சிறிலங்கா அரசு அமைத்துள்ளவை நலன்புரி நிலையங்களா? இன அழிப்பு முகாம்களா?: செ.கஜேந்திரன் கேள்வி

வவுனியாவில் சிறிலங்கா அரசாங்கம் அமைத்துள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களில், தெரிவு செய்யப்பட்ட இளம் பெண்கள் விசாரணைக்கு என இரகசிய காவல்துறையினரால் அழைத்து செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை ஆர்வலருமான செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படையினரின் தாக்குதல்களுக்கு அஞ்சி வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து வெளியேறியோர் நலன்புரி நிலையங்களில் குடும்பம் குடும்பமாக தங்க அனுமதிக்கப்படாது, 16 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள், பெண்கள் தனித்தனி முகாங்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

பின்னர் மேலதிக விசாரணைக்காக வேறு இடங்களுக்கு படையினரால் அழைத்து செல்லப்படுவதாக உறவினர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

அவ்வாறு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள ஆண்களில் பலர் கொல்லப்பட்டு காடுகளுக்குள் புதைக்கப்படுகின்றனர் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் வவுனியாவில் உள்ள மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் கூட முறையிட முடியாது உள்ளதாகவும் செ.கஜேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, திருமணம் முடித்த இளம் பெண்கள் கணவருடனும், ஆண்கள் மனைவிமாருடனும் தங்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும், தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குள்ளேயே அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் நேரில் சென்று பார்வையிட்ட கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அதேபோன்று, 16 வயதில் இருந்து திருமணம் முடிக்காத இளம் ஆண்களும் பெண்களும் பெற்றோருடன் தங்க அனுமதிக்கப்படாது தனியாக அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளையில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் இவ்வாறு அடிமைகள் போன்று தங்க வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவநாதன் கிசோர், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் முகாம்களுக்குச் சென்று மக்களை பார்வையிடுவதற்கு தங்களுக்கு அனுமதி வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன், வவுனியாவில் உள்ள உறவினர்களுக்கும் முகாம்களுக்கு சென்று பார்வையிட அனுமதிக்குமாறும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கொழும்பில் இருந்து செல்லும் ஊடகவியலாளர்களுக்கும் இராஜதந்திரிகளுக்கும் காண்பிப்பதற்காக மட்டும் சில முகாம்கள் நன்றாக பராமரிக்கப்படுகின்றன. அந்த முகாம்களில் வயோதிபர்களும் சிறுவர்களுமே அதிகமாக காணப்படுகின்றனர்.

அவற்றை பார்த்து விட்டுத்தான் சில இராஜதந்திரிகள் அரசாங்கத்தை பாராட்டுகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அரச பிரதிநிதிகளுடன் செல்லாது சுயாதீனமாக சென்று பார்வையிடுமாறு அனைத்துலக ஊடகவியலாளர்களுக்கும் இராஜதந்திரிகளுக்கும் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவ்வாறு பார்வையிடும் போதுதான் உண்மை நிலை தெரியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள பெண்களின் உறவினர்களை சந்திக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளையில் வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள பெண்கள் விசாரணைக்கு என அழைத்து செல்லப்பட்டு படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றமை; இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகின்றமை தொடர்பான முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு கிடைத்தபோதும் அவர்கள் அது குறித்து தகவல் எதுவும் வெளியிடுவதில்லை என கொழும்பில் உள்ள மனித உரிமை சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Comments