புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகளே மற்றும் தமிழக மக்களே, வன்னி மக்களுக்கான அவசர உணவு மருத்துவ உதவி கோரல்

பேரவலத்தை சந்தித்து நிற்கும் மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வளங்களை உடனடியாக அனுப்பிவைப்பதன் மூலம் எமது மக்களின் உயிர்காப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டி நிற்கின்றோம் என வன்னி மக்கள் நலன் பேணும் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

வன்னி மக்கள் நலன் பேணும் அமைப்பு
மாத்தளன்
முல்லைத்தீவு
05-03-2009

அன்பிற்குரிய புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகளே மற்றும் தமிழக மக்களே, வன்னி மக்களுக்கான அவசர உணவு மருத்துவ உதவி கோரல்

21ம் நூற்றாண்டில் இப்படியொரு கொடூர மனிதப் படுகொலைகளா என மனித சமூகம் வெட்கித் தலைகுனியக் கூடிய அளவில் சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பு இருக்கின்றது. இது குறித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தீவிர எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் இது பற்றி சர்வதேச நாடுகளோ அல்லது ஐநாவோ பாராமுகமாக இருக்கிறது என்பதால் வன்னி மக்கள் நலன் பேணும் அமைப்பு தங்களுக்கு அவசரமான வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.
கடந்த இரு மாதங்களாக சிறிலங்கா அரச படைகளால் 2500 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும் நாலாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்தும் உள்ளனர். இது ஒரு அப்பட்டமான இன அழிப்பு என்ற போதும் ஐநா கண்டு கொள்ளாமை ஐநா மீது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

நாங்கள் உணவு மருந்து உறையுள் என அடிப்படை வசதிகள் அற்று மனித வாழ்வியலுக்கு பொருந்தாத வாழ்வை வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். சிறிலங்கா அரசாங்கத்தின் தொடர்ச்சியான தமிழின அழிப்புப் போர் காரணமாக வன்னியில் வாழும் சுமார் நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களாகிய நாங்கள் உணவு மருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி மாபெரும் மனித பேரவலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

இது குறித்து நாங்கள் சர்வதேச சமூகத்திற்கு முறையிட்ட போதும் இது தொடர்பாக எங்களுக்கு எதுவித உதவிகளும் கிடைக்கவில்லை என்பது எங்களுக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் அளிப்பதாக உள்ளது. இந்நிலை நீடித்தால் எமது மக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டும் பட்டினிச் சாவை எதிர்கொள்ளவும் நேரிடும். இவ்வாறான சூழ்நிலையில் ஐநாவின் துணை அமைப்புக்கள் எங்களுக்கு துணையிருக்கும் என எண்ணினோம். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. இந்நிலையில் ஐநா எங்களை கைவிட்டுவிட்டதாகவே நாங்கள் கருதுகின்றோம்.
இவ்வேளையில் வன்னி மக்களின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும். எமது மக்கள் பலவழிகளிலும் சிறிலங்கா அரசால் கொல்லப்பபடுவதை உலகம் மௌனமாக அனுமதிப்பது போல் உணர்கின்றோம்.

இவ்வாறான சூம்நிலையை முறியடிக்கக் கூடிய வல்லமையை புலம்பெயர் வாழ் எம் தமிழ் உறவுகளுக்கு இருப்பதாகவே உறுதியாக நாங்கள் நம்புகின்றோம்.
தற்போது வன்னியில் உணவு மருந்து கையிருப்பு முற்றாகத் தீர்ந்துபோயுள்ளது. இதுவரை 11பேர் பட்டினிச் சாவை அடைந்துள்ளனர். இத்தொகை மேலும் அதிகரிக்கக் கூடிய அபாயம் தோன்றியுள்ளது.

இவ்வாறான பேரவலத்தை சந்தித்து நிற்கும் மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வளங்களை உடனடியாக அனுப்பிவைப்பதன் மூலம் எமது மக்களின் உயிர்காப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டி நிற்கின்றோம்.

நன்றி

தலைவர்
P. கனகலிங்கம்

Comments