இன்று செய்தித்தாள்களில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சுடானின் ஆட்சித் தலைவர் ஓமர் அல் பஷீர் (Omar Hassan Al Baschir) பெயர் பலமாக அடிபடுகிறது. அவருக்கு எதிராக மேற்கொண்ட இனப்படுகொலை (3) மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் (5) மற்றும் போர் குற்றங்கள் (2) சுமத்தப்பட்டுள்ளன.
2008 இல் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் முக்கிய வழக்குத்தொடருனர் பஷீர் டாவூர் (Baschir Tawoor) நகரில் இயங்கும் மூன்று சிறுபான்மை இனக்குழுக்கள் செய்த கிளர்ச்சியை அடக்க எடுத்த நடவடிக்கையின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் 2003 ஆம் ஆண்டு பஷீர் சுடான் இராணுவத்துக்கு கிளர்ச்சியை அடக்குமாறும் யாரையும் போர்க் கைதிகளாகப் பிடித்துக் கொண்டு வரவேண்டாம் எனவும் கட்டளை பிறப்பித்தார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அது மட்டுமல்ல டாவூரில் இடம்பெற்ற போர் காரணமாக இடம்பெயர்ந்த 25 இலட்சம் மக்கள் தாமதமான சாவுக்கு முன்னர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார். ஹேக்கில் இயங்கும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் மார்ச்சு மாதம் 4 ஆம் திகதி; பஷீரைக் கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பித்துள்ளது.
ஆனால் அந்தப் பிடியாணையை சுடான் ஏற்பதற்கான சாத்தியம் இல்லை. பஷீர் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். தன்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்கிறார். மேலும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்துக்கு பிடியாணை பிறப்பிக்கும் உரிமை கிடையாது என்றும் சொல்கிறார். இந்தப் பிடியாணைக்கு எதிராக சுடானில் பேரணிகள் நடத்தப்படுகின்றன. பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றப் பிடியாணையை தாங்கள் மதிக்கப் போவதில்லை என்றும் டாவூர் எதிரிகளின் சுடுகாடாக மாறும் எனவும் எச்சரித்துள்ளனர்.
1944 இல் பிறந்த அல் பஷீர் சுடான் நாட்டு இராணுவத்தில் சேர்ந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று மேலே உயர்ந்தார். 1989 இல் அப்போதைய பிரதமர் சாதிக் அல் மாடியை ஒரு இராணுப் புரட்சி மூலம் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினார். 1993 ஒக்தோபர் 16 இல் பஷீர் தேசிய மீட்சிக்கான புரட்சிகர கட்டளை அவையைக் கலைத்துவிட்டு தன்னைத்தானே ஆட்சித்தலைவராக நியமித்துக் கொண்டார். அரசியல் கட்சிகளும் கலைக்கப்பட்டன. 1996 இல் நடந்த ஆட்சித்தலைவர் தேர்தலில் போட்டியிட்ட ஒரே வேட்பாளரான பஷீர் வெற்றி பெற்றார். இன்று சுடான் நாட்டு தேசிய காங்கிரசின் தலைவராவும் விளங்குகிறார்.
ஒக்தோபர் 2004 இல் தென்சுடான் பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்ட தன்னாட்சி உரிமையை வழங்கி 19 ஆண்டுகாலமாக நடந்து வந்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவந்தார். ஆனால் அவரது அரசு டாவூரில் நடத்திய மனிதப்படுகொலை கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.
பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் உரோமில் அய்க்கிய நாட்டின் பொதுச்சபையால் கூட்டப்பட்ட இராசதந்திரிகளின் மாநாட்டில் 1998 யூலை 17 இல் உருவாக்கப்பட்டது. இந்த மாநாடு 5 கிழமை நீடித்தது. மொத்தம் 120 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஏழு நாடுகள் எதிர்த்தன. 21 நாடுகள் நடுநிலமை வகித்தன. நீதிமன்றம் யூலை 01, 2002 இல் நடைமுறைக்கு வந்தது. இந்த ஆண்டு சனவரி மாதம் வரை 108 நாடுகள் நீதிமன்றத்தை அங்கீகரித்துள்ளன. அங்கீகரிக்காத நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, உருசியா, சுடான் முக்கியமானவை.
அனைத்துலக மட்டத்தில் இனப்படுகொலை மற்றும் கடுமையான குற்றங்களை இழைப்பவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனை வாங்கிக் கொடுப்பதே இந்த நீதிமன்றம் உருவாக்கப்பட்டதற்குக் காரணமாகும்.
2003 - 2005 காலப்பகுதியில் மூன்று இனக் குழுக்கள் வாழும் ஊர்கள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இனப்படுகொலைக்கு பாலியல் வன்முறை, பட்டினி மற்றும் பயம் போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக குமரிப் பெண்கள், 70 அகவை கடந்த மூதாட்டிகள் கும்பலான பாலியல்வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர்.
சுடானின் பதிலடியை எதிர்பார்த்து அய்யன்னா அமைப்பின் அதிகாரிகள் மற்றும் பன்னாட்டு அமைதிப் படையினர் அதியுச்ச எச்சரிக்கை நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அய்யன்னாவின் பொதுச் செயலர் பான் கி மூன் “யாரும் சட்டத்தை விட மேலானவர்கள் அல்ல. நீதியும் அமைதியும் ஒன்றை ஒன்று அணைத்துப் போட வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்.
பன்னாட்டு நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு வேறு காரணிகள் இருப்பதாக ஆபிரிக்கத் தலைவர்கள் எண்ணுகிறார்கள். சுடானின் எண்ணெய் வளந்தான் மேற்குலக நாடுகளது குறி அல்லது இலக்கு என்கிறார்கள்.
1800 களிலும் 1900 களிலும் சுடானில் எண்ணெய் கண்டு பிடிக்கப்பட்டது. அதனை அடுத்து அந்த எண்ணெய் வளத்தைக் கையகப்படுத்த அமெரிக்கா, அய்ரோப்பா மற்றும் சீனா தங்களுக்குள் போட்டி போடுகின்றன. மேற்கு நாடுகளை நம்பாத பஷீர் தனது நாட்டின் எண்ணெய் வளத்தையும் அது தொடர்பான உடன்பாடுகளையும் சீனாவுக்குக் கொடுத்துவிட்டார். ஒரு முதலாளித்துவ நாட்டுக்குள்ள பெரும் உற்சாகத்தோடு அந்த எண்ணெய் வளத்தை சீனா சுரண்டிக் கொண்டிருக்கிறது. சுடானின் எண்ணெய் வளத்தை மேற்குலகு நாடுகள் கோட்டை விட்டாலும் அந்த நாட்டின் ஆட்சியை மாற்றும் முயற்சியை மட்டும் கைவிடவில்லை.
1900 களில் இராக்குக்கு எதிராக இடம்பெற்ற முதல் வளைகுடாப் போரை அடுத்து சதாம் குசேன் அமெரிக்காவுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடித்தார். விற்கும் எண்ணெய்க்கு டொலருக்குப் பதில் யூறோ நாணயத்தை வாங்குவது என்ற சதாம் குசேனின் முடிவு அமெரிக்காவிற்கு எரிச்சலை கொடுத்தது. அந்த முடிவு தனக்கு எதிரான முடிவு என அமெரிக்கா எண்ணயது. எனவே இராக் மீது படையெடுப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. இன்று இராக்கின் எண்ணெய் வளம் அமெரிக்காவின் கைகளில் இருக்கிறது.
இராக் மீதான அமெரிக்காவன் படையெடுப்பு ஏனைய எண்ணெய் வள நாடுகளுக்கு ஒரு அபாய அறிவிப்பாகவும் எச்சரிக்கையாகவும் அமைந்தது. லிபியா அந்த எச்சரிக்கையை விளையாட்டாக நினைக்கவில்லை. எனவே அது அமெரிக்காவோடு சமரசம் செய்து கொண்டு விட்டது.
சுடான், பஷீருக்கு எதிரான பிடியாணை சீனாவை ஒதுக்கிவிட்டு மேற்குலக நாடுகளது எண்ணெய் குழுமங்களைக் கொண்டுவரும் முயற்சி என நினைக்கிறது. ஆனால் சுடான் அதற்கு மசிவதாக இல்லை. சுடான்தான் சீனாவின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடு. சீனாதான் சுடானின் ஆயுத தளபாட ஏற்றுமதி நாடு. ஒரு வேளாண்மை நாடாக இருந்த சீனா இன்று துரித கெதியில் கைத்தொழில் நாடாக மாறிவருகிறது. அதன் எண்ணெய்த் தேவை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி உலகில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
சுடானுக்கு எதிராக அய்க்கிய நாடுகள் பாதுகாப்பு அவை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத வண்ணம் சீனா பார்த்துக் கொள்கிறது. அமெரிக்கா இஸ்ரேலின் நலங்களை எப்படி அய்யன்னாவில் பார்த்துக் கொள்கிறதோ அதைத்தான் சீனாவும் செய்கிறது. இதில் யார் யோக்கியன் யார் அயோக்கியன் என்பதைக் கண்டு பிடிப்பது கடினமாகும்.
டாவூரில் இடம்பெற்ற கலவரத்துக்கு சுடான் அரசின் பாகுபாடே காரணமாகும். டாவூரில் வாழும் மக்களில் பெரும்பான்மை முஸ்லிம்கள் ஆவர். ஆனால் அவர்கள் ஆபிரிக்க இனத்தவர். உலக நாடுகள் டாவூர் மோதல்களை பெரும்பான்மை அராபியர்களுக்கும் சிறுபான்மை அராபியர் அல்லாதோருக்கும் இடையிலான மோதலாகவே பார்க்கின்றன.
டாவூர் மக்கள் தங்கள் நிலம் அரசு ஆதரவு அராபிய நாடோடிகளால் (துயதெயறநநன அடைவையை ) அபகரிக்கப்படுவதையிட்டு முறையிட்டு வந்துள்ளார்கள். பல்லாயிரக்கணக்கான டாவூர் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். நூற்றுக்கணக்கான ஊர்கள் சூறையாடப்பட்டுள்ளன. இந்த வன்முறையைத் தடுப்பதற்கு ஆட்சித்தலைவர் பஷீர் சரி, அவரது அரசு சரி எந்த முயற்சியுமே செய்யவில்லை. டாவூர் மக்களது அவலங்கள் அவர்கள் கிளர்ச்சி செய்ததற்கான தண்டனை அல்லது படிப்பித்த பாடம் என பஷீர் அரசு நினைக்கிறது.
பாதுகாப்பு அவை பஷீருக்கு எதிரான குற்றச்காட்டுக்களை பன்னாட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்தது. அதன் அடிப்படையிலேயே அது பிடியாணை பிறப்பித்துள்ளது. பிடியாணை பிறப்பித்ததை அடுத்து சுடான் 50 விழுக்காடு பன்னாட்டு ஊழியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிவிட்டது. இவர்கள்தான் டாவூர் மக்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள். இது டாவூரில் வாழும் மக்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. பலர் இஸ்ரேலில் தஞ்சம் புகுந்துள்ளார்கள்.
பஷீர் மீது போர்க்குற்றம் சாட்டி நடவடிக்கை எடுப்பது நல்லதுதான். ஆனால் உலகில் அவர் மட்டுந்தான் மானிடத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தார்? இராக் மற்றும் ஆப்கனிஸ்தான் மீது படையெடுத்து பேரழிவை ஏற்படுத்தி போர்க்குற்றம் இழைத்த முன்னாள் அமெரிக்க ஆட்சித்தலைவர் யோர்ஜ் புஷ், ரோனி பிளேயர் போன்றோர்களை பன்னாட்டு நீதிமன்றம் நீதியின் முன் நிறுத்துமா? இராக்கில் மட்டும் பத்து இலட்சம் மக்கள் அமெரிக்க படையிரலால் கொல்லப்பட்டார்கள். நாற்பது இலட்சம் மக்கள் இராக்கை விட்டு ஓடி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள்.
சுடான் நாட்டு ஆட்சித்தலைவர் பஷீருக்கும் ஸ்ரீலங்கா நாட்டு ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சேக்கும் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. பஷிர் மீது சுமத்தப்பட்ட எதிராக இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர் குற்றங்கள் இராசபக்சே மீதும் சுமத்தப் படவேண்டும். ஸ்ரீலங்காவிலும் இனப்படுகொலை, இனச் சுத்திகரிப்பு கன கச்சிதமாக இடம்பெறுவதை பன்னாட்டு நீதிமன்றம் எப்போது கண்டு கொள்ளப் போகிறது?
Comments