் உணவுத் தொகுதியோடு வரும்போது, வழக்கமாக இங்குள்ள மருத்துவர்களை சந்திந்துச் செல்வதுண்டு. அவர் மருத்துவமனைக்கு வந்த சமயத்தில் மருத்துவமனையில் காணப்படுகின்ற நிலைமைகள் தொடர்பாகவும் மருத்துவ தேவை குறித்தும் தெளிவாக விளங்கப்படுத்தினோம்.

எங்களின் தேவை குறித்து அவர் அறிந்து கொண்டுள்ளார். இன்று வந்த கப்பல், இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய 3 நாட்களுக்கு உணவுப் பொருட்களை இறக்கிவிட்டு அதன் பின்னரே செல்லும். இருந்தாலும் நாளை நோயாளர்களை ஏற்றிச்செல்ல ஒரு கப்பல் வரும் என நம்புகின்றோம்.

அந்தக் கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி கொடுத்து - மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகள் மருந்துகளை அனுப்புவதற்கு முயற்சி செய்தால் அந்த மருந்துகள் நாளை சில சமயங்களில் இந்த மருத்துவமனைக்கு கொண்டு வரப்படலாம்.

புதுமாத்தளன் மருத்துவமனையை தவிர்த்து வலைஞர்மடத்தில் இயங்குகின்ற ஒரு சிறிய மருத்துவமனையும் முள்ளிவாய்க்காலில் இயங்குகின்ற சிறிய மருத்துவமனையும் நோயாளிகளை உள்வாங்கி சிகிச்சை வழங்கி கொண்டிருக்கின்றன.

இதனைத் தவிர, மேலும் 3 இடங்களில் வெளிநோயாளி பிரிவு மட்டும் இயங்கி வருகின்றது. அதனை விடவும் 6 பிரிவுகளில் தாய்-சேய் நல மருத்துவ நிலைய இணைப்புச் செயலகம் இயங்குகின்றது.

Comments