இலங்கையில் செத்து மடியும் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்று கர்நாடக தமிழர்கள் இரத்த கையெழுத்து விரைவில் ஜனாதிபதியிடம் வழங்கப்படும் என்று கர்நாடக தமிழர் ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் இறையடியான் கூறினார்.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதற்கு எதிராக இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆங்காங்கு தினமும் பேரணி, ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல பெங்களூர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் பேரணியும், அதைத் தொடர்ந்து பல்வேறு தமிழ் அமைப்புகளின் சார்பில் போராட்டம் நடந்தன.
மேலும் கர்நாடக தமிழர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இரத்து கையெழுத்து வேட்டை நடந்தது. பெங்களூர் எம்.ஜி.ரோடு காந்தி சிலை எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்தை பழனிகாந்த் இரத்த கையெழுத்தை போட்டு தொடங்கி வைத்தார்.
போராட்டம் தொடங்கிய சில மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான பேர் தங்களது இரத்த கையெழுத்தை பதிவு செய்தார்கள்.
இது குறித்து கர்நாடக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் இறையடியான் கூறியதாவது:-
பெங்களூர் எம்.ஜி.ரோடு காந்தி சிலை முன்பு தொடங்கிய இரத்த கையெழுத்து வேட்டை வேகமாக நடைபெற்று வருகிறது. பெங்களூர், ஸ்ரீராமபுரம், மாகடிரோடு, கே.பி.அக்ரஹாரம், கே.எஸ்.கார்டன், பாகலூர் லே-அவுட், லிங்கராஜபுரம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள தமிழர்கள் இதில் இரத்த கையெழுத்து போட்டுள்ளனர்.
கோலார் தங்கவயல், பங்காருபேட்டை உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் படிவத்தை அனுப்பி வைத்துள்ளோம். இதுதவிர பலர் தானாகவே முன்வந்து இரத்த கையெழுத்து போட்டு தங்களது உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த பணி அடுத்த மாதம் முடிந்து விடும். அதன் பிறகு டெல்லி சென்று ஜனாதிபதியை நேரில் சந்தித்து அவரிடம் வழங்கப்படும்.
இவ்வாறு இறையடியான் கூறினார்.
Comments