யாழில் 'உதயன்' நாளிதழின் அலுவலகம் மீது கைக்குண்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் 'உதயன்' நாளிதழ் அலுவலகத்தின் மீது இன்று அதிகாலை அடையாளம் தெரியாத குழுவினரால் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் அலுவலகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் படுகாயமடைந்திருக்கும் அதேவேளையில் அலுவலகக் கட்டடத்துக்கும் சேதம் ஏற்பட்டிருப்பதாக 'உதயன்' வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் கஸ்துரியார் வீதியில் 'உதயன்' அலுவலகம் அமைந்திருக்கின்றது.

ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நேரத்திலேயே இன்று புதன்கிழமை அதிகாலை 12:30 நிமிடமளவில் அலுவலகத்துக்கு அருகே உள்ள சிறிய ஒழுங்கையினால் வந்த ஒரு குழுவினரே இந்தத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

'உதயன்' அலுவலகத்தின் மீது சில வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தாக்குதலில் பணியாளர்கள் நால்வர் கொல்லப்பட்டதையடுத்து அதற்கு காவல்துறையின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

காவல்துறையைச் சேர்ந்த நால்வர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருக்கும் நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது.

'உதயன்' அலுவலகத்தில் வழமையாக அதிகாலை 1:30 நிமிடமளவில் மணிவரையில் பணிகள் நடைபெறும்.

இந்த நிலையில் அலுவலகத்தின் கீழ் பகுதியில் உள்ள ஆசிரியர் பீடப் பகுதியை நோக்கியே கைக்குண்டு வீசப்பட்டுள்ளது.

இதனால் அந்தப் பகுதியில் உள்ள கட்டம் சேதமடைந்திருக்கின்றது. அலுவலகக் கண்ணாடிகள் உடைந்து சிதறியுள்ளன.

இருந்தபோதிலும் 'உதயன்' அலுவலகப் பணியாளர்கள் யாரும் காயமடையவில்லை. பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையைச் சேர்ந்த ஒருவரே படுகாயமடைந்து யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Comments